Monday, 5 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 1

No comments

சாந்த்பாடீல் பாபா சந்திப்பு




சென்ற அத்தியாயத்தில்  குறிப்பிட்டபடி நான் இப்போது முதலில் ஸாயிபாபா காணாமற்போன பிறகு சீர்டிக்கு எங்ஙனம் திரும்பி வந்தார் என்பதை விவரிக்கிறேன்

நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஓளரங்கபாத் ஜில்லாவிலுள்ள தூப் என்கிற கிராமத்தில் சாந்த்பாடீல் என்ற வசதியுள்ள முகமதியப் பெருந்தகை ஒருவர் இருந்தார். அவர் ஓளரங்காபாத்துக்குப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு பெண் குதிரையைத் தொலைத்து விட்டார். இரண்டு மாதங்கள் பிரயாசையுடன் தேடினார். ஆனாலும் காணாமல் போன அக்குதிரையைப் பற்றிக் கொஞ்சமும் தகவல் பெற இயலவில்லை. ஏமாற்றத்துடன்  குதிரைச் சேணத்தை தன் தோளில் போட்டுக் கொண்டு ஓளரங்கபாத்திலிருந்து திருப்பிக் கொண்டிருந்தார். நாலரைக் காத தூரம் பிரயாணம் செய்த பின்னர் ஒரு மாமரத்தினடியில் வந்தார். அதன் அடியில் ஒரு ரத்ன (விசித்ர மனிதர்) உட்கார்ந்து இருந்தார். அவரது தலையில் ஒரு குல்லாய் இருந்தது. கஃப்னி என்னும் நீண்ட ஆடை தரித்திருந்தார். கமக்கட்டில் ஸட்கா என்னும் குட்டையான பருமனான ஒரு தடி வைத்திருந்தார்.

ஹூக்கா குடிப்பதற்குத் தயார் செய்து கொண்டிருந்தார். சாந்த்பாடீல் அவ்வழியே போவதைக் கண்டு அவரது தன்னிடத்திற்குக் கூப்பிட்டுப் புகை பிடிக்கவும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளவும் சொன்னார். அவ்விசித்ர மனிதர் அல்லது பக்கிரி குதிரைச் சேணத்தைப் பற்றி வினவினார். சாந்த்பாடீல் தனது தொலைந்து போன குதிரையில் மீதிருந்த சேணம் அது என்று கூறினார். அதற்கு அவர் அவரிடம் அருகாமையிலுள்ள சோலையொன்றில்  தேடும் படி கேட்டுக்கொண்டார். அவர் அங்கே சென்றார்.ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! அவர் தன்னுடைய குதிரையைக் கண்டுபிடித்துவிட்டார். அந்த பக்கிரி ஓர் சாதாரண மனிதரல்ல. ஆனால் ஓர் அவலியா (பெரும் ஞானி) என்று எண்ணினார். குதிரையுடன் பக்கிரியிடம் திரும்பி வந்தார். ஹூக்கா குடிப்பதற்குத் தயாராகியது. ஆனாலும் இரண்டு பொருட்கள்  தேவைப்பட்டன.(1)குழாயைப் பற்ற வைப்பதற்கு நெருப்பு,(2)சாபி (புகை இழுக்கப்படும் ஒரு துண்டுத் துணி)யை நனைப்பதற்கு வேண்டிய தண்ணீர். பக்கிரி தனது கத்தியை எடுத்து அதை வலிய நிலத்தில் நுழைத்தார். அதிலிருந்து எரியும் ஒரு நிலக்கரி நெருப்புத்  துண்டம்  வந்தது. அதை அவர் குழாய் வழி இட்டார். பிறகு தமது ஸட்காவைத் தரையில் அடித்தார்.  அவ்விடத்திலிருந்து நீர் கசியத் தொடங்கியது. சாபி நனைக்கப்பட்டது.

பிறகு பிழியப்பட்டுக் குழாயில் சுற்றப்பட்டது. இங்ஙனம் எல்லாம் முடிந்த பின்னர் பக்கிரி ஹூக்கா குடித்து விட்டு சாந்த் பாடீலுக்கும் புகை குடிக்கக் கொடுத்தார். இவற்றையெல்லாம் கண்ணுற்ற சாந்த்பாடீல்  வியப்புற்றார். பின்பு அவர் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து தனது விருந்தோம்பலை எற்றுக் கொள்ளும் படிச்சொன்னார். மறுநாள் அவர் பாடீல் வீட்டிற்குச் சென்று சிலநாள் தங்கியிருந்தார். பாடீல், தூப் கிராமத்தின் அதிகாரி. அவருடைய மனைவியின் சகோதரரது புதல்வன் கல்யாணம் செய்யப்படவிருந்தன. சீரடியிலிருந்து மணப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். எனவே சீரடிக்குப் புறப்படுவதற்கு பாடீல் ஆயத்தங்கள் செய்யத் துவங்கினார். பக்கிரியும் கல்யாண கோஷ்டியுடன்கூட வந்தார். கல்யாணமும் எவ்விதச் சிரமமும் இன்றி முடிவடைந்து. கோஷ்டியும் தூப்பிற்கு திரும்பியது, ஆனால் பக்கிரி மாத்திரம் சீர்டியிலேயே இருந்தார். பின்னர் அங்கேயே எப்போதும் இருந்தார்.

ஸ்ரீஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.


(தொடரும்...)



No comments :

Post a Comment