Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 6 - பகுதி 1

No comments

குருவின் கை தீண்டலினால் ஏற்படும் விளைவு (பயன்)

எங்கே உண்மை அல்லது 'சத்குரு' வழிகாட்டியாக இருக்கிறாரோ, அங்கே இவ்வுலகப் பெருங்கடலுக்கு அப்பால் நம்மைப் பத்திரமாகவும், எளிதாகவும் அவர் நிச்சயம் அழைத்துச் செல்வார்.  சத்குரு என்னும் சொல்லானது நமது மனத்திற்கு சாயிபாவைக் கொணர்கிறது.  எனக்கு முன்னால் அவர் நின்றுகொண்டிருப்பது போன்றும், உதி என்னும் திருநீற்றை எனது நெற்றியில் இடுவதைப் போன்றும், அவரது ஆசிகள் நல்கும் கரத்தை என் தலைமீது வைப்பதைப் போன்றும் தோன்றுகிறது.  எனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது.  அன்பு எனது கண்களில் இருந்து பொங்கி வழிகிறது.

குருவின் கரம் தீண்டலின் சக்தியானது வியக்கத்தக்கதாகும்.  உலகை அழிக்கும் நெருப்பால் அழிக்கப்படாத (எண்ணங்களும், ஆசைகளும் உடைய) இந்த நுட்பமான உடம்பு, குரு சாதாரணமாக கரம் தீண்டுவதாலேயே அழிக்கப்படுகிறது.  முந்தைய பல பிறவிகளில் உண்டான பல பாவங்களும் சுத்தமாக அடித்துச் செல்லப்படுகின்றன.  மதங்கள், கடவுளைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டவுடனேயே சஞ்சலப்படுபவர்களின் பேச்சுக்கூட அமைதியடைகிறது.  சாயிபாபாவின் சுந்தரரூபத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சியால் நமது தொண்டை அடைக்கிறது.  கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.  உணர்ச்சிகள் உள்ளத்தை வெல்கின்றன.  நானே பிரம்மம் என்னும் உணர்வை அது எழுப்பிவிடுகிறது.  தன்னையறிதலின் ஆனந்தத்தை ஸ்தாபிக்கிறது.  நான், நீ என்னும் வேறுபாட்டைக் கரைத்து அவ்வப்போதே நம்மை உச்சத்துடன் (ஒரே உண்மையுடன்) ஒன்றாக்குகிறது.

புனித நூல்களை யான் பயிலத் தொடங்குந்தோறும் ஒவ்வோர் அடியிலும் எனது சத்குருவால் ஞாபகமூட்டப்படுகிறேன்.  சாயிபாபாவே ராமனும், கிருஷ்ணனுமாகி என்னை அவரின் கதைகளைக் கேட்கச் செய்கிறார்.  உதாரணமாக நான் பாகவதம் கேட்கத் தொடங்கும் முன்பாக, தலையிலிருந்து கால்வரை சாயிபாபா கிருஷ்ணராகிவிடுவார்.  அவரே பாகவதத்தையோ, உத்தவ கீதையையோ (கிருஷ்ணபரமாத்மா தன் சீடர் உத்வருக்கு அளித்த உபதேசங்கள்) மக்களின் நன்மைக்காகப் பாடுகிறார் என்றும் நினைக்கிறேன்.

நான் உரையாடத் துவங்கும்போது, உடனே சாயிபாபாவின் கதைகள், உரிய விளக்கங்கள் தருவதற்கு ஏதுவாக என் நினைவிற்கு வருகின்றன.  எதையாவது நான் எழுதத் தொடங்கும்போது சில வார்த்தைகளையோ, சில வாக்கியங்களையோ என்னால் எழுதமுடியாது.  ஆனால் அவராகவே என்னை எழுதச்செய்யும்போது நான் எழுதுகிறேன், எழுதிக்கொண்டே இருக்கிறேன்.  சீடனின் அஹங்காரம் தலையெடுக்கும்போது, அவர் தமது கரங்களால் அதைக் கீழே அழுத்தி, தமது சக்தியைக் கொடுத்து, அவனது குறிக்கோளை எய்தும்படி செய்கிறார்.  இவ்வாறாகத் திருப்திப்படுத்தி ஆசீர்வதிக்கிறார்.  "சாயியின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்ப்பிகிறானோ, அவன் வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம்(தருமம்), பொருள்(செல்வம்), இன்பம்(ஆசை), வீடு(முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்".

கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன.  இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும், எனவே கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது.  ஆனால் நீங்கள் சாயியையே சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் (கடவுளிடத்தில்) அழைத்துச்செல்கிறது.  இவ்வாறாக சாயிபாபா நிச்சயம் கூறுகிறார்.  அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயிபாபாவின் மொழிகளை ஆசிரியர் கூறுகிறார்.  

"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்  வீட்டில் இருக்காது.  தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழுஇதயத்துடன் வழிபாடுசெயும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு.  கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா இதையேதான் கூறியிருக்கிறார்.  எனவே உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.  உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால், கடவுளிடம் இரந்து கேளுங்கள்.  இவ்வுலக கௌரவத்தை விட்டுவிடுங்கள்.  கடவுளின் அருளையும், ஆசியையும் பெறமுயலுங்கள்.  அவரின் சந்நிதானத்தில் கௌரவம் அடையுங்கள்.  உலக கௌரவங்களால் வழி தவறிவிடாதீர்கள்.  இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்படவேண்டும்.  புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப்படும்.  வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்.  உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொண்டிருப்பதிலேயே மனதை ஸ்திரப்படுத்துங்கள்.  அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்.  நல்ல பழக்கங்களில் மனம் ஈடுபட்டிருப்பதற்கு இதுவே அடையாளம்.  மனம் அலையும் தன்மை உடையதாய் இருந்தால் அது நன்றாக ஒன்றிவிட்டது என்று கூறமுடியாது."

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment