Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 2

No comments

தோற்றம்

கோபர்காவனின் நில அளவுத்துறையில் சர்வேயராக இருந்தவர் கோபால்ராவ் குண்ட் ஆவார்.  அவர் பாபாவின் பெரும் அடியவர்.  அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் ஒரு குழந்தையும் இல்லை.  சாயிபாபாவின் அருளால் அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.  அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு ஒரு திருவிழா அல்லது உருஸ்(முஸ்லிம் ஞானியரின் நினைவுதினம்) கொண்டாடும் எண்ணம் உதிர்ந்தது.  தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், மாதவ்ராவ் தேஷ்பாண்டே போன்ற மற்ற ஷீர்டி அடியவர்களிடம், கோபால்ராவ் தனது எண்ணத்தை வெளியிட்டார்.  அவர்கள் எல்லோரும் இந்த யோசனைக்கு உடன்பட்டு, சாயிபாபாவின் அனுமதியையும், ஆசியையும் பெற்றனர்.  இவ்விழாவைக் கொண்ட்டாடுவாதற்கு கலெக்டரின் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.  ஆனால் கிராம குல்கர்ணி (அதிகாரி) திருவிழா நடத்துவதற்கு எதிரிடையாகத் தகவல் கொடுத்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் சாயிபாபா அதை ஆசீர்வதித்திருப்பதால், அவர்கள் மறுபடியும் முயன்று, முடிவாக வெற்றிபெற்றனர்.  

சாயிபாபாவிடம் கலந்தாலோசித்த பிறகு உருஸ் தினம் ராமநவமியன்று இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.  பாபா தமது நோக்கத்தில் ஏதோ ஒரு முடிவு வைத்திருந்ததாகத் தோன்றுகிறது.  அதாவது ராமநவமி, உருஸ் என்ற இரண்டு பண்டிகைகளை இணைப்பதென்பது இரண்டு இந்து, முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக ஆகும்.  இக்குறிக்கோளை அடைந்ததைப் பிற்கால நிகழ்சிகள் காட்டுகின்றன.

திருவிழாவுக்கு அனுமதி கிடைத்தது.  ஆனால் மற்ற கஷ்டங்கள் முளைத்தன.  ஷீர்டி ஒரு கிராமம்.  அங்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது.  ஷீர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன.  உபயோகப்படுத்திய ஒரு கிணற்றில் நீர் வற்றிவிட்டது.  மற்றொன்று உப்புத் தண்ணீர்.  இந்த உப்புத் தண்ணீரானது சாயிபாபா மலர்களை வீசியதன்மூலம் இனிமை பொருந்தியதாக மாற்றப்பட்டது.  இக்கிணற்றுத் தண்ணீர் போதாமையால் நெடுந்தூரத்திலிருந்து தோல் சாக்குகளில் கிணற்றிலிருந்து நீர் கொண்டுவருவதற்குத் தாத்யா பாடீல் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.  தற்காலிகக் கடைகள் கட்டப்பட்டு மல்யுத்தச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  

கோபால்ராவ் குண்டிற்கு அஹமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா காஸார் என்ற ஒரு நண்பர் இருந்தார்.  அவர் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்தும், பிள்ளையில்லாக் குறையில் அம்மாதிரியே மகிழ்ச்சியற்றவராய் இருந்தார்.  அவரும் சாயிபாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு புதல்வர்களை அடைந்தார்.  திருவிழாவின் ஊர்வலத்திற்காக ஒரு சாதாரணக் கொடி தயாரித்துக் கொடுக்கும்படி இவரை குண்ட் தூண்டினார்.  நானா சாஹேப் நிமோண்கரை மற்றொரு எம்ப்ராய்டரி வேலை  (சரிகைவேலை) செய்யப்பட்ட கொடி தயாரித்துக் கொடுக்கும்படி தூண்டி, அதில் வெற்றியும் பெற்றார்.  கிராமத்தில் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு த்வாரகாமாயி என்று சாயிபாபாவினால் அழைக்கப்பட்ட மசூதியின் இரண்டு மூலைகளிலும் ஊன்றப்பட்டன.  இது இன்றளவும் நடைபெற்று வருகிறது. 

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment