Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 5

மசூதி பழுபார்த்தல்:

கோபால் ராவ் குண்டிற்கு மற்றொரு முக்கிய எண்ணமும் உதித்தது.  உருஸ் அல்லது சந்தனக்கூடு விழாவை அவர் தொடக்கியதைப் போன்றே, மசூதியைத் தாம் ஒழுங்குபடுத்த வேண்டும் என எண்ணினார்.  எனவே பழுபார்க்கக் கற்களைச் சேகரித்து அதன் பக்கங்களைச் சமப்படுத்தவும் செய்தார்.  ஆனால் இப்பணி அவருக்கு அளிக்கப்பட்டதல்ல.  இது நானா சாஹேப் சாந்தோர்கருக்கும், தாழ்வாரத்தின் வேலை காகா சாஹேப் தீஷித்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  ஆனால் முதலில் பாபா, இவ்வேலைகளைச் செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்க மனமில்லாதவராய் இருந்தார்.  ஆனால் மஹல்ஸாபதி என்ற உள்ளூர் அடியவரின் குறுக்கீட்டினால் அவர்களுக்கு அனுமதி கிடைத்து.

மசூதியில் ஒரே இரவில் தாழ்வாரப்பணி முடிவடைந்ததும், பாபா தமது வழக்கமான ஆசனமான சாக்குத் துண்டை விட்டொழித்து தாம் அமர்வதற்கென ஒரு சிறு ஆசனம் அமைத்துக்கொண்டார்.  1911ல் சபாமண்டபம் பெரும் உழைப்புடனும், கடின முயற்சியுடனும் ஒழுங்குபடுத்தப்பட்டது.  மசூதிக்கு முன்னாள் இருந்த திறந்த வெளியானது சிறியதாகவும், அசௌகரியமுள்ளதாகவும் இருந்தது.  காகா சாஹேப் தீஷித் அதை விசாலப்படுத்தி அதற்கு மேற்கூரை போடவிரும்பினார்.  பெருஞ்செலவில் இரும்புத் தூண்கள், கம்பங்கள், துணிகள் முதலியவற்றை வரவழைத்து வேலையை ஆரம்பித்தார்.  இரவில் எல்லா அடியவர்களும் கடினமாக உழைத்து, கம்பங்களை ஊன்றினார்கள்.  ஆனால் மறுநாள் காலை சாயிபாபா சாவடியிலிருந்து திரும்பிவந்தபோது எல்லாவற்றையும் வேருடன் பிடுங்கி வெளியே எறிந்தார்.  ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது.  அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு கம்பத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அதை அசைத்து வெளியே எடுக்க ஆரம்பித்து, மற்றொரு கையால் தாத்யா பாடீலின் கழுத்தைப் பற்றினார்.  தாத்யாவின் முண்டாசை வலிந்து பற்றியிழுத்து ஒரு நெருப்புக் குச்சியைக் கொழுத்தி அதைப் பற்றவைத்துக் குழியில் தூக்கி எறிந்தார்.  அச்சமயத்தில் பாபாவின் கண்கள் எரியும் நெருப்புத் துண்டம் போலிருந்தன.  ஒருவருக்கும் அவரைப் பார்க்கும் தைரியம் இல்லை.  எல்லோரும் பயங்கரமாக அஞ்சினார்கள்.

பாபா தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து, அதை ஒரு புனித நிகழ்ச்சியின் நிவேதனம்போல் அங்கே விட்டெறிந்தார்.  தாத்யாவும் மிகவும் பயந்துபோனார்.  யாருக்கும் தாத்யாவுக்கு என்ன நிகழப்போகிறது என்பது தெரியவில்லை.  ஒருவருக்கும் தலையிடத் தைரியம் இல்லை.  பாபாவின் குஷ்டரோகி அடியவனான பாகோஜி ஷிண்டே என்பவன் கொஞ்சம் முன்னேறத் துணிந்தான்.  ஆனால் அவன் பாபாவால் தள்ளப்பட்டான்.  மாதவ்ராவுக்கும் அதைப்போன்ற மரியாதையே கிடைத்தது.  அவர் கற்களால் அடிக்கப்பட்டார்.  ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் பாபாவின் கோபம் தணிந்து குளிர்ந்தது.  கடைக்காரனிடம் ஆள் அனுப்பி பூவேலை செய்த ஒரு முண்டாசு வாங்கி வரச்செய்து, தாத்யாவுக்கு ஒரு சிறப்பான கௌரவம் செய்வதைப்போல் தாமே அவர் தலையில் கட்டிவிட்டார்.  பாபாவின் இவவினோதக் குணத்தைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டனர்.  அவ்வளவு வேகமாகப் பாபாவைக் கோபமடையச் செய்தது எது?  தாத்யா பாடீலுக்கு உதை கொடுக்கும்படி செய்தது எது? என்பதை அவர்கள் எல்லோரும் அறிந்துகொள்ள இயலவில்லை.  சிலவேளைகளில் பாபா மிகவும் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்தார்.  இனிமையான விஷயங்களை அன்புடன் பேசினார்.  பின்னர் உடனே சின்னப் பொய்க்காரணம் இருந்தோ, இல்லாமலோ கோபாவேசம் அடைந்தார்.  அத்தகைய பல சம்பவங்களை இங்கே கூறலாம்.  ஆனால் எனக்கு எதைச்சொல்வது, எதைவிடுவது என்று தெரியவில்லை.  எனவே அவைகளை எனக்கு தோன்றியபோது கூறுகிறேன்.

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஒரு முஹமதியரா, இந்துவா என்னும் வினா எடுத்துக்கொள்ளப்படும்.  அவரின் யோகப்பயிற்சி, சக்தி மற்றும் பல விஷயங்களும் விவரிக்கப்படும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 4

'உருஸ்'ஐ ராமநவமித் திருவிழாவாக மாற்றுதல்

இவ்வாறாக விஷயங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தன.  1912ஆம் ஆண்டுவரை இவ்விழா படிப்படியாக முக்கியத்துவம் அடைந்துவந்து பிறகு ஒரு மாறுதல் நிகழ்ந்தது.  அந்த ஆண்டு கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மர் (சாயி சகுணோபாசனா என்ற சிறு புத்தகத்தின் ஆசிரியர்), அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயுடன் திருவிழாவிற்கு வந்து முந்தைய தினம் தீஷித் வாதாவில் தங்கியிருந்தார்.  அவர் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டிருந்தபோது லக்ஷ்மண்ராவ் என்ற காகா மஹாஜனி, மசூதிக்குப் பூஜை சாமான்களுடன் போய்க்கொண்டு இருந்தார்.  அப்போது பீஷ்மாவுக்கு ஒரு புது எண்ணம் தோன்றியது.  அவர் காகாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்.

"ஷீர்டியில் 'உருஸ்' அல்லது 'சந்தனத் திருவிழா', ராமநவமியன்று கொண்டாடப்படும் உண்மைக்கு ஏதோ ஒரு தெய்வ ஏற்பாடு இருக்கிறது.  இந்துக்களுக்கு ராமநவமி தினம் மிகவும் முக்கியமானது.  பின்னர் ஏன் இந்த நாளில் ராமநவமிக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கக்கூடாது?"  காகா மஹாஜனி இக்கருத்தை விரும்பினார்.  பாபாவின் அனுமதியை இவ்விஷயத்தில் பெறுவது என முடிவுசெய்யப்பட்டது.  அத்திருவிழாவில் கீர்த்தனை செய்யும் (கடவுளின் புகழைப் பாடும்) ஹரிதாஸை(பாடகர்) எங்கனம் அடைவது என்பது முக்கியமான விஷயமாகும்.  ராமர் பிறந்ததைப் பற்றி தன்னுடைய பாடல்களான 'ராம அக்யன்' தயாராய் இருப்பதாகவும், தானே இக்கீர்த்தனைகளைப் பாடுவதாகவும் கூறி, பீஷ்மா இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.  காகா மஹாஜனி, அப்போது ஹார்மோனியம் வாசிக்கவேண்டும்.  ராதாகிருஷ்ணமாயியால் தயாரிக்கப்பட்ட சுண்ட்வடா(சர்க்கரை கலந்த இஞ்சிப்பொடி) பிரசாதமாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  பின்பு அவர்கள் பாபாவின் அனுமதியைப் பெறுவதற்குச் சென்றனர்.  அங்கு நடந்துகொண்டிருந்த எல்லாவற்றையும் அறிந்திருந்த பாபா, "வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது" என்று மஹாஜனியிடம் வினவினார்.  குழப்பமடைந்த மஹாஜனி கேள்வியின் அர்த்தத்தை அறியமுடியாமல் அமைதியாக இருந்தார்.  பின்னர் பாபா, பீஷ்மாவை அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டார்.

ராமநவமித் திருவிழா கொண்டாடுவதன் கருத்தை அவர் தெரிவித்துப் பாபாவின் அனுமதியைக் கோரினார்.  பாபாவும் உடனே அனுமதி கொடுத்தார்.  எல்லோரும் மகிழ்ச்சியுற்று ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத்தொடங்கினர்.  மறுநாள், மசூதி துணி ஜோடனையால் அலங்கரிக்கப்பட்டது.  ராதாகிருஷ்ணமாயியால் ஒரு தொட்டில் கொடுக்கப்பட்டது.  பாபாவின் ஆசனத்தின் முன்னர் அது வைக்கப்பட்டு நிகழ்சிகள் ஆரம்பமாயின.  பீஷ்மா கீர்த்தனைக்காக முன்னால் எழுந்து நின்றார்.  மஹாஜனி ஹார்மோனியம் வாசித்தார்.  மகாஜனியைக் கூப்பிடும்படி சாயிபாபா ஒரு ஆளை அனுப்பினார்.

பாபா நிகழ்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிப்பாரா என ஐயம் கொண்டு மஹாஜனி போகத் தயங்கிக்கொண்டிருந்தார்.  ஆனால் அவர் போனபின்பு பாபா அவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றும், தொட்டில் ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டார்.  அவர் (மஹாஜனி) ராமநவமித் திருவிழா தொடக்கப்படிருக்கிறது என்றும், தொட்டில் அதற்காக வைக்கப்படிருக்கிறது என்றும் கூறினார்.  அப்போது பாபா நிம்பாரிலிருந்து ஒரு மாலையை எடுத்து அவர் கழுத்திலிட்டு, பீஷ்மாவுக்கு மற்றொரு மாலையை அனுப்பினார்.  கீர்த்தனை துவங்கியது.  அது முடிவடைந்ததும் 'ஸ்ரீ ராமருக்கு ஜெயம்' என்ற கோஷம் வானைப் பிளந்தது.  குலால் என்ற சிகப்புப் பொடி வாத்திய கோஷத்திடையே சுற்றிலும் தூவப்பட்டது.  

எல்லோரும் பெருமகிழ்ச்சியுற்றிருக்கையில் ஒரு கர்ஜனை கேட்டது.  கண்டபடி தூவப்பட்ட சிகப்புப் பொடியானது பாபாவின் கண்களுக்குள் சென்றுவிட்டது.  பாபா கோபாவேசம் அடைந்து, பெருங்குரலில் திட்டவும், கடிந்துகொள்ளவும் ஆரம்பித்தார்.  இக்காட்சியால் மக்கள் பீதியடைந்து ஓட ஆரம்பித்தார்கள்.  பாபாவை நன்கு அறிந்த அவருடைய நெருங்கிய பக்தர்கள் பாபாவின் கடிந்துரைகளையும், திட்டல்களையும் வேஷமிடப்பட்ட ஆசீர்வாதங்கள் என்று எடுத்துக்கொண்டனர்.  

ராமர் அவதரித்ததும், இராவணனையும் - அஹங்காரம், கெட்ட எண்ணங்கள் முதலிய அவனுடைய அரக்கர்களையும் கொல்வதற்காக, பாபா கடுமையான கோபாவேஷம் அடைந்ததும் முறையே என அவர்கள் நினைத்தனர்.  மேலும் ஷீர்டியில் ஏதாவது ஒரு புதிய வேலை ஆரம்பிக்கப்படுமானால், பாபா கடுமையாக கோபம்கொள்வது வழக்கம்.  எனவே அவர்கள் அமைதியாய் இருந்தார்கள்.  பாபா, தமது தொட்டிலை உடைத்து விடுவார் என்று  ராதாகிருஷ்ணமாயி பயந்துபோய் மகாஜனிஜிடம் தொட்டிலை எடுத்து வந்துவிடும்படி கூறினாள்.  அவர் சென்று தொட்டிலைத் தளர்த்தி கழற்றப்போன சமயம், பாபா அவரிடம் சென்று தொட்டிலை அகற்றவேண்டாம் என்று கூறிவிட்டார்.  பின்னர் சற்று நேரத்தில் பாபா சாந்தமடைந்தார்.  பின்பு மகாபூஜை, ஆரத்தி உள்ளிட்ட அந்நாளைய நிகழ்சிகள் எல்லாம் நிறைவேறின.  பிறகு மகாஜனி, பாபாவிடம் தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதி கேட்டார்.  இன்னும் விழா முடியவில்லை எனக்கூறி பாபா மறுத்துவிட்டார்.  அடுத்த நாள் கீர்த்தனையும், கோபால்காலா விழாவும் நடைபெற்றன.  (கீர்த்தனைக்குப் பிறகு தயிரும், பொறி அரிசியும் கலந்த ஓர் மண்பானை உடைப்பதற்காகத் தொங்கவிடப்பட்டிருக்கும், கிருஷ்ண பரமாத்மா தன் நண்பர்களான கோபாலர்களுக்குச் செய்ததையொப்ப, அதனுள் இருப்பவை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்)  அதன் பின்னரே பாபா, தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதித்தார்.

இவ்வாறாக ராமநவமித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பகலில் இரண்டு கொடி ஊர்வலமும், இரவில் சந்தனக்கூடு ஊர்வலமும் வழக்கமான கோலாகலத்துடனும், அனைவரின் ஆராவாரத்துடனும் நல்லமுறையில் நடைபெற்றன.  இத்தருணத்திலிருந்து பாபாவின் உருஸ் விழாவானது, ராமநவமித் திருவிழாவாக மாற்றப்பட்டது.  

அடுத்த ஆண்டிலிருந்து (1913) ராமநவமியின் நிகழ்ச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன.  ராதாகிருஷ்ணமாயி சித்திரை முதல் தேதியிலிருந்து நாம சப்தாஹம் செய்ய ஆரம்பித்தாள்.  எல்லோரும் முறை வைத்துப் பங்கெடுத்துக்கொண்டனர்.  அவளும் சிலநாட்கள் அதிகாலையில் கலந்துகொண்டாள்.  நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ராமநவமி கொண்டாடப்படுவதால் ஹரிதாஸை(பாடகர்) பெரும் கஷ்டமானது மீண்டும் உணரப்பட்டது.  ஆனால் விழாவிற்கு ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குமுன் நவீன துகாராம் என்றறியப்பட்ட பாலபுவாமாலியைத் தற்செயலாக மகாஜனி சந்தித்தார்.  அவரை அவ்வாண்டு கீர்த்தனை புரியச்செய்தார்.  அடுத்த ஆண்டு (1914) சாதாரா ஜில்லா, பிர்ஹாட்ஸித்த கவடே நகரைச் சேர்ந்த பாலபுபா சாதார்கர் என்பவர் தமது நகரில் பிளேக் (ஒரு கொடிய பக்டீரியா தொற்றுநோய்) பரவியிருந்த காரணத்தால் அங்கு ஹரிதாஸாக இயங்கமுடியவில்லை.  எனவே, ஷீர்டிக்கு வந்து, காகா சாஹேப் மூலம் பெற்ற அனுமதியுடன் கீர்த்தனை செய்தார்.  அவரது முயற்சிக்குப் போதுமான அளவு சன்மானம் கொடுக்கப்பட்டது.  முடிவாக ஒவ்வோர் ஆண்டும் புதிய "ஹரிதாஸ்" ஒருவர் கிடைக்கப்பெறும் சிரமத்தை 1914ன் பின் தாஸ்கணு மஹராஜை இப்பணியில் சாயிபாபா நிரந்தரமாக நியமித்ததன் மூலம் தீர்த்தார்.  அந்நாளிலிருந்து தற்போது வரைக்கும் அவ்வேளையைத் தாஸ்கணு வெற்றிகரமாயும், சிறப்பானமுறையிலும் நிறைவேற்றி வருகிறார்.

1912ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா படிப்படியாக வளரத் தொடங்கியது.  சித்திரை 8ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை ஷீர்டி, தேன் கூட்டைப்போல் மக்கள் திரளாகக் காட்ச்சியளித்தது.  கடைகள் அதிகரிக்கத் தொடங்கின.  மல்யுத்தப் போட்டிகளில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு எடுத்துக்கொண்டனர்.  முன்னைவிடப் பெரியஅளவில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது.

ராதாகிருஷ்ணமாயியின் பேருழைப்பு, ஷீர்டியை ஒரு சமஸ்தானமாக்கியது.  அதற்குத் தேவையான பொருட்கள் சேர்க்கப்பட்டன.  ஓர் அழகான குதிரை, பல்லக்கு, ரதம், வெள்ளிப் பொருட்கள், பாத்திரங்கள், பானைகள், வாளிகள், படங்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் முதலியவை அன்பளிப்பாக சமர்ப்பிக்கப்பட்டன.  இங்ஙனம் தமக்காக உள்ள பொருட்கள் எல்லாம் ஏராளமாக அதிகரித்த போதிலும் சாயிபாபா அவைகளை எல்லாம் மதிக்காது, தமது எளிமையை முன்போலவே பாதுகாத்து வந்தார்.  இரண்டு ஊர்வலங்களிலும் இந்துக்களும், முஹமதியர்களும் ஒன்றாக வேலை செய்துவந்தும் அவர்களிடையே இதுவரை எவ்விதச் சச்சரவோ, இடையூறோ இருந்ததேயில்லை.  ஆரம்பத்தில் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் மக்கள்வரை கூடுவது வழக்கமாக இருந்தது.  அனால் அவ்வெண்ணிக்கை சில ஆண்டுகளில் எழுபத்தைந்தாயிரமாக அதிகரித்தது.  எனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விதத்தில் எவ்விதத் தொற்றுவியாதியோ, கலகமோ கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டதேயில்லை.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)


ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 3

சந்தனக்கூடு ஊர்வலம்

இத்திருவிழாவில் மற்றொரு ஊவலமும் தொடக்கப்பட்டது.  கொரலாவின் முஹமதிய பக்தரான அமீர் ஷக்கர் தலால் அவர்களால் இச்சந்தன ஊர்வலத்தின் எண்ணம் உருவானது.  பெரும் முஹமதிய ஞானியரைக் கௌரவிக்கும் முகமாக இவ்வூர்வலம் நடைபெற்றது.  இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் 'தாலி' என்னும் தட்டுக்களில் இடப்பட்டு, பேண்டு (சங்கீத இசைக் கூட்டம்) வாத்தியம் மற்றும் இசை முழங்கிவர நறுமணப் பொருட்கள் முன்னால் புகைந்துகொண்டு செல்ல கிராமத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.  மசூதிக்குத் திரும்பியபின்னர் தட்டுக்களில் உள்ளவை நிம்பார் என்னும் தொழுகைமாடத்தில் தெளிக்கப்பட்டு மசூதியின் சுவரில் கைகளால் பூசப்பெற்றது.  முதல் மூன்று ஆண்டுகளில் அமீர் ஷக்கர் அவர்களால் இவ்வேலை மேற்பார்வையிடப்பட்டது.  பின்னர் அவரது மனைவியால் பார்க்கப்பட்டது.  எனவே ஒரே நாளில் முஹமதியரால் சந்தனக்கூடும், இந்துக்களால் கொடிகளும் அருகருகில் சென்றன.  இப்போதும் எவ்வித இடையூறுமின்றி அங்ஙனமே நடந்துகொண்டிருக்கிறது.

ஏற்பாடு

சாயிபாபாவின் அடியவர்களுக்கு இந்தநாள் புனிதமானதும் மிகவும் பிரியமானதுமாகும்.  பெரும்பாலான அடியவர்கள் கூடி விழாவை நிர்வகிப்பதில் பங்கு வகித்தனர்.  எல்லா வெளி ஏற்பாடுகளையும் தாத்யா கோதே பாடீல் பார்த்துக்கொண்டார்.  உள்நிர்வாகம் முழுவதும் சாயிபாபாவின் பக்தையான ராதாகிருஷ்ணமாயிடமே ஒப்புவிக்கப்பட்டது.  அவ்விழாவின்போது அவளது இருப்பிடம் விருந்தாளிகளால் நிறைந்து இருந்தது.  அவர்களது தேவைகளையும், விழாவிற்குத் தேவையான ஏற்பாட்டையும் அவள் கவனித்தாக வேண்டும்.  மசூதி முழுவதும் அதன் சுவர், தரை முதலியவைகளைக் கழுவி சுத்தம்செய்து, சாயிபாபாவின் அணையா விளக்கான துனியினால் கரிபிடித்து கறுத்துப் போயிருக்கும் மசூதிச் சுவர்களை எல்லாம் வெள்ளையடிப்பதும் அவள் விருப்பமுடன் செய்த மற்றொரு வேலை ஆகும்.  இவ்வேலையை ஒருநாள் விட்டு ஒருநாள் சாயிபாபா சாவடிக்குத் தூங்கப்போயிருக்கும் முந்தைய இரவில் செய்வாள்.  துனி (அணையா நெருப்பு) உட்பட எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கசடறக் கழுவி மசூதிச் சுவரை வெள்ளையடித்த பின்னர் முன்போல் திருப்பி வைத்துவிடவேண்டும்.  இத்திருவிழாவில் சாயிபாபாவிற்கு மிகவும் பிடித்த அம்சமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதலும் ஒரு பெரும் நிகழ்ச்சியாகும்.     ராதாகிருஷ்ணமாயின் இருப்பிடத்தில் பெருமளவில் சமையலும், பல்வேறு வகையான உணவுப் பொருட்களும், இனிப்புப் பதார்த்தங்களும் தயாரிக்கப்பட்டன.  பல்வேறு செல்வந்தர்களான பக்தர்கள் இந்நிகழ்சிகளில் பெரும் பங்கு வகித்தனர். 

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 2

தோற்றம்

கோபர்காவனின் நில அளவுத்துறையில் சர்வேயராக இருந்தவர் கோபால்ராவ் குண்ட் ஆவார்.  அவர் பாபாவின் பெரும் அடியவர்.  அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் ஒரு குழந்தையும் இல்லை.  சாயிபாபாவின் அருளால் அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.  அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு ஒரு திருவிழா அல்லது உருஸ்(முஸ்லிம் ஞானியரின் நினைவுதினம்) கொண்டாடும் எண்ணம் உதிர்ந்தது.  தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், மாதவ்ராவ் தேஷ்பாண்டே போன்ற மற்ற ஷீர்டி அடியவர்களிடம், கோபால்ராவ் தனது எண்ணத்தை வெளியிட்டார்.  அவர்கள் எல்லோரும் இந்த யோசனைக்கு உடன்பட்டு, சாயிபாபாவின் அனுமதியையும், ஆசியையும் பெற்றனர்.  இவ்விழாவைக் கொண்ட்டாடுவாதற்கு கலெக்டரின் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.  ஆனால் கிராம குல்கர்ணி (அதிகாரி) திருவிழா நடத்துவதற்கு எதிரிடையாகத் தகவல் கொடுத்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் சாயிபாபா அதை ஆசீர்வதித்திருப்பதால், அவர்கள் மறுபடியும் முயன்று, முடிவாக வெற்றிபெற்றனர்.  

சாயிபாபாவிடம் கலந்தாலோசித்த பிறகு உருஸ் தினம் ராமநவமியன்று இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.  பாபா தமது நோக்கத்தில் ஏதோ ஒரு முடிவு வைத்திருந்ததாகத் தோன்றுகிறது.  அதாவது ராமநவமி, உருஸ் என்ற இரண்டு பண்டிகைகளை இணைப்பதென்பது இரண்டு இந்து, முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக ஆகும்.  இக்குறிக்கோளை அடைந்ததைப் பிற்கால நிகழ்சிகள் காட்டுகின்றன.

திருவிழாவுக்கு அனுமதி கிடைத்தது.  ஆனால் மற்ற கஷ்டங்கள் முளைத்தன.  ஷீர்டி ஒரு கிராமம்.  அங்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது.  ஷீர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன.  உபயோகப்படுத்திய ஒரு கிணற்றில் நீர் வற்றிவிட்டது.  மற்றொன்று உப்புத் தண்ணீர்.  இந்த உப்புத் தண்ணீரானது சாயிபாபா மலர்களை வீசியதன்மூலம் இனிமை பொருந்தியதாக மாற்றப்பட்டது.  இக்கிணற்றுத் தண்ணீர் போதாமையால் நெடுந்தூரத்திலிருந்து தோல் சாக்குகளில் கிணற்றிலிருந்து நீர் கொண்டுவருவதற்குத் தாத்யா பாடீல் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.  தற்காலிகக் கடைகள் கட்டப்பட்டு மல்யுத்தச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  

கோபால்ராவ் குண்டிற்கு அஹமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா காஸார் என்ற ஒரு நண்பர் இருந்தார்.  அவர் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்தும், பிள்ளையில்லாக் குறையில் அம்மாதிரியே மகிழ்ச்சியற்றவராய் இருந்தார்.  அவரும் சாயிபாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு புதல்வர்களை அடைந்தார்.  திருவிழாவின் ஊர்வலத்திற்காக ஒரு சாதாரணக் கொடி தயாரித்துக் கொடுக்கும்படி இவரை குண்ட் தூண்டினார்.  நானா சாஹேப் நிமோண்கரை மற்றொரு எம்ப்ராய்டரி வேலை  (சரிகைவேலை) செய்யப்பட்ட கொடி தயாரித்துக் கொடுக்கும்படி தூண்டி, அதில் வெற்றியும் பெற்றார்.  கிராமத்தில் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு த்வாரகாமாயி என்று சாயிபாபாவினால் அழைக்கப்பட்ட மசூதியின் இரண்டு மூலைகளிலும் ஊன்றப்பட்டன.  இது இன்றளவும் நடைபெற்று வருகிறது. 

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 1

குருவின் கை தீண்டலினால் ஏற்படும் விளைவு (பயன்)

எங்கே உண்மை அல்லது 'சத்குரு' வழிகாட்டியாக இருக்கிறாரோ, அங்கே இவ்வுலகப் பெருங்கடலுக்கு அப்பால் நம்மைப் பத்திரமாகவும், எளிதாகவும் அவர் நிச்சயம் அழைத்துச் செல்வார்.  சத்குரு என்னும் சொல்லானது நமது மனத்திற்கு சாயிபாவைக் கொணர்கிறது.  எனக்கு முன்னால் அவர் நின்றுகொண்டிருப்பது போன்றும், உதி என்னும் திருநீற்றை எனது நெற்றியில் இடுவதைப் போன்றும், அவரது ஆசிகள் நல்கும் கரத்தை என் தலைமீது வைப்பதைப் போன்றும் தோன்றுகிறது.  எனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது.  அன்பு எனது கண்களில் இருந்து பொங்கி வழிகிறது.

குருவின் கரம் தீண்டலின் சக்தியானது வியக்கத்தக்கதாகும்.  உலகை அழிக்கும் நெருப்பால் அழிக்கப்படாத (எண்ணங்களும், ஆசைகளும் உடைய) இந்த நுட்பமான உடம்பு, குரு சாதாரணமாக கரம் தீண்டுவதாலேயே அழிக்கப்படுகிறது.  முந்தைய பல பிறவிகளில் உண்டான பல பாவங்களும் சுத்தமாக அடித்துச் செல்லப்படுகின்றன.  மதங்கள், கடவுளைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டவுடனேயே சஞ்சலப்படுபவர்களின் பேச்சுக்கூட அமைதியடைகிறது.  சாயிபாபாவின் சுந்தரரூபத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சியால் நமது தொண்டை அடைக்கிறது.  கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.  உணர்ச்சிகள் உள்ளத்தை வெல்கின்றன.  நானே பிரம்மம் என்னும் உணர்வை அது எழுப்பிவிடுகிறது.  தன்னையறிதலின் ஆனந்தத்தை ஸ்தாபிக்கிறது.  நான், நீ என்னும் வேறுபாட்டைக் கரைத்து அவ்வப்போதே நம்மை உச்சத்துடன் (ஒரே உண்மையுடன்) ஒன்றாக்குகிறது.

புனித நூல்களை யான் பயிலத் தொடங்குந்தோறும் ஒவ்வோர் அடியிலும் எனது சத்குருவால் ஞாபகமூட்டப்படுகிறேன்.  சாயிபாபாவே ராமனும், கிருஷ்ணனுமாகி என்னை அவரின் கதைகளைக் கேட்கச் செய்கிறார்.  உதாரணமாக நான் பாகவதம் கேட்கத் தொடங்கும் முன்பாக, தலையிலிருந்து கால்வரை சாயிபாபா கிருஷ்ணராகிவிடுவார்.  அவரே பாகவதத்தையோ, உத்தவ கீதையையோ (கிருஷ்ணபரமாத்மா தன் சீடர் உத்வருக்கு அளித்த உபதேசங்கள்) மக்களின் நன்மைக்காகப் பாடுகிறார் என்றும் நினைக்கிறேன்.

நான் உரையாடத் துவங்கும்போது, உடனே சாயிபாபாவின் கதைகள், உரிய விளக்கங்கள் தருவதற்கு ஏதுவாக என் நினைவிற்கு வருகின்றன.  எதையாவது நான் எழுதத் தொடங்கும்போது சில வார்த்தைகளையோ, சில வாக்கியங்களையோ என்னால் எழுதமுடியாது.  ஆனால் அவராகவே என்னை எழுதச்செய்யும்போது நான் எழுதுகிறேன், எழுதிக்கொண்டே இருக்கிறேன்.  சீடனின் அஹங்காரம் தலையெடுக்கும்போது, அவர் தமது கரங்களால் அதைக் கீழே அழுத்தி, தமது சக்தியைக் கொடுத்து, அவனது குறிக்கோளை எய்தும்படி செய்கிறார்.  இவ்வாறாகத் திருப்திப்படுத்தி ஆசீர்வதிக்கிறார்.  "சாயியின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்ப்பிகிறானோ, அவன் வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம்(தருமம்), பொருள்(செல்வம்), இன்பம்(ஆசை), வீடு(முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்".

கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன.  இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும், எனவே கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது.  ஆனால் நீங்கள் சாயியையே சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் (கடவுளிடத்தில்) அழைத்துச்செல்கிறது.  இவ்வாறாக சாயிபாபா நிச்சயம் கூறுகிறார்.  அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயிபாபாவின் மொழிகளை ஆசிரியர் கூறுகிறார்.  

"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்  வீட்டில் இருக்காது.  தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழுஇதயத்துடன் வழிபாடுசெயும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு.  கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா இதையேதான் கூறியிருக்கிறார்.  எனவே உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.  உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால், கடவுளிடம் இரந்து கேளுங்கள்.  இவ்வுலக கௌரவத்தை விட்டுவிடுங்கள்.  கடவுளின் அருளையும், ஆசியையும் பெறமுயலுங்கள்.  அவரின் சந்நிதானத்தில் கௌரவம் அடையுங்கள்.  உலக கௌரவங்களால் வழி தவறிவிடாதீர்கள்.  இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்படவேண்டும்.  புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப்படும்.  வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்.  உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொண்டிருப்பதிலேயே மனதை ஸ்திரப்படுத்துங்கள்.  அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்.  நல்ல பழக்கங்களில் மனம் ஈடுபட்டிருப்பதற்கு இதுவே அடையாளம்.  மனம் அலையும் தன்மை உடையதாய் இருந்தால் அது நன்றாக ஒன்றிவிட்டது என்று கூறமுடியாது."

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

Saturday, 25 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 9

போலி குரு ஜவ்ஹர் அலி

மேலே குறிப்பிட்ட மல்யுத்தம் நடந்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், 'ஜவ்ஹர் அலி' என்னும் பெயருடைய பக்கிரி தன சீடர்களுடன் அகமத்நகரிலிருந்து, ராஹாதாவுக்கு வந்து வீரபத்திர ஸ்வாமி கோவிலுக்கு அருகிலுள்ள பக்கலில் (விசாலமான அறை) தங்கினார்.  இப்பக்கிரி படித்தவர்.  குரான் முழுவதையும் ஒப்பிக்கும் ஆற்றல் உடையவர்.  இனிமையான நா உடையவர்.  கிராமத்தைச் சேர்ந்த பல மதப்பற்றும், பக்தியும் உடைய மக்கள் அவரிடம் வந்து மரியாதை செய்யத் தொடங்கினர்.  அவர் அந்தக் கிராம மக்கள் உதவியுடன் வீரபத்திரர் கோவிலுக்கு அருகில் ஓர் ஈத்கா (ஈத் தினத்தன்று முஹமதியர் தொழும் இடத்தின் முன்புள்ள சுவர்) கட்டத் தொடங்கினார்.  இவ்விஷயத்தைப் பற்றி சில சர்ச்சைகள் உண்டானதால், ஜவ்ஹர் அலி   ராஹாதாவை விட்டுப் புறப்பட வேண்டியதாயிற்று.

பிறகு அவர் ஷீர்டிக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார்.  அவருடைய இனிமையான வாக்குகளால் மக்களைக் கவர்ந்தார்.  பாபாவைத் தன்னுடைய சீடர் என்று கூறத் தொடங்கினார்.  பாபா அதை மறுக்கவில்லை.  அவரை சீராக இருக்கச் சம்மதித்தார்.  குரு, சீடர் இருவரும்  ராஹாதாவுக்குத் திரும்பி அங்கு வசிக்க முடிவு செய்தனர்.  குரு, சீடரின் மதிப்பை அறிந்திருக்கவே இல்லை.  ஆனால் சீடர், குருவின் குற்றங்களை உணர்ந்திருந்தார்.  எனினும் அவரை மதிக்காமல் இருந்ததில்லை.  பாபா தமது கடமைகளை கவனத்துடன் ஆற்றிக்கொண்டு வந்தார்.  தமது குருவிற்குப் பல்வேறு விதங்களில் பணிபுரிந்தும் வந்தார்.  ஷீர்டிக்கு அவர்கள் அடிக்கடி வருவது வழக்கம்.  ஆனால் அவர்களின் முக்கிய இருப்பிடம் ராஹாதாவாகும்.  

ஷீர்டியிலுள்ள பாபாவின் அன்புச் சீடர்கள், பாபா அவர்களைவிட்டு ராஹாதாவில் தங்கியிருப்பதை விரும்பவில்லை.  எனவே அவர்கள் ஓர் கூட்டமாக  ராஹாதாவுக்குச் சென்று, பாபாவை ஈத்காவுக்கு அருகில் சந்தித்து, தாங்கள் வந்த காரணத்தைக் கூறினார்கள்.  பாபா அவர்களிடம், "பக்கிரி ஒரு கோபக்கார குணங்கெட்ட மனிதர் என்றும், தான் அவரை விட்டு வரமுடியாது என்றும், தான் அவரை விட்டு வரமுடியாது என்றும், எனவே பக்கிரி வருவதற்குள் எல்லோரும் திரும்பிவிடுவது நல்லது" என்றும் கூறிக்கொண்டிருந்தார்.  அப்போது பக்கிரி திரும்பிவந்து, தனது சீடனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முயன்றதாக அவர்களைக் கோபித்தார்.  சில விவாதங்களும், தகராறுகளும் நிகழ்ந்தன.  முடிவில் குரு, சீடர் இருவரும் ஷீர்டிக்குத் திரும்பும்படி தீர்மானிக்கப்பட்டது.  எனவே அவர்கள் ஷீர்டிக்குத் திரும்பிவந்து வசிக்கத் தொடங்கினர்.  

சில நாட்களுக்குப் பிறகு குரு, தேவிதாசரால் சோதிக்கப்பட்டு முழுமைக்குத் தேவையுள்ளவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டார்.  பாபா ஷீர்டிக்குக் கல்யாண கோஷ்டியுடன் வருவதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேவிதாசர் பத்து அல்லது பதினொரு வயதுப் பாலகனாக மாருதி கோவிலில் வசித்து வந்தார்.  தேவிதாசருக்குப் பல சிறப்பான அம்சங்களும், சிறப்பான கண்களும் அமைந்திருந்தன.  

அவர் அவாவின்மையின் அவதாரமும், ஞானியும் ஆவார்.  தாத்யா கோதே, காஷிநாத் போன்ற பலர் அவரைத் தமது குருவாக நினைத்திருந்தனர்.  அவர்கள் ஜவ்ஹர் அலியை, தேவிதாஸ் முன்னிலையில் கொண்டுவந்தனர்.  அவர்கள் தொடர்ந்த விவாதத்தில் ஜவ்ஹர் அலி தோற்கடிக்கப்பட்டார்.  பின்பு ஷீர்டியை விட்டு ஓடி பீஜப்பூர் சென்று தங்கினார்.  பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஷீர்டிக்குத் திரும்பிவந்து சாயிபாபாவின் முன்னர் வீழ்ந்து வணங்கினார்.  அவர் குரு என்றும், சாயிபாபா சீடர் என்றும் காணப்பட்ட தோற்றம் தெளிவாக்கப்பட்டது.  அவர் தன் குற்றத்திற்காக வருத்தப்பட்டிருகையில், சாயிபாபா அவரை மரியாதையுடன் நடத்தினார்.  

இவ்விஷயத்தில் உண்மையான ஒழுக்கத்தால் சாயிபாபா எவ்வாறு அஹங்காரத்தைக் களைந்து சீடனது கடமைகளை ஒழுங்காகச்செய்து, உயர்ந்த பதவியை (தன்னையுணர்த்தல்) அடைவது என்பதைக் காட்டியுள்ளார்.  இக்கதை மஹல்ஸாபதி (சாயிபாபாவின் ஒரு பெருந்தகை அடியவர்) என்னும் சீடரால் கூறப்பட்டுள்ளபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.  

அடுத்த அத்தியாயத்தில் ராமநவமித் திருவிழா, மசூதியின் முந்தைய நிலை, அதன் பழுதுபார்ப்பு ஆகியவற்றைக் காண்போம்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 8


தண்ணீரால் விளக்கெரித்தல் 

சாயிபாபாவுக்கு விளக்குகள் என்றால் அதிக விருப்பம்.  அவர் கடைக்காரர்களிடமிருந்து எண்ணெய் வாங்கி மசூதியிலும், கோவிலிலும் இரவு முழுவதும் விளக்குகளை எரியவிடுவது வழக்கம்.  பின்பு எண்ணெய் இலவசமாக அளித்துவந்த வணிகர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இனிமேல் எண்ணெய் கொடுப்பதில்லை என முடிவுசெய்தனர்.  வழக்கம்போல் பாபா அவர்களிடம் எண்ணெய் கேட்கப்போனபோது அவர்கள் எல்லோரும் தீர்மானமாக எண்ணெய் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள்.  

இதைக்கேட்டுக் குழப்பமடையாத பாபா, மசூதிக்குத் திரும்பி வந்து காய்ந்த திரிகளை விளக்குகளில் இட்டார்.  வணிகர்கள் மசூதிக்கு வந்து என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருன்தனர்.  பாபா, மிகக் கொஞ்சம் (சில துளிகள்) மட்டுமே எண்ணெய் இருந்த தகரக் குவளையை எடுத்தார்.  தண்ணீரை அதில் ஊற்றிக் குடித்தார்.  இவ்விதமாக அதை நிவேதனம் செய்தபிறகு தகர டப்பாவில் தண்ணீரை மறுபடியும் எடுத்து எல்லா விளக்குகளிலும் அதனையே நிரப்பிக் கொளுத்தினார்.  வணிகர்களுக்கு ஆச்சர்யத்தையும், பயத்தையும் விளைவிக்கும்படியாக விளக்குகள் எரியத் தொடங்கின.  இரவு முழுவதும் எரிந்துகொண்டிருந்தன.  

வணிகர்கள் தங்கள் செய்கைக்கு மனம் வருந்தி பாபாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.  பாபா அவர்களை மன்னித்து, எதிர்காலத்தில் அதிக உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.  


ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                    (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 7


மொஹிதினுடன் மல்யுத்தப்பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும்

பாபாவின் மற்ற கதைகளுக்குத் திரும்புவோம்.  ஷீர்டியில் மொஹிதின் தம்போலி என்னும் பெயருடைய ஓர் மல்யுத்தச் சண்டைக்காரன் இருந்தான்.  பாபாவுக்கும், அவனுக்கும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை.  இருவரும் மல்யுத்தம் செய்யத் தொடங்கினர்.  இதில் பாபா தோற்கடிக்கப்பட்டார்.  அதிலிருந்து பாபா தம்முடைய உடைமையையும், வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்துக்கொண்டார்.  மேலாடையாக கஃப்னி அணிந்தார்.  லங்கோடு (இடுப்புப் பட்டை) அணிந்து தன் தலையை ஓர் துண்டுத் துணியால் மூடினார்.  தம்முடைய ஆசனத்திற்கு ஒரு சாக்குத் துணியையும், படுக்கைக்கு ஒரு சாக்குத் துணியையுமே உபயோகித்தார்.  கிழிந்த கசங்கிய கந்தல் உடைகளை அணிவதிலேயே திருப்தியடைந்தார்.  அவர் எப்போதும் "ஏழ்மை அரசுரிமையைவிட நன்று, இறைமையைவிட மிகமிக நன்று, கடவுள் ஏழைகளின் நிரந்தர நண்பராவார்" என்று கூறிக்கொண்டார். 

கங்காகீரும் மல்யுத்தம் செய்வதில் மிக்க விருப்பமுள்ளவர்.  அவர் ஒருமுறை மல்யுத்தம் செய்யும்போது ஒரு ஆசையற்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது.  அப்போது ஓர் குரல் அவரிடம், அவரது உடம்பைத் துறந்து கடவுளுடன் நிரந்தரமாக ஈடுபடும்படி கூறுவது கேட்டது.  எனவே, அவரும் சம்சாரத்தைத் துறந்து கடவுளை நோக்கித் திரும்பினார்.  புண்தாம்பேக்கு அருகிலுள்ள ஓர் ஆற்றின் கரையில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார்.

சாயிபாபா மக்களுடன் கலந்து பேசுவதில்லை.  அவரை யாராவது கேள்வி கேட்டபோது மட்டுமே அதற்குப் பதில் கூறினார்.  பகற்பொழுதில் எப்போதும் வேப்பமரத்தடியிலேயே  உட்கார்ந்திருந்தார்.  சில சமயங்களில் கிராம எல்லையில் வாய்க்காலுக்கு அருகிலுள்ள ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.  மாலை நேரங்களில் அவர் குறிக்கோள் இன்றி நடப்பது வழக்கம்.  சில நேரங்களில் நீம்காவன் போவார்.  அங்கு த்ரயம்பக் டேங்க்லேயின் வீட்டிற்குப் போவார்.  பாபா அவரை விரும்பினார்.  அவரின் (பாபா சாஹேபின்) தம்பியான நானா சாஹேபுக்கு இரண்டாவது திருமணம் செய்தும் குழந்தைகள் ஏதும் இல்லை.  பாபா சாஹேப், நானா சாஹேபை பாபாவின் தரிசனத்திற்காக அனுப்பினார்.  சில காலத்திற்குப் பிறகு பாபாவின் அருளால் நானா சாஹேப் ஒரு புதல்வனைப் பெற்றார்.  அதிலிருந்து சாயிபாபாவை பார்க்க மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர்.  அவருடைய புகழ் பரவி, அஹமத் நகரை எட்டியது.  அதிலிருந்து நானா சாஹேப் சாந்தோர்க்கரும், கேசவ சிதம்பரும் மற்றும் பலரும் ஷீர்டிக்கு வரத்தொடங்கினர்.

