மொஹிதினுடன் மல்யுத்தப்பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும்
பாபாவின் மற்ற கதைகளுக்குத் திரும்புவோம். ஷீர்டியில் மொஹிதின் தம்போலி என்னும் பெயருடைய ஓர் மல்யுத்தச் சண்டைக்காரன் இருந்தான். பாபாவுக்கும், அவனுக்கும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. இருவரும் மல்யுத்தம் செய்யத் தொடங்கினர். இதில் பாபா தோற்கடிக்கப்பட்டார். அதிலிருந்து பாபா தம்முடைய உடைமையையும், வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்துக்கொண்டார். மேலாடையாக கஃப்னி அணிந்தார். லங்கோடு (இடுப்புப் பட்டை) அணிந்து தன் தலையை ஓர் துண்டுத் துணியால் மூடினார். தம்முடைய ஆசனத்திற்கு ஒரு சாக்குத் துணியையும், படுக்கைக்கு ஒரு சாக்குத் துணியையுமே உபயோகித்தார். கிழிந்த கசங்கிய கந்தல் உடைகளை அணிவதிலேயே திருப்தியடைந்தார். அவர் எப்போதும் "ஏழ்மை அரசுரிமையைவிட நன்று, இறைமையைவிட மிகமிக நன்று, கடவுள் ஏழைகளின் நிரந்தர நண்பராவார்" என்று கூறிக்கொண்டார்.
கங்காகீரும் மல்யுத்தம் செய்வதில் மிக்க விருப்பமுள்ளவர். அவர் ஒருமுறை மல்யுத்தம் செய்யும்போது ஒரு ஆசையற்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. அப்போது ஓர் குரல் அவரிடம், அவரது உடம்பைத் துறந்து கடவுளுடன் நிரந்தரமாக ஈடுபடும்படி கூறுவது கேட்டது. எனவே, அவரும் சம்சாரத்தைத் துறந்து கடவுளை நோக்கித் திரும்பினார். புண்தாம்பேக்கு அருகிலுள்ள ஓர் ஆற்றின் கரையில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார்.
சாயிபாபா மக்களுடன் கலந்து பேசுவதில்லை. அவரை யாராவது கேள்வி கேட்டபோது மட்டுமே அதற்குப் பதில் கூறினார். பகற்பொழுதில் எப்போதும் வேப்பமரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தார். சில சமயங்களில் கிராம எல்லையில் வாய்க்காலுக்கு அருகிலுள்ள ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார். மாலை நேரங்களில் அவர் குறிக்கோள் இன்றி நடப்பது வழக்கம். சில நேரங்களில் நீம்காவன் போவார். அங்கு த்ரயம்பக் டேங்க்லேயின் வீட்டிற்குப் போவார். பாபா அவரை விரும்பினார். அவரின் (பாபா சாஹேபின்) தம்பியான நானா சாஹேபுக்கு இரண்டாவது திருமணம் செய்தும் குழந்தைகள் ஏதும் இல்லை. பாபா சாஹேப், நானா சாஹேபை பாபாவின் தரிசனத்திற்காக அனுப்பினார். சில காலத்திற்குப் பிறகு பாபாவின் அருளால் நானா சாஹேப் ஒரு புதல்வனைப் பெற்றார். அதிலிருந்து சாயிபாபாவை பார்க்க மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர். அவருடைய புகழ் பரவி, அஹமத் நகரை எட்டியது. அதிலிருந்து நானா சாஹேப் சாந்தோர்க்கரும், கேசவ சிதம்பரும் மற்றும் பலரும் ஷீர்டிக்கு வரத்தொடங்கினர்.
பாபா பகற்பொழுதில் தமது அடியவர்களால் சூழப்பட்டிருந்தார். இரவில் உதிர்ந்துகொட்டும் ஒரு பழைய மசூதியில் படுத்தார். பாபாவிடம் இந்த நேரத்தில் ஹூக்கா, புகையிலை, ஒரு டம்ளர் (தகர டப்பா), நீண்ட கஃப்னி, தலையைச் சுற்றி ஒரு துண்டுத்துணி, ஒரு சட்கா (குச்சி) முதலிய சிறுசிறு உடைமைகள் இருந்தன. இவைகள் எல்லாம் பாபா எப்போதும் வைத்திருந்தார். தலையிலுள்ள அச்சிறு துணி, நன்கு முறுக்கப்பட்ட முடியைப்போல் இடது காதிலிருந்து முதுகில் தொங்கியது. இது பல வாரங்களாகத் துவைக்கப்படாதது. அவர் எவ்வித பூட்ஸோ, காலணியோ அணியவில்லை.
நாட்களின் பெரும்பகுதிக்கு ஒரு சாக்குத்துணியே அவரின் ஆசனமாகும். ஒரு கௌபீனத்தை அவர் அணிந்திருந்தார். குளிரை விரட்ட எப்போதும் துனியின் (புனித நெருப்பின்) முன்னால் இடது கையை மரக்கட்டைப் பிடியின்மீது வைத்தவாறு தெற்கு நோக்கி அமர்ந்திருந்தார். அந்தத் துனியில் அஹங்காரம், ஆசைகள், எல்லாவித எண்ணங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாகப் போட்டார். 'அல்லா மாலிக்' (கடவுளே ஒரே உரிமையாளர்) என்று கூறினார்.
எல்லா பக்தர்களும் வந்து அவரைத் தரிசித்ததும், அவர் அமர்ந்திருந்ததுமான மசூதியானது இரண்டு அறைகளின் அளவே இருக்கும். 1912க்குப் பிறகு ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பழைய மசூதி பழுபார்க்கபட்டு ஒரு தாழ்வாரம் எழுப்பப்பட்டது. இம்மசூதியில் பாபா தங்கவருவதற்குமுன் தகியா என்ற இடத்தில் (முஸ்லிம் ஞானியரின் இருப்பிடம்) வசித்து வந்தார். அங்கேதான் பாபா கால்களில் சலங்கை கட்டி, அழகாக நடனம் செய்துகொண்டு அன்புடன் பாடினார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும
(தொடரும்…)

No comments :
Post a Comment