சீரடிக்கு ஸாயிபாபாவின் முதல் விஜயம்
ஞானிகளின் வருகை
சீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம்
ஸாயிபாபாவின் தோற்றம்
முந்தைய அத்தியாயத்தில், ‘ஸாயி ஸத்சரித்திரத்தை’ எழுதத் தூண்டிய சூழ்நிலைகளை விவரித்தேன். இப்போது சீர்டிக்கு ஸாயி பாபாவின் முதல் விஜயம் பற்றிக் கூறுகிறேன்.
ஞானிகளின் வருகை
கீதையில் கண்ணபிரான் கூறுகிறார். (அத் IV 7-8) “தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் என்னை நானே அவதரித்துக் கொள்கிறேன். நல்லோரைக் காத்துக் தீயோரை அழிக்க யுகந்தோறும் அவதரிக்கின்றேன். இதுவே பகவானின் அவதார நோக்கம். பகவானின் சார்பாக ரிஷிகளும், ஞானிகளும், இப்பூவுலகில், தக்க தருணத்தில் தோன்றி, அவதார நோக்கம் நிறைவேறுமுகமாகத் தமக்கே உரித்தான முறையில் உதவி செய்கிறார்கள் .உதாரணமாக இருமுறை பிறப்பவர் அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், தங்கள் கடமைகளைப் புறக்கணிக்கும் போதும், மேற்குலத்தவரின் உரிமைகளைத் தவறான முறையில் பறிக்கச் சூத்திரர்கள் முயலும் போது, ஆன்மஞான போதகர்கள் மதிக்கப்பட்டால் அவமதிக்கப்படும் போதும் தன்னைத் தான் (ஒவ்வொருவனும்) மெத்தப்படித்தவன் என்று எண்ணும் போதும், தடுக்கப்பட்ட ஆகாராதிகளையும், போதை தரும் குடிப்பொருளையும் ஜனங்கள் உட்கொள்ளும் பொழுதும், மதமென்னும் போர்வையினுள் மக்கள்
தகாத காரியங்களைச் செய்யும் போதும், பல்வேறு இனத்து மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் போதும், மறையவர் சந்தியாவந்தனம், மற்றும் தங்கள் மதப் பழக்க வழக்கங்களைச் செய்யத் தவறும் போதும், யோகிகள் தியானத்தைப் புறக்கணிக்கும் போதும், மனைவி, மக்கள், செல்வமே, தங்கள் கருத்துக்குரிய ஒன்றே ஒன்று என்று மக்கள் கருதத் தலைப்பட்டு முக்தி என்னும் உண்மை நெறியினின்று வழி தவறிப்போகும் பொழுதும், ஞானிகள் தோன்றவே செய்கிறார்கள். தங்கள் மொழி, செயல் வழிகளால் காரியங்களை நெறிப்படுத்துகிறார்கள். அவர்கள்
கலங்கரை விளக்கையொப்ப சேவை செய்து நமக்கு மெய்நெறியைக் காண்பிக்கிறார்கள். இவ்வாறாகப் பல ஞானிகள் நிவ்ருத்தி, ஞானதேவ், முக்தாபாய், நாமதேவ், கோரா, கோனாயி, ஏகநாத், துக்காராம், நரஹரி, நர்ஸிபாயி, ஸஜன்கஸாயி, ஸவதா, ராமதாஸ் மற்றும் பலர் பற்பல காலங்களில் மக்களுக்கு மெய் நெறியைக் காண்பிக்கத் தோன்றவே செய்தனர். இவ்வகையில் இறுதியாக சீர்டி ஸாயிபாபாவும் விஜயம் செய்தார்.
