மேலே குறிப்பிட்ட மல்யுத்தம் நடந்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், 'ஜவ்ஹர் அலி' என்னும் பெயருடைய பக்கிரி தன சீடர்களுடன் அகமத்நகரிலிருந்து, ராஹாதாவுக்கு வந்து வீரபத்திர ஸ்வாமி கோவிலுக்கு அருகிலுள்ள பக்கலில் (விசாலமான அறை) தங்கினார். இப்பக்கிரி படித்தவர். குரான் முழுவதையும் ஒப்பிக்கும் ஆற்றல் உடையவர். இனிமையான நா உடையவர். கிராமத்தைச் சேர்ந்த பல மதப்பற்றும், பக்தியும் உடைய மக்கள் அவரிடம் வந்து மரியாதை செய்யத் தொடங்கினர். அவர் அந்தக் கிராம மக்கள் உதவியுடன் வீரபத்திரர் கோவிலுக்கு அருகில் ஓர் ஈத்கா (ஈத் தினத்தன்று முஹமதியர் தொழும் இடத்தின் முன்புள்ள சுவர்) கட்டத் தொடங்கினார். இவ்விஷயத்தைப் பற்றி சில சர்ச்சைகள் உண்டானதால், ஜவ்ஹர் அலி ராஹாதாவை விட்டுப் புறப்பட வேண்டியதாயிற்று.
பிறகு அவர் ஷீர்டிக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார். அவருடைய இனிமையான வாக்குகளால் மக்களைக் கவர்ந்தார். பாபாவைத் தன்னுடைய சீடர் என்று கூறத் தொடங்கினார். பாபா அதை மறுக்கவில்லை. அவரை சீராக இருக்கச் சம்மதித்தார். குரு, சீடர் இருவரும் ராஹாதாவுக்குத் திரும்பி அங்கு வசிக்க முடிவு செய்தனர். குரு, சீடரின் மதிப்பை அறிந்திருக்கவே இல்லை. ஆனால் சீடர், குருவின் குற்றங்களை உணர்ந்திருந்தார். எனினும் அவரை மதிக்காமல் இருந்ததில்லை. பாபா தமது கடமைகளை கவனத்துடன் ஆற்றிக்கொண்டு வந்தார். தமது குருவிற்குப் பல்வேறு விதங்களில் பணிபுரிந்தும் வந்தார். ஷீர்டிக்கு அவர்கள் அடிக்கடி வருவது வழக்கம். ஆனால் அவர்களின் முக்கிய இருப்பிடம் ராஹாதாவாகும்.
ஷீர்டியிலுள்ள பாபாவின் அன்புச் சீடர்கள், பாபா அவர்களைவிட்டு ராஹாதாவில் தங்கியிருப்பதை விரும்பவில்லை. எனவே அவர்கள் ஓர் கூட்டமாக ராஹாதாவுக்குச் சென்று, பாபாவை ஈத்காவுக்கு அருகில் சந்தித்து, தாங்கள் வந்த காரணத்தைக் கூறினார்கள். பாபா அவர்களிடம், "பக்கிரி ஒரு கோபக்கார குணங்கெட்ட மனிதர் என்றும், தான் அவரை விட்டு வரமுடியாது என்றும், தான் அவரை விட்டு வரமுடியாது என்றும், எனவே பக்கிரி வருவதற்குள் எல்லோரும் திரும்பிவிடுவது நல்லது" என்றும் கூறிக்கொண்டிருந்தார். அப்போது பக்கிரி திரும்பிவந்து, தனது சீடனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முயன்றதாக அவர்களைக் கோபித்தார். சில விவாதங்களும், தகராறுகளும் நிகழ்ந்தன. முடிவில் குரு, சீடர் இருவரும் ஷீர்டிக்குத் திரும்பும்படி தீர்மானிக்கப்பட்டது. எனவே அவர்கள் ஷீர்டிக்குத் திரும்பிவந்து வசிக்கத் தொடங்கினர்.
சில நாட்களுக்குப் பிறகு குரு, தேவிதாசரால் சோதிக்கப்பட்டு முழுமைக்குத் தேவையுள்ளவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டார். பாபா ஷீர்டிக்குக் கல்யாண கோஷ்டியுடன் வருவதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேவிதாசர் பத்து அல்லது பதினொரு வயதுப் பாலகனாக மாருதி கோவிலில் வசித்து வந்தார். தேவிதாசருக்குப் பல சிறப்பான அம்சங்களும், சிறப்பான கண்களும் அமைந்திருந்தன.
அவர் அவாவின்மையின் அவதாரமும், ஞானியும் ஆவார். தாத்யா கோதே, காஷிநாத் போன்ற பலர் அவரைத் தமது குருவாக நினைத்திருந்தனர். அவர்கள் ஜவ்ஹர் அலியை, தேவிதாஸ் முன்னிலையில் கொண்டுவந்தனர். அவர்கள் தொடர்ந்த விவாதத்தில் ஜவ்ஹர் அலி தோற்கடிக்கப்பட்டார். பின்பு ஷீர்டியை விட்டு ஓடி பீஜப்பூர் சென்று தங்கினார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஷீர்டிக்குத் திரும்பிவந்து சாயிபாபாவின் முன்னர் வீழ்ந்து வணங்கினார். அவர் குரு என்றும், சாயிபாபா சீடர் என்றும் காணப்பட்ட தோற்றம் தெளிவாக்கப்பட்டது. அவர் தன் குற்றத்திற்காக வருத்தப்பட்டிருகையில், சாயிபாபா அவரை மரியாதையுடன் நடத்தினார்.
இவ்விஷயத்தில் உண்மையான ஒழுக்கத்தால் சாயிபாபா எவ்வாறு அஹங்காரத்தைக் களைந்து சீடனது கடமைகளை ஒழுங்காகச்செய்து, உயர்ந்த பதவியை (தன்னையுணர்த்தல்) அடைவது என்பதைக் காட்டியுள்ளார். இக்கதை மஹல்ஸாபதி (சாயிபாபாவின் ஒரு பெருந்தகை அடியவர்) என்னும் சீடரால் கூறப்பட்டுள்ளபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த அத்தியாயத்தில் ராமநவமித் திருவிழா, மசூதியின் முந்தைய நிலை, அதன் பழுதுபார்ப்பு ஆகியவற்றைக் காண்போம்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment