Thursday, 24 March 2016

பகவானே எல்லாம் உன் சித்தம்

No comments


பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.
அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.

துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.

" என்ன கிருஷ்ணா...சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...
ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"
என்றான் அர்ஜுனன்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.
்"சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.
உடன் அர்ஜுனனைப் பார்த்து,
" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.
ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன்.
தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.
இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்
"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி
" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.
நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்....

Wednesday, 16 March 2016

யார் பிராமணன்

No comments

விருத்தாசுரன் என்ற அரக்கன் இந்திரலோகத்தில் நுழைந்து அங்கிருந்தவர்களையெல்லாம் கொடூ ரமாகத் தாக்கத் தொடங்கினான். அவனுடைய தாக்குதலைக் கண்டு பயந்த அனைவரும், இந்திரனிடம் சென்று, தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றனர். இந்திரன் தனது படையுடன் சென்று விருத்தாசுரனை எதிர்த்துப் போரிட்டான். விருத்தாசுரனின் அசுரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இந்திரன், அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து வெளியேறினான். மேலும் விருத்தாசுரன் தன்னைக் கண்டுபிடித்து அழித்து விடுவானோ என்று பயந்து, தாமரைத் தண்டு ஒன்றினுள் சென்று மறைந்து கொண்டான். பின்னர் அங்கிருந்தபடியே விருத்தாசுரனை எதிர்த்துப் போரிடுவதற்கான பலமும், வரமும் வேண்டி தவம் செய்யத் தொடங்கினான்.
இந்திரன் இல்லாததால் தேவலோகத்தை நிர்வகிக்க முடியாமல் போனது. எனவே தற்காலிகமாக ஒரு இந்திரனைத் தேர்வு செய்ய தேவர்கள் முடிவு செய்தனர். ‘இந்திரப் பதவியில் அமர்ந்தால், விருத்தாசுரன் நம்மை அழித்து விடுவான்’ என்கிற பயத்தால் பலரும், அந்தப் பதவியை ஏற்க முன்வரவில்லை.
இந்த நிலையில் பூலோகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வந்த நகுசன் என்ற மன்னனை, இந்திரப் பதவியில் அமர்த்த தேவர்கள் முடிவு செய்தனர். நகுசனின் ஆட்சியில் மக்களும், நாடும் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் அனைவரும் எந்தக் கவலையுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதுவே தேவர்கள் அவனைத் தேர்வு செய்யக் காரணம். நகுசனிடம் சென்று தேவர்கள் தங்கள் கோரிக்கையை கூறினர். நகுசனும், தேவர்கள் விருப்பப்படி இந்திரப் பதவியை ஏற்றுக் கொண்டான்.
அந்தப் பதவியில் அமர்ந்ததும், அவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போயின. இந்திரப் பதவி யின் பெயரிலான கர்வமும், பேராசையும் நகுசனை ஆட்டிப்படைத்தது. இந்திரலோகத்தில் இருக்கும் அனைத்துச் செல்வங்களும், பொருட்களும் தனக்குரியது என்று உரிமை கொண்டாடினான். அது மட்டுமின்றி அங்கிருக்கும் நடன மங்கைகளும், இந்தி ராணியும் கூட தனக்கே சொந்தமானவர்கள் என்றான்.
இதனால் கவலையடைந்த இந்திராணி, தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று, நகுசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள். தேவகுரு, நகுசனைத் தனியாக அழைத்து, அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அவனில்லை.
அடுத்த நாள் தன்னைத் தேடி வந்த இந்திராணியிடம், ‘இனி நகுசன் உன்னைத் தேடி வரும் பொழுது, நீ அவனை ஏற்றுக் கொள்ள எந்த மறுப்பும் தெரிவிக்காதே!. இந்திரலோகத்தில் இருக்கும் குறு முனிவர்களால் செய்யப்பட்ட பல்லக்கில், அவர்கள் உன்னைச் சுமந்து வந்தால், நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பி விடு. அதன் பிறகு, உனக்கு அவனால் எந்தத் தொல்லையும் இருக்காது’ என்று தேவகுரு சொல்லி அனுப்பினார்.
நகுசன், இந்திராணியைத் தேடிச் சென்ற போது, அவளும் தேவகுரு சொன்னதைச் சொல்லி அனுப்பினாள். நகுசன், குறு முனிவர்களைத் தேடிச் சென்று, தன்னைப் பல்லக்கில் அமர வைத்து, இந்திராணி இருக்கும் இடத்துக்குச் சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். அவன் இந்திரப் பதவியில் இருப்பதால், முனிவர்களான அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல், அவனை அந்தப் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் சென்றனர்.
அப்படித் தூக்கிச் செல்லும் வழியில், நகுசன் அவர்களிடம் ‘வேகமாக, வேகமாக’ என்று பொருள் தரும் வகையில், சமஸ்கிருத வார்த்தையான ‘சர்ப்ப, சர்ப்ப’ என்று சொல்லி விரட்டிக் கொண்டே இருந்தான். அந்தப் பல்லக்கைச் சுமந்து சென்ற முனிவர்களில் ஒருவரான அகத்தியருக்கு அது எரிச்சலைத் தந்தது.
கோபமடைந்த அகத்தியர், நகுசனைப் பார்த்து, ‘எங்களைச் சர்ப்ப, சர்ப்ப என்று விரட்டிய நீ சர்ப்பமாக (பாம்பாக) மாறிப் பூலோகத்தில் இருக்கும் காட்டில் அலைந்து திரிந்து கஷ்டப்படு’ என்று சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்த நகுசன் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி, தான் தெரியாமல் செய்த தவறை மன்னித்துச் சாபத்திலிருந்து, விமோசனம் தந்தருளும்படி வேண்டினான்.
அகத்தியர் கோபம் குறைந்து, ‘நகுசனே, நீ பூலோகத்தில் மலைப்பாம்பாக வாழ்ந்து வரும் காலத்தில், வனவாழ்க்கை மேற்கொள்ளும் பாண்டவர்களில் ஒருவரான பீமன் உன்னிடம் மாட்டிக் கொள்வான். அவனை உன்னிடமிருந்து மீட்பதற்காக அவனுடைய சகோதரன் ஒருவன் வருவான். அவன் நீ கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்வான். அப்போது, உனக்கான எனது சாபம் நீங்கும்’ என்றார்.
விமோசனம்
முனிவரின் சாபத்தால் பூலோகம் வந்த நகுசன், அஜகரம் என்கிற பெயரில் மலைப்பாம்பாக மாறினான். அவனுடைய பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போயின. அந்த மலைப்பாம்பு அங்கிருந்த மலைக்குகை ஒன்றைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டது. அந்தக் காட்டிற்குள் இருந்த பறவைகளும், விலங்குகளும் அந்த மலைப்பாம்பிற்கு இரையாகிக் கொண்டிருந்தன. இப்படிப் பல ஆண்டுகள் கடந்து போய் விட்டன.
இந்நிலையில், பாண்டவர்கள் தங்களின் வனவாழ்க்கைக்காக அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு நாள் பாண்டவர்களில் ஒருவரான பீமன் மட்டும் காட்டுக்குள் தனியாகச் சென்று பல விலங்குகளை வேட்டையாடினான். மலைப்பாம்பு வசித்த குகையின் அருகில் அவன் சென்றபோது, அது அவனைச் சுற்றிவளைத்துக் கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் பீமனால் அதன் பிடியில் இருந்து விடுபடமுடியவில்லை.
மலைப்பாம்பு பீமனை விழுங்க முயன்றபோது, அதற்கு தன்னுடைய முந்தைய வாழ்வும், சாபமும் நினைவுக்கு வந்தது. இந்த நிலையில் காட்டிற்குள் சென்ற தம்பியைக் காணாததால், அவனைத் தேடி யுதிஷ்டிரர் காட்டுக்குள் வந்தார். அப்போது மலைப்பாம்பிடம் பிடிபட்டிருக்கும் தன் தம்பியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
யுதிஷ்டிரர் அந்த மலைப்பாம்பிடம், ‘பாம்பே! உன் பசிக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன். என் சகோதரனை உன் பிடியிலிருந்து விட்டு விடு’ என்று கேட்டார்.
‘நீ கொண்டு வந்து கொடுக்கும் உணவு எதுவும் எனக்குத் தேவையில்லை... நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் போதும்... நான், உன் சகோதரனை விட்டு விடுகிறேன். சரியான பதில்களைச் சொல்லாவிட்டால் உன் சகோதரனை மட்டுமில்லாமல், உன்னையும் சேர்த்து எனக்கு இரையாக்கிக் கொள்வேன்’ என்றது மலைப்பாம்பு.
யுதிஷ்டிரர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் மலைப்பாம்பு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தார். அவரது பதில்களால் மகிழ்ந்த மலைப்பாம்பு, பீமனை விடுவித்தது. மேலும் மலைப்பாம்பு சாப விமோசனம் பெற்று நகுசனாக சுய உருவம் பெற்றான். அவன் யுதிஷ்டிரரை வணங்கி, இந்திரலோகம் சென்றடைந்தான்.
பதவி ஒன்று கிடைக்கும் போது, அப்பதவியின் மதிப்பை உணர்ந்து, பணிவுடன் நடந்து நற்பெயரைப் பெற முயல வேண்டும். அதை விடுத்துப் பதவியால் கிடைத்த பெருமையை அதிகாரம், ஆணவம் கொண்டு செயல்பட்டுச் சிறுமையாக நடந்து கொண்டால், அதற்கான தண்டனையை விரைவில் அடைய நேரிடும் என்பதை நகு சனுக்குக் கிடைத்த சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

நற்செயலால் அமையும் நற்குணங்கள்

மலைப்பாம்பு கேட்ட கேள்விகளுக்கு, யுதிஷ்டிரர் சரியான பதில்களை அளித்தார். அவரிடம் மலைப்பாம்பு, 

‘யார் பிராமணன்? அவனை அறிவது எப்படி?’ என்று கேட்டது.

‘உண்மை, இரக்கம், பொறுமை, நல்ல நடத்தை, துன்புறுத்தலை முழுமையாக விலக்குதல், புலனடக்கம், கருணை போன்ற நற்குணங்களைக் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்தவர்களே அதை அறிந்து அடைய முடியும். அதை அறிவதால் ஒருவன் முழுமை அடைகிறான்’ என்றார் யுதிஷ்டிரர்.

‘நீ சொல்லும் குணங்கள் அனைத்தும் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவனும் பிராமணனா? பிரம்மம் என்பது சுக துக்கங்கள் இல்லாதது என்றால், சுக துக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே...?’ என்று கேள்வியை தொடுத்தது மலைப்பாம்பு.

அதற்கு யுதிஷ்டிரர், ‘நான் சொன்ன குணங்கள் அனைத்தும் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால், அவன் சூத்திரன் அல்லன். இந்தக் குணங்கள் ஒரு பிராமணனிடம் இல்லையென்றால், அவன் பிராமணனும் இல்லை. இந்தக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் மனிதன் யாராக இருந்தாலும் அவன் பிராமணன் ஆகிறான். இந்த குணங்கள் இல்லாத அனைவரும் சூத்திரனாகிறார்கள். சுக துக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது, கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் வெப்பமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ, அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுக துக்கங்கள் எதுவும் இல்லை’ என்றார்.

‘குணங்களே பிராமணனைத் தீர்மானிக்கும் என்றால், இந்த குணங்கள் இல்லாத பிராமணனின் பிறப்பு முக்கியமற்று போய்விடுமே’ என்றது மலைப்பாம்பு.

‘பல குணங்கள் கலந்துவிட்ட இந்த காலத்தில் பிறப்பால் பிராமணனைக் காண்பது கஷ்டம். எல்லோரும் பிறப்பில் சூத்திரர்களே. சில நற்செயல்களாலும், வேதம் படிப்பதாலும் ஒருவன் பிராமணனாகிறான். அனைத்து நற்செயல்கள் செய்தும், வேதம் படித்தும் அவனால் மேற்சொன்ன இந்த குணங்களைக் கடைப்பிடிக்க இயலாவிட்டால், அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்து கொள்ள வேண்டும். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இதுதான். தன் நற்செயல்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவன் மட்டுமே பிராமணன்’ என்றார் யுதிஷ்டிரர்.

Tuesday, 8 March 2016

எல்லையற்றவனுக்கு ஆயிரம் நாமம்

No comments
ஆண்டவனுடைய 'அனந்த-கல்யாண-குணங்களை', அதாவது, அவனுடைய எல்லையற்ற  பண்புகளை, பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே விஷ்ணு சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட தோத்திரம். ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நற்குணத்தைக் காட்டும். சில பெயர்கள் அக்குணம் இருப்பதாலேயே தோன்றக்கூடிய அல்லது தோன்றிய பெயர்கள். இப்பெயர்களின் முழு உட்கருத்தையும் புரிந்துகொள்வதற்கு, ஏதாவதொரு பரம்பரை வழி வந்த வேதாந்த நுணுக்கங்கள் சில நமக்குத் தெரிதல் வேண்டியிருக்கலாம். உண்மையில் ஆண்டவன் எல்லை இல்லா ஆனந்தப் பெருங்கடல் அதனால் எந்தப் பெயர் கொண்டும் அவனை அழைக்கலாம். இவ்வாயிரம் பெயர்களை ஒருவன் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் வண்ணமே அதனுடைய ஆழ்கருத்துகளில் திளைத்து இச்சுவை தவிர வேறு எச்சுவையும் வேண்டேன் என்று சொல்லக்கூடிய பக்குவம் கிடைத்துவிடும் என்பது சான்றோர்களின் நம்பிக்கை.நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிடவோ, பிராயச்சித்த கருமங்கள் செய்வதை விடவோ உயர்ந்தது, ஏனென்றால், அவையெல்லாம் பாவங்களை போக்குகின்றன என்பதுதான் மதநூல்களின் தீர்மானம்; ஆனால் நாமங்களை உச்சரிப்பதால், பாவம் புரியத் தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும் என்பது நாம உச்சரிப்பின் பெருமை.



எல்லையற்றவனுக்கு ஆயிரம் நாமம் போதுமா

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமமும் சீரடி பாபாவும்

No comments



ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், ஷீரடி சாய்பாபாவுக்கு நிகழ்த்திய அற்புதம் எண்ணற்ற அற்புதங்களை தன் பக்தர்களின் நலனுக்காக நடத்தி காட்டியவர் மகான் ஷீரடி சாய்பாபா. பக்தர்களின் கர்மாக்களை போக்கும் நம் ஷீரடி சாய்பாபாவுக்கு ஒருநாள் நெஞ்சுவலி ஏற்பட்டது. தமது நெஞ்சுவலி எந்த மருந்தால் நீங்கியது என்பதை பற்றி சாய்பாபா தன் பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதை பற்றி பார்ப்போம். ஒருநாள் இராமதாஸர் என்பவர் ஷீரடி சாய்பாபாவை பார்க்க வந்திருந்தார். அவர் எப்போதும் விஷ்ணு சஹஸ்ரநாமம், இராமாயணம் போன்ற நூல்களை கையோடு எடுத்து வருவார். அவரை விட்டு என்றும் அந்த புராண புத்தகங்கள் பிரிந்ததில்லை. எங்கு சென்றாலும் தம் செல்ல பிள்ளைகளைபோல அந்த நூல்களையும் தம்முடன் எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்டவர் இராமதாஸர். ஒரு சமயம் சாய்பாபா இராமதாஸரிடம், ”எனக்கு வயிற்று வலியாக இருக்கிறது இராம். நீ, நான் சொல்லும் மருந்தை வாங்கி, அதை கஷாயம் செய்து எடுத்து வா” என்றார். சாய்பாபாவின் கட்டளையை ஏற்று, அவர் கையில் இருந்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம நூலை அங்கேயே வைத்துவிட்டு, பாபா சொன்ன சூரணத்தை வாங்கி, அதை கஷாயம் செய்து கொண்டு வர சென்றார் இராமதாஸர். இராமதாஸர் வைத்துவிட்டு சென்ற ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம புத்தகத்தை எடுத்த பாபா, அதை ஷாமாவிடம் கொடுத்து, “ஷாமா..இந்தா… இது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம். இதை நீ படி. இந்த புத்தகத்தையும் நீயே வைத்துக்கொள். இந்த நூலுக்கு ஒரு சக்தி இருக்கிறது. ஒருநாள் எனக்கு நெஞ்சுவலி இருந்தபோது, இந்த புத்தகத்தை என் மார்போடு அணைத்தப்படி உறங்கினேன். என் நெஞ்சுவலி நீங்கியது. இதை நீயே வைத்துக்கொண்டு தினமும் படித்து வா. மனதில் மகிழ்ச்சி எழும். ஆற்றல் கிடைக்கும்.” என்றார் ஷாமாவிடம் சாய்பாபா. இப்படி நோய் தீர்க்கும் ஆற்றல் பல மந்திரங்களுக்கு இருந்தாலும், அதில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமமும் விசேஷமானது. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க அனைத்து வியாதிகளும் நீங்கும் அல்லது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்நாமத்தை வீட்டில் ஒலிக்கச் செய்தாலும் அந்த “மந்திர ஒலி அலைகள்” வீட்டுக்கும் – அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும் நன்மைகளை தந்திடும்.!








Saturday, 23 January 2016

சர்வம் ப்ரமமயம்

No comments

எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருவருளுடன் இந்த சாய் நிகேதன் என்ற சத்சங்கம் தொடங்கப்படுகிறது. தைபூசத்திருநாளில்  உண்டான இந்த சத்சங்கத்தில் இணைந்து அனைவரும் சற்குரு  நாதரின் அருள் பெறுக. இணையும் அனைவருக்கும் சற்குருவின் அருளால் வளமும் நலமும் பெறுக.