அஹமத்நகர ஜில்லாவில் உள்ள கோதாவரி ஆற்றங்கரை மிகவும் அதிருஷ்டம் படைத்ததாகும். ஏனெனில் அனேக ஞானிகள் ஈன்று புரந்தும், அடைக்கலம் கொடுத்தும் இருக்கிறது. அவர்களுள் முக்கியமானவர் ஞானேச்வர், சீர்டியும், அஹமத்நகர ஜில்லாவில் உள்ள கோபர்காங்வ் தாலுக்காவில் தான் இருக்கிறது. கோபார்காங்வில் உள்ள கோதாவரி ஆற்றைக் கடந்தவுடன் நீங்கள் சீர்டிக்குள்ள வழியை அடைகிறீர்கள். அவ்விடத்தினின்று சீர்டி தெரிகிறது. கிருஷ்ணா ஆற்றங்கரையிலுள்ள கங்காபூர், நரஸிம்ஹவாடி, ஓளதும்பர் போன்ற மற்ற புனித க்ஷேத்திரங்களைப் போன்று சீர்டியும் அறிமுகமானதும் புகழ் பெற்றதும் ஆகும். தாமாஜி செழித்து விளங்கியதும், அசீர்வதித்ததுமான பண்டரீபுரத்துக்கு அருகில் உள்ள மங்கல் வேடாவைப் போன்றும் ஸமர்த்த ராம்தாஸ் ஸஜ்ஜனகட்டில் விளங்கியதைப் போன்றும் நரஸிம்ஹ ஸரஸ்வதி நரோபாச்சிவாடியில் விளங்கியதைப் போன்றும்,ஸாயீநாத் சீர்டியில் செழித்து ,விளங்கி அதை வாழ்த்தினார்.
ஸாயிபாபாவின்
ஸத்வ குணரூபம்
ஸாயிபாபாவினால் சீர்டி முக்கியத்துவம் பெற்றது. ஸாயிபாபா எத்தகைய பண்புள்ளவர் என்பதைக் காண்போம். கடப்பதற்கு மிகவும் கடினமான இகவாழ்வை அவர் வென்றார். சாந்தி அல்லது மன அமைதியே அவரின் அணிகலன். விவேகத்தின் பெட்டகம். அவர் வைணவ அடியார்களின் தாயகமாவார். அவர் கர்ணனையொப்ப வள்ளல்களுள் எல்லாம் தலை சிறந்த வள்ளலாக விளங்கினார். சாராம்சம் அனைத்தினின்றும் பெற்ற சாராம்சமாகவும் இருந்தார். அவருக்கு அழியும் பொருள்கள் மீது ஆசை இல்லை. .அவருடைய ஒரே ஈடுபாடான ஆன்ம உணர்விலேயே எப்போதும் கவரப்பட்டார். இவ்வுலகப் பொருள்களிலோ அல்லது இவ்வுலகத்தைக் கடந்தவற்றிலோ அவர் மகிழ்ச்சியடையவில்லை .அவரின் அந்தரங்கம் (உள்ளம்) ஒரு கண்ணாடி போன்று தூய்மையானது. அவரின் மொழிகள் எப்போதும் அமுதத்தைப் பெய்தன. .பணக்காரர்,ஏழை யாவரும் அவருக்கு ஒன்றே. புகழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை அவர் அறிந்திருக்கவில்லை அல்லது மதிக்கவில்லை. அவரே எல்லா உயிர்கட்கும் இறைவன் ஆவார்.அவர் சரளமாகப் பேசி அனைவருடனும் பழகினார். நடிப்பையே தொழிலாகக் கொண்ட குமரிகளின் நடிப்பையும் நாட்டியத்தையும் கண்டார். கஜல் பாடல்களைக் (தெம்மாங்கு) கேட்டார். ஆயினும் இம்மியளவும் சமாதி நிலையிலிருந்து அவர் விலகவில்லை. அல்லாவின் நாமம் எப்போதும் அவர் நாவில் இருந்தது. இவ்வுலகம் விழித்திருக்கும் போது அவர் தூங்கினார். இவ்வுலகம் தூங்கும் போது அவர் சுறுசுறுப்பாய் இருந்தார்.ஆழ்ந்த கடலையொப்ப அவர் மனம் அமைதியாய் இருந்தது. அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க இயலாததாய் இருந்தது.மற்றும் அவர் செயற்கைகள் நிச்சயமாகத் தீர்க்கப்பட இயலாததாய் இருந்தது. அவர் ஓரிடத்தில் வாழ்ந்தார். எனினும் இவ்வுலகின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவர் அறிவார். அவரின் தர்பார் கவர்ச்சிகரமானது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான கதைகளைத் திருவாய் மலர்ந்தார். ஆனாலும் மெளன விரதத்திலிருந்து இம்மியளவும் பிறழவில்லை. மசூதியில் உள்ள சுவரின் மீது அவர் எப்போதும் சாய்ந்து கொண்டிருந்தார். அல்லது காலை, மதியம், மாலை இவற்றில் லெண்டி (தோட்டம்) சாவடி (சயன அறை) இவற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ஆயினும் எப்போதும் ஆன்ம உணர்வில் கருத்துள்ளவராகவே இருப்பார்.சித்தராயினும் சாதகரைப் போன்று நடித்தார். அவர் எளிமையாகவும், தாழ்வாகவும் அகங்காரமற்றும் இருந்து எல்லோரையும் மகிழ்வித்தார். இவரே ஸாயிபாபா, சீர்டி மண் ஸாயிபாபாவின் திருவடிகளால் மிதிபட்டதால், அசாதாரண முக்கியத்துவம் பெற்றது. ஆலந்தியை ஞானேச்வரும் பைடாணை ஏகாநாதரும் உயர்த்தியதை யொப்ப சீர்டியைச் ஸாயி உயர்த்தினார்.
சீர்டியின் புல்லின் அரும்புகளும் ,கற்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைகள். ஏனெனில், அவைகள் எளிதாக ஸாயியின் திருவடிகளை முத்தமிட முடியும்.திருவடித் தூளிகளை தமது தலையில் ஏற்றுக்கொள்ள முடியும். நமது அடியவர்களுக்கு சீர்டி மற்றும் ஒரு பண்டரீபுரம் ,ஜகந்நாதம்,துவாரகை,காசி, ராமேச்வரம், பத்ரி,கேதாரம், நாசிக், திரியம்பகேச்வரம், உஜ்ஜயினி, மஹாகாலீச்வரர் அல்லது மஹாபலீச்வர கோகர்ணம் போன்று ஆகியது. சீர்டியில் ஸாயிபாபாவுடன் தொடர்பு கொள்வதே நமது வேதமும், தந்திரமும்,அஃது இவ்வுலக உணர்வைத் தணித்து , தன்னுணர்வை எளிதில் வழங்குகிறது. ஸாயிபாபாவின் தரிசனமே நமது யோகசாதனம். அவருடன் பேசுவது நமது பாவங்களைக் கழித்துறச் செய்யும். அவரின் திருவடிகளுக்கு நறுமண எண்ணெய் தேய்ப்பதே நமது திரிவேணிப் பிரயாகை நீராடல், அவரின் திருவடித் தீர்த்ததை அருந்துவதனால் நமது ஆசைகள் அற்றுவிடும் .அவரின் ஆணையே வேதம். அவர் ‘உதி’ (திருநீற்றுச்சாம்பல்)யையும் பிரஸாதத்தையும் உண்ணலே எல்லாவற்றையும் தூய்மை ஆக்கும். நமக்கு ஆறுதல் அளித்த அவரே நமது கிருஷ்ணர்,ராமர்,அவரே நமது பரப்பிரம்மம் (பரிபூரணத்துவம்). அவர் தாமே மாறுபட்ட இருவினைகளுக்கு அப்பாற்பட்டவராய் தாழ்த்தப்படாமலும்,உயர்த்தப்படாமலும் இருந்தார். அவர் எப்போதும் ஆன்மத்தில் ஸத் – சித்து – ஆனந்தமாகக் கவரப்பட்டார். அவரின் இருப்பிடம் சீர்டியானாலும், அவரின் செயல் இலக்குகள் பரந்து பஞ்சாப், கல்கத்தா, வடஇந்தியா, குஜராத், தக்காணம், கன்னடம் ஆகியவரைக்கும் விரிந்திருந்தது. இவ்வாறாகத் திக்கட்டும் நெடுந்தூரம் ஸாயியின் புகழ் பரவி எல்லாப் பகுதிகளிலிருந்தும் அடியவர் திருக்கூட்டம் அவரின் தரிசனத்தையும் அசீர்வாதத்தையும் பெறுவதற்காக வந்தது. அவருடைய தரிசனம் ஒன்றினாலேயே மக்களின் மனம் சுத்தமாக இருப்பினும், இல்லாவிட்டாலும் கணத்தில் அமைதியடையும். பண்டரீபுர விட்டல் ரகுமாயியை சேவித்த அதே ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அவர்கள் பெற்றார்கள். இது மிகையாகாது. இது போன்ற ஓர் அடியவர் சொல்வதை எண்ணுங்கள்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்...)

No comments :
Post a Comment