Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 5

No comments

மசூதி பழுபார்த்தல்:

கோபால் ராவ் குண்டிற்கு மற்றொரு முக்கிய எண்ணமும் உதித்தது.  உருஸ் அல்லது சந்தனக்கூடு விழாவை அவர் தொடக்கியதைப் போன்றே, மசூதியைத் தாம் ஒழுங்குபடுத்த வேண்டும் என எண்ணினார்.  எனவே பழுபார்க்கக் கற்களைச் சேகரித்து அதன் பக்கங்களைச் சமப்படுத்தவும் செய்தார்.  ஆனால் இப்பணி அவருக்கு அளிக்கப்பட்டதல்ல.  இது நானா சாஹேப் சாந்தோர்கருக்கும், தாழ்வாரத்தின் வேலை காகா சாஹேப் தீஷித்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  ஆனால் முதலில் பாபா, இவ்வேலைகளைச் செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்க மனமில்லாதவராய் இருந்தார்.  ஆனால் மஹல்ஸாபதி என்ற உள்ளூர் அடியவரின் குறுக்கீட்டினால் அவர்களுக்கு அனுமதி கிடைத்து.

மசூதியில் ஒரே இரவில் தாழ்வாரப்பணி முடிவடைந்ததும், பாபா தமது வழக்கமான ஆசனமான சாக்குத் துண்டை விட்டொழித்து தாம் அமர்வதற்கென ஒரு சிறு ஆசனம் அமைத்துக்கொண்டார்.  1911ல் சபாமண்டபம் பெரும் உழைப்புடனும், கடின முயற்சியுடனும் ஒழுங்குபடுத்தப்பட்டது.  மசூதிக்கு முன்னாள் இருந்த திறந்த வெளியானது சிறியதாகவும், அசௌகரியமுள்ளதாகவும் இருந்தது.  காகா சாஹேப் தீஷித் அதை விசாலப்படுத்தி அதற்கு மேற்கூரை போடவிரும்பினார்.  பெருஞ்செலவில் இரும்புத் தூண்கள், கம்பங்கள், துணிகள் முதலியவற்றை வரவழைத்து வேலையை ஆரம்பித்தார்.  இரவில் எல்லா அடியவர்களும் கடினமாக உழைத்து, கம்பங்களை ஊன்றினார்கள்.  ஆனால் மறுநாள் காலை சாயிபாபா சாவடியிலிருந்து திரும்பிவந்தபோது எல்லாவற்றையும் வேருடன் பிடுங்கி வெளியே எறிந்தார்.  ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது.  அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு கம்பத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அதை அசைத்து வெளியே எடுக்க ஆரம்பித்து, மற்றொரு கையால் தாத்யா பாடீலின் கழுத்தைப் பற்றினார்.  தாத்யாவின் முண்டாசை வலிந்து பற்றியிழுத்து ஒரு நெருப்புக் குச்சியைக் கொழுத்தி அதைப் பற்றவைத்துக் குழியில் தூக்கி எறிந்தார்.  அச்சமயத்தில் பாபாவின் கண்கள் எரியும் நெருப்புத் துண்டம் போலிருந்தன.  ஒருவருக்கும் அவரைப் பார்க்கும் தைரியம் இல்லை.  எல்லோரும் பயங்கரமாக அஞ்சினார்கள்.

பாபா தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து, அதை ஒரு புனித நிகழ்ச்சியின் நிவேதனம்போல் அங்கே விட்டெறிந்தார்.  தாத்யாவும் மிகவும் பயந்துபோனார்.  யாருக்கும் தாத்யாவுக்கு என்ன நிகழப்போகிறது என்பது தெரியவில்லை.  ஒருவருக்கும் தலையிடத் தைரியம் இல்லை.  பாபாவின் குஷ்டரோகி அடியவனான பாகோஜி ஷிண்டே என்பவன் கொஞ்சம் முன்னேறத் துணிந்தான்.  ஆனால் அவன் பாபாவால் தள்ளப்பட்டான்.  மாதவ்ராவுக்கும் அதைப்போன்ற மரியாதையே கிடைத்தது.  அவர் கற்களால் அடிக்கப்பட்டார்.  ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் பாபாவின் கோபம் தணிந்து குளிர்ந்தது.  கடைக்காரனிடம் ஆள் அனுப்பி பூவேலை செய்த ஒரு முண்டாசு வாங்கி வரச்செய்து, தாத்யாவுக்கு ஒரு சிறப்பான கௌரவம் செய்வதைப்போல் தாமே அவர் தலையில் கட்டிவிட்டார்.  பாபாவின் இவவினோதக் குணத்தைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டனர்.  அவ்வளவு வேகமாகப் பாபாவைக் கோபமடையச் செய்தது எது?  தாத்யா பாடீலுக்கு உதை கொடுக்கும்படி செய்தது எது? என்பதை அவர்கள் எல்லோரும் அறிந்துகொள்ள இயலவில்லை.  சிலவேளைகளில் பாபா மிகவும் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்தார்.  இனிமையான விஷயங்களை அன்புடன் பேசினார்.  பின்னர் உடனே சின்னப் பொய்க்காரணம் இருந்தோ, இல்லாமலோ கோபாவேசம் அடைந்தார்.  அத்தகைய பல சம்பவங்களை இங்கே கூறலாம்.  ஆனால் எனக்கு எதைச்சொல்வது, எதைவிடுவது என்று தெரியவில்லை.  எனவே அவைகளை எனக்கு தோன்றியபோது கூறுகிறேன்.

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஒரு முஹமதியரா, இந்துவா என்னும் வினா எடுத்துக்கொள்ளப்படும்.  அவரின் யோகப்பயிற்சி, சக்தி மற்றும் பல விஷயங்களும் விவரிக்கப்படும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)

No comments :

Post a Comment