பாபா பகற்பொழுதில் தமது அடியவர்களால் சூழப்பட்டிருந்தார்.  இரவில் உதிர்ந்துகொட்டும் ஒரு பழைய மசூதியில் படுத்தார்.  பாபாவிடம் இந்த நேரத்தில் ஹூக்கா, புகையிலை, ஒரு டம்ளர் (தகர டப்பா), நீண்ட கஃப்னி, தலையைச் சுற்றி ஒரு துண்டுத்துணி, ஒரு சட்கா (குச்சி) முதலிய சிறுசிறு உடைமைகள் இருந்தன.  இவைகள் எல்லாம் பாபா எப்போதும் வைத்திருந்தார்.  தலையிலுள்ள அச்சிறு துணி, நன்கு முறுக்கப்பட்ட முடியைப்போல் இடது காதிலிருந்து முதுகில் தொங்கியது.  இது பல வாரங்களாகத் துவைக்கப்படாதது.  அவர் எவ்வித பூட்ஸோ, காலணியோ அணியவில்லை.

நாட்களின் பெரும்பகுதிக்கு ஒரு சாக்குத்துணியே அவரின் ஆசனமாகும்.  ஒரு கௌபீனத்தை அவர் அணிந்திருந்தார்.  குளிரை விரட்ட எப்போதும் துனியின் (புனித நெருப்பின்) முன்னால் இடது கையை மரக்கட்டைப் பிடியின்மீது வைத்தவாறு தெற்கு நோக்கி அமர்ந்திருந்தார்.  அந்தத் துனியில் அஹங்காரம், ஆசைகள், எல்லாவித எண்ணங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாகப் போட்டார்.  'அல்லா மாலிக்' (கடவுளே ஒரே உரிமையாளர்) என்று கூறினார்.

எல்லா பக்தர்களும் வந்து அவரைத் தரிசித்ததும், அவர் அமர்ந்திருந்ததுமான மசூதியானது இரண்டு அறைகளின் அளவே இருக்கும்.  1912க்குப் பிறகு ஒரு மாற்றம் நிகழ்ந்தது.  பழைய மசூதி பழுபார்க்கபட்டு ஒரு தாழ்வாரம் எழுப்பப்பட்டது.  இம்மசூதியில் பாபா தங்கவருவதற்குமுன் தகியா என்ற இடத்தில் (முஸ்லிம் ஞானியரின் இருப்பிடம்) வசித்து வந்தார்.  அங்கேதான் பாபா கால்களில் சலங்கை கட்டி, அழகாக நடனம் செய்துகொண்டு அன்புடன் பாடினார்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும
                                                                                                                                          (தொடரும்…)

Sunday, 8 December 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 6



இக்கதையின் முழு விவரம்:-
தாணேவைச் சேர்ந்த திரு B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லத்தார், ஸாயிபாபாவின் ஒரு பெரிய பக்தர். இவர் இந்த விஷயத்தைப் பற்றி ஸகுண்மேரு நாயக், கோவிந்த் கமலாகர் தீக்ஷித் இவர்களிடமிருந்து விசாரித்து பாதுகைகளைக் கொண்ட ஒரு கட்டுரை ஸாயி லீலா தொகுப்பு II எண், 1-ல், 25-ஆம் பக்கத்தில் பதிப்பித்துள்ளார். அது கீழ்கண்டவாறு:
      
1834 சக (1912 A.D.) யில் பம்பாயைச் சேர்ந்த டாக்டர் ராமராவ் கோதாரி. ஒரு தடவை ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்கு வந்தார். அவரது கம்பவுண்டரும், அவரது நண்பர் பாயி கிருஷ்ணாஜி அலிபாக்கரும் அவருடன் வந்தார்கள். கம்பவுண்டரும், பாயியும், ஸகுண்மேரு நாயக் உடனும் கோவிந்த் கமலாக்கர் தீக்ஷித் உடனும் நெருங்கிய நண்பர்களானர்கள். சில விஷயங்களைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், சீர்டிக்கு ஸாயிபாபா முதல் விஜயம் செய்தது. புனித மரத்தடியில் அமர்ந்திருந்தது. இவ்வுண்மைகளின் ஞாபகார்த்தம் ஒன்று இருக்க வேண்டும்” என்று நினைத்தார்கள். பாபாவின் பாதுகைகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு எண்ணி, அவற்றைச் சாதாரணக் கல்லில் செய்வதற்கு இருந்தன அப்போது பாயியின் நண்பரான கம்பவுண்டர் தனது எஜமானரான டாக்டர் ராமராவ் கோதரியிடம் இதைத் தெரிவித்தால், இதற்காக அருமையான பாதுகைகளை அவர் தயாரிப்பார் என்று யோசனை கூறினார். அனைவரும் இந்த யோசனையை விரும்பினார். டாக்டர் கோதாரியிடம் இதைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவரும் சீர்டிக்கு வந்து பாதுகைகளின் திட்டத்தை வரைந்தார். கண்டோபா கோயிலில் உள்ள உபாசினி மஹாராஜிடம் அவர் சென்று தனது திட்டத்தைக் காண்பித்தார். உபாசினி அதில் பல முன்னேற்றத் திருத்தங்கள்  செய்து தாமரைப் புஷ்பங்கள், சங்கு, சக்கரம், மனிதன், முதலியவற்றை வரைந்து, வேப்ப மரத்தின் உயர்வைப் பற்றியும், பாபாவின் யோக சக்தியைப் பற்றியும் உள்ள பின்வரும் ஸலோகத்தை அதில் பொறிக்கலாம் என்று யோசனை கூறினார்.
அந்த ஸ்லோகம் பின்வருமாறு:

"ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரிதயம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம்  ஸாதயந்தம்
நமாமீஷ்வரம் சத்குரும் ஸாயிநாதம்"

(நான் சாயிநாத் பிரபுவை வணங்குகிறேன்.  வேப்பமரம் கசப்பாகவும், இனிமையற்றதாகவும் இருப்பினும் அவரது நிரந்தர இருக்கையினால் அமிர்தத்தைக் கசிகிறது.  கல்ப விருக்ஷத்தைவிடச் சிறந்தது.  (அம்மரத்தின் கசிவு, அமிர்தம் என்று அதன் குணப்படுத்தும் தன்மையால் அழைக்கப்படுகிறது)

உபாஸனியின்  யோசனைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  பாதுகைகள் பம்பாயில் செய்யப்பட்டு ஷீர்டிக்கு கம்பவுண்டர் மூலம் அனுப்பப்பட்டன.  பாபா அவற்றை, ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று ப்ரதிஷ்டை செய்யவேண்டும் என்று சொன்னார்.  அத்தினத்தன்று காலை 11:30 மணிக்கு பாதுகைகளை கண்டோபா கோவிலிருந்து த்வாரகாமாயிக்கு (மசூதி) G.K.தீஷித் ஊர்வலமாகத் தனது தலையில் எடுத்து வந்தார். பாபா அப்பாதுகைகளைத் தொட்டு, இவைகள் பிரபுவின் பாதங்கள் என்றும், அவற்றை வேப்பமரத்தடியில் ப்ரதிஷ்டை செய்யும்படியும் கூறினார். அதற்கு முதல்நாள் பஸ்தா சேட் என்ற பம்பாயைச் சேர்ந்த பார்சி பக்தர் ரூ.25 மணியார்டர் செய்திருந்தார்.  பாபா இத்தொகையைப் ப்ரதிஷ்டை செய்யக் கொடுத்துவிட்டார்.  ப்ரதிஷ்டையின் மொத்தச் செலவு  ரூ.100 ஆகியது.  அதில் ரூ.75 நன்கொடைகளினால் சேர்க்கப்பட்டது.  முதல் ஐந்து ஆண்டுகள் G.K.தீஷித் அவர்களால் பாதுகைகள் வழிபாடு செய்யப்பட்டது.  பின்னர் இவ்வழிபாடு ஜக்கடியைச் சேர்ந்த லக்ஷ்மண் காகேஷ்வரால் செய்யப்பட்டது.  முதல் ஐந்து ஆண்டுகளில் டாக்டர் கோதாரி விளக்கேற்றுவதற்காக, மாதம் ரூ.2 அனுப்பி வைத்தார்.  பாதுகைகளைச் சுற்றிப் போடுவதற்கு வேலியும் அனுப்பினார்.  ஸ்டேஷனிலிருந்து அவ்வேலியை ஷீர்டிக்குக் கொண்டுவரும் செலவையும் (ரூ.7-8-0) கூரையும் சகுண் மேரு நாயக்கினால் கொடுக்கப்பட்டது.  தற்போது ஜாகடி (நாநாபூஜாரி) வழிபாட்டைச் செய்கிறார்.  சகுண் மேரு நாயக் நைவேத்யம், மாலை விளக்கேற்றுதல் முதலியவைகளைச் செய்கிறார்.

பாயி கிருஷ்ணாஜி என்பவர் முதலில் அக்கல்கோட் மஹராஜின் அடியவராவார்.  சகவருடம் 1834ல் பாதுகைகள் ப்ரதிஷ்டை செய்யப்படும் சமயத்தில் அக்கல்கோட் போகும் வழியில் ஷீர்டிக்கு வந்தார்.  பாபாவின் தரிசனம் ஆனபிறகு அக்கல்கோட்டுக்குப் போகவிரும்பி பாபாவின் அனுமதியை இதற்காக வேண்டினார்.  பாபா அவரிடம், "அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது, நீ ஏன் அங்கு போகவேண்டும்?  அக்கல்கோட் மஹராஜ் இங்கேயே (என்னுடன் ஒன்றி) இருக்கிறார்!", என்றார்.  இதைக்கேட்டு பாயி அக்கல்கோட் செல்லவில்லை, பாதுகைகளின் ப்ரதிஷ்டைக்குப் பின் ஷீர்டிக்கு அடிக்கடி வந்தார்.

ஹேமத்பந்திற்கு இவ்விபரங்கள் தெரியாதென்று B.V.தேவ் முடிக்கிறார்.  அவர் அங்ஙனம் அறிந்திருப்பாராயின் அதைத் தன்னுடைய சத்சரிதத்தில் சேர்க்கத் தவறியிருக்கமாட்டார்.  


ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                                         (தொடரும்…)

Wednesday, 4 December 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 5


வேப்பமரத்தடியில் உள்ள பாதுகைகளின் கதை

பாயி கிருஷ்ணாஜி அலிபாகர் என்பவர் அக்கல்கோட் மஹாராஜின் அடியவர் .அக்கல்கோட் மஹாராஜின் உருவப் படத்தை வழிப்பட்டார். அவர் ஒருமுறை அக்கல்கோட்டிற்கு (ஷோலாப்பூர் ஜில்லா) சென்று மஹாராஜின் பாதுகைகளைத் தரிசனம் செய்து கொண்டு, தன்னுடைய நேர்மையான வழிபாட்டைச் செலுத்திவர நினைத்தார். அவர் அங்கு செல்வதற்கு முன் கனவில் ஒரு காட்சியைக் கண்டார். அக்காட்சியில் அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரிடம் ”இப்போது சீர்டியே எனது இருப்பிடம் .அங்கு சென்று உனது வழிபாடுகளைச் செலுத்து” என்றார். எனவே பாயி தனது திட்டத்தை மாற்றிக் கொண்டு சீர்டிக்கு வந்து பாபாவை வழிபட்டு ,ஆறுமாதங்கள் அங்கு தங்கி ,மகிழ்ச்சியடைந்தார். அவருடைய காட்சி முதலியவற்றின் ஞாபகார்த்தமாக அவர் பாதுகைகளைத் தயாரித்து சிரவண சாகா 1834 (1912 A.D) ஆகிய புனிததினத்தன்று அவற்றை தாதா கேள்கர், உபாசினி முதலியோரால் நடத்தப்பட்ட, உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் வேப்ப மரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். அதன் வழிபாட்டுக்கு ஓர் அந்தணர்  நியமிக்கப்பட்டார். அதனுடைய  நிர்வாகம் ஸகுண் மேரு நாயக் என்ற அடியவரிடம் ஒப்புவிக்கப்பட்டது.


ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                                         (தொடரும்…)

Monday, 2 December 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 4



பாபாவின் உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதியும்

ஸாயிபாபா தமது பருவத்தில் தமது தலையில் முடி வளர்த்தார். தமது தலை முடியை ஒழுங்குபடுத்துவதே இல்லை. விளையாட்டு வீரனைப் போன்று அவர் உடையணிந்திருந்தார். அவர் ராஹாதாவிற்கு சென்றிருந்தபோது ஜெந்து, ஜாய், ஜூய் ஆகியவற்றின் சிறிய புஷ்பங்களைக் கொணர்ந்து, தரையைச் சுத்தப்படுத்தி, காய்ந்த நிலத்தைக் கொத்தி அவற்றைப் பயிர் செய்து தண்ணீர் வீட்டார். வாமன் தாத்யா என்னும் ஓர் அடியவர் அவருக்குத் தினந்தோறும் இரண்டு பானைகள் கொடுத்தார். இவற்றை கொண்டு பாபா தமது செடிகளுக்குத் தண்ணீர் விடுவது வழக்கம். கிணற்றிலிருந்து நீர் இறைத்து மட்குடங்களை தாமே தோலில் தூக்கிச் செல்வார். மாலை நேரங்களில் மண்பானைகள் வேப்பமரத்தடியில் வைக்கப்பட்டிருக்கும். அவை வெறும் பச்சை மண்ணில் செய்யப்பட்டு சுடப்படாத காரணத்தால் அங்ஙனம் வைக்கப்பட உடனையே உடைந்து விடும். அடுத்தநாள் தாத்யா வேறு இரண்டு புதுப்பானைகள் கொடுப்பார். இந்நிகழ்ச்சி மூன்று ஆண்டுகள் நடந்தது. ஸாயிபாபாவின் கடினப்பயிற்சி ,உழைப்பு ஆகியவற்றினால் ஒரு பூந்தோட்டம் வளர்ந்தது. இந்த நிலத்தில் தற்போது ‘பாபாவின் சமாதி மந்திர்’ என்னும் ஓர் பெரிய மாளிகை இருக்கிறது. தற்போது பாபாவின் சமாதி மந்திர் பல பக்தர்களால் அடிக்கடி விஜயம் செய்யப்பட்டு புழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                                                           (தொடரும்…)