சந்தனக்கூடு ஊர்வலம்
இத்திருவிழாவில் மற்றொரு ஊவலமும் தொடக்கப்பட்டது. கொரலாவின் முஹமதிய பக்தரான அமீர் ஷக்கர் தலால் அவர்களால் இச்சந்தன ஊர்வலத்தின் எண்ணம் உருவானது. பெரும் முஹமதிய ஞானியரைக் கௌரவிக்கும் முகமாக இவ்வூர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் 'தாலி' என்னும் தட்டுக்களில் இடப்பட்டு, பேண்டு (சங்கீத இசைக் கூட்டம்) வாத்தியம் மற்றும் இசை முழங்கிவர நறுமணப் பொருட்கள் முன்னால் புகைந்துகொண்டு செல்ல கிராமத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. மசூதிக்குத் திரும்பியபின்னர் தட்டுக்களில் உள்ளவை நிம்பார் என்னும் தொழுகைமாடத்தில் தெளிக்கப்பட்டு மசூதியின் சுவரில் கைகளால் பூசப்பெற்றது. முதல் மூன்று ஆண்டுகளில் அமீர் ஷக்கர் அவர்களால் இவ்வேலை மேற்பார்வையிடப்பட்டது. பின்னர் அவரது மனைவியால் பார்க்கப்பட்டது. எனவே ஒரே நாளில் முஹமதியரால் சந்தனக்கூடும், இந்துக்களால் கொடிகளும் அருகருகில் சென்றன. இப்போதும் எவ்வித இடையூறுமின்றி அங்ஙனமே நடந்துகொண்டிருக்கிறது.
ஏற்பாடு
சாயிபாபாவின் அடியவர்களுக்கு இந்தநாள் புனிதமானதும் மிகவும் பிரியமானதுமாகும். பெரும்பாலான அடியவர்கள் கூடி விழாவை நிர்வகிப்பதில் பங்கு வகித்தனர். எல்லா வெளி ஏற்பாடுகளையும் தாத்யா கோதே பாடீல் பார்த்துக்கொண்டார். உள்நிர்வாகம் முழுவதும் சாயிபாபாவின் பக்தையான ராதாகிருஷ்ணமாயிடமே ஒப்புவிக்கப்பட்டது. அவ்விழாவின்போது அவளது இருப்பிடம் விருந்தாளிகளால் நிறைந்து இருந்தது. அவர்களது தேவைகளையும், விழாவிற்குத் தேவையான ஏற்பாட்டையும் அவள் கவனித்தாக வேண்டும். மசூதி முழுவதும் அதன் சுவர், தரை முதலியவைகளைக் கழுவி சுத்தம்செய்து, சாயிபாபாவின் அணையா விளக்கான துனியினால் கரிபிடித்து கறுத்துப் போயிருக்கும் மசூதிச் சுவர்களை எல்லாம் வெள்ளையடிப்பதும் அவள் விருப்பமுடன் செய்த மற்றொரு வேலை ஆகும். இவ்வேலையை ஒருநாள் விட்டு ஒருநாள் சாயிபாபா சாவடிக்குத் தூங்கப்போயிருக்கும் முந்தைய இரவில் செய்வாள். துனி (அணையா நெருப்பு) உட்பட எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கசடறக் கழுவி மசூதிச் சுவரை வெள்ளையடித்த பின்னர் முன்போல் திருப்பி வைத்துவிடவேண்டும். இத்திருவிழாவில் சாயிபாபாவிற்கு மிகவும் பிடித்த அம்சமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதலும் ஒரு பெரும் நிகழ்ச்சியாகும். ராதாகிருஷ்ணமாயின் இருப்பிடத்தில் பெருமளவில் சமையலும், பல்வேறு வகையான உணவுப் பொருட்களும், இனிப்புப் பதார்த்தங்களும் தயாரிக்கப்பட்டன. பல்வேறு செல்வந்தர்களான பக்தர்கள் இந்நிகழ்சிகளில் பெரும் பங்கு வகித்தனர்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment