'உருஸ்'ஐ ராமநவமித் திருவிழாவாக மாற்றுதல்
இவ்வாறாக விஷயங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தன. 1912ஆம் ஆண்டுவரை இவ்விழா படிப்படியாக முக்கியத்துவம் அடைந்துவந்து பிறகு ஒரு மாறுதல் நிகழ்ந்தது. அந்த ஆண்டு கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மர் (சாயி சகுணோபாசனா என்ற சிறு புத்தகத்தின் ஆசிரியர்), அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயுடன் திருவிழாவிற்கு வந்து முந்தைய தினம் தீஷித் வாதாவில் தங்கியிருந்தார். அவர் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டிருந்தபோது லக்ஷ்மண்ராவ் என்ற காகா மஹாஜனி, மசூதிக்குப் பூஜை சாமான்களுடன் போய்க்கொண்டு இருந்தார். அப்போது பீஷ்மாவுக்கு ஒரு புது எண்ணம் தோன்றியது. அவர் காகாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்.
"ஷீர்டியில் 'உருஸ்' அல்லது 'சந்தனத் திருவிழா', ராமநவமியன்று கொண்டாடப்படும் உண்மைக்கு ஏதோ ஒரு தெய்வ ஏற்பாடு இருக்கிறது. இந்துக்களுக்கு ராமநவமி தினம் மிகவும் முக்கியமானது. பின்னர் ஏன் இந்த நாளில் ராமநவமிக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கக்கூடாது?" காகா மஹாஜனி இக்கருத்தை விரும்பினார். பாபாவின் அனுமதியை இவ்விஷயத்தில் பெறுவது என முடிவுசெய்யப்பட்டது. அத்திருவிழாவில் கீர்த்தனை செய்யும் (கடவுளின் புகழைப் பாடும்) ஹரிதாஸை(பாடகர்) எங்கனம் அடைவது என்பது முக்கியமான விஷயமாகும். ராமர் பிறந்ததைப் பற்றி தன்னுடைய பாடல்களான 'ராம அக்யன்' தயாராய் இருப்பதாகவும், தானே இக்கீர்த்தனைகளைப் பாடுவதாகவும் கூறி, பீஷ்மா இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டார். காகா மஹாஜனி, அப்போது ஹார்மோனியம் வாசிக்கவேண்டும். ராதாகிருஷ்ணமாயியால் தயாரிக்கப்பட்ட சுண்ட்வடா(சர்க்கரை கலந்த இஞ்சிப்பொடி) பிரசாதமாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்பு அவர்கள் பாபாவின் அனுமதியைப் பெறுவதற்குச் சென்றனர். அங்கு நடந்துகொண்டிருந்த எல்லாவற்றையும் அறிந்திருந்த பாபா, "வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது" என்று மஹாஜனியிடம் வினவினார். குழப்பமடைந்த மஹாஜனி கேள்வியின் அர்த்தத்தை அறியமுடியாமல் அமைதியாக இருந்தார். பின்னர் பாபா, பீஷ்மாவை அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டார்.
ராமநவமித் திருவிழா கொண்டாடுவதன் கருத்தை அவர் தெரிவித்துப் பாபாவின் அனுமதியைக் கோரினார். பாபாவும் உடனே அனுமதி கொடுத்தார். எல்லோரும் மகிழ்ச்சியுற்று ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத்தொடங்கினர். மறுநாள், மசூதி துணி ஜோடனையால் அலங்கரிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணமாயியால் ஒரு தொட்டில் கொடுக்கப்பட்டது. பாபாவின் ஆசனத்தின் முன்னர் அது வைக்கப்பட்டு நிகழ்சிகள் ஆரம்பமாயின. பீஷ்மா கீர்த்தனைக்காக முன்னால் எழுந்து நின்றார். மஹாஜனி ஹார்மோனியம் வாசித்தார். மகாஜனியைக் கூப்பிடும்படி சாயிபாபா ஒரு ஆளை அனுப்பினார்.
பாபா நிகழ்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிப்பாரா என ஐயம் கொண்டு மஹாஜனி போகத் தயங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் போனபின்பு பாபா அவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றும், தொட்டில் ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டார். அவர் (மஹாஜனி) ராமநவமித் திருவிழா தொடக்கப்படிருக்கிறது என்றும், தொட்டில் அதற்காக வைக்கப்படிருக்கிறது என்றும் கூறினார். அப்போது பாபா நிம்பாரிலிருந்து ஒரு மாலையை எடுத்து அவர் கழுத்திலிட்டு, பீஷ்மாவுக்கு மற்றொரு மாலையை அனுப்பினார். கீர்த்தனை துவங்கியது. அது முடிவடைந்ததும் 'ஸ்ரீ ராமருக்கு ஜெயம்' என்ற கோஷம் வானைப் பிளந்தது. குலால் என்ற சிகப்புப் பொடி வாத்திய கோஷத்திடையே சுற்றிலும் தூவப்பட்டது.
எல்லோரும் பெருமகிழ்ச்சியுற்றிருக்கையில் ஒரு கர்ஜனை கேட்டது. கண்டபடி தூவப்பட்ட சிகப்புப் பொடியானது பாபாவின் கண்களுக்குள் சென்றுவிட்டது. பாபா கோபாவேசம் அடைந்து, பெருங்குரலில் திட்டவும், கடிந்துகொள்ளவும் ஆரம்பித்தார். இக்காட்சியால் மக்கள் பீதியடைந்து ஓட ஆரம்பித்தார்கள். பாபாவை நன்கு அறிந்த அவருடைய நெருங்கிய பக்தர்கள் பாபாவின் கடிந்துரைகளையும், திட்டல்களையும் வேஷமிடப்பட்ட ஆசீர்வாதங்கள் என்று எடுத்துக்கொண்டனர்.
ராமர் அவதரித்ததும், இராவணனையும் - அஹங்காரம், கெட்ட எண்ணங்கள் முதலிய அவனுடைய அரக்கர்களையும் கொல்வதற்காக, பாபா கடுமையான கோபாவேஷம் அடைந்ததும் முறையே என அவர்கள் நினைத்தனர். மேலும் ஷீர்டியில் ஏதாவது ஒரு புதிய வேலை ஆரம்பிக்கப்படுமானால், பாபா கடுமையாக கோபம்கொள்வது வழக்கம். எனவே அவர்கள் அமைதியாய் இருந்தார்கள். பாபா, தமது தொட்டிலை உடைத்து விடுவார் என்று ராதாகிருஷ்ணமாயி பயந்துபோய் மகாஜனிஜிடம் தொட்டிலை எடுத்து வந்துவிடும்படி கூறினாள். அவர் சென்று தொட்டிலைத் தளர்த்தி கழற்றப்போன சமயம், பாபா அவரிடம் சென்று தொட்டிலை அகற்றவேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் சற்று நேரத்தில் பாபா சாந்தமடைந்தார். பின்பு மகாபூஜை, ஆரத்தி உள்ளிட்ட அந்நாளைய நிகழ்சிகள் எல்லாம் நிறைவேறின. பிறகு மகாஜனி, பாபாவிடம் தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதி கேட்டார். இன்னும் விழா முடியவில்லை எனக்கூறி பாபா மறுத்துவிட்டார். அடுத்த நாள் கீர்த்தனையும், கோபால்காலா விழாவும் நடைபெற்றன. (கீர்த்தனைக்குப் பிறகு தயிரும், பொறி அரிசியும் கலந்த ஓர் மண்பானை உடைப்பதற்காகத் தொங்கவிடப்பட்டிருக்கும், கிருஷ்ண பரமாத்மா தன் நண்பர்களான கோபாலர்களுக்குச் செய்ததையொப்ப, அதனுள் இருப்பவை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்) அதன் பின்னரே பாபா, தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதித்தார்.
இவ்வாறாக ராமநவமித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பகலில் இரண்டு கொடி ஊர்வலமும், இரவில் சந்தனக்கூடு ஊர்வலமும் வழக்கமான கோலாகலத்துடனும், அனைவரின் ஆராவாரத்துடனும் நல்லமுறையில் நடைபெற்றன. இத்தருணத்திலிருந்து பாபாவின் உருஸ் விழாவானது, ராமநவமித் திருவிழாவாக மாற்றப்பட்டது.
அடுத்த ஆண்டிலிருந்து (1913) ராமநவமியின் நிகழ்ச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன. ராதாகிருஷ்ணமாயி சித்திரை முதல் தேதியிலிருந்து நாம சப்தாஹம் செய்ய ஆரம்பித்தாள். எல்லோரும் முறை வைத்துப் பங்கெடுத்துக்கொண்டனர். அவளும் சிலநாட்கள் அதிகாலையில் கலந்துகொண்டாள். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ராமநவமி கொண்டாடப்படுவதால் ஹரிதாஸை(பாடகர்) பெரும் கஷ்டமானது மீண்டும் உணரப்பட்டது. ஆனால் விழாவிற்கு ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குமுன் நவீன துகாராம் என்றறியப்பட்ட பாலபுவாமாலியைத் தற்செயலாக மகாஜனி சந்தித்தார். அவரை அவ்வாண்டு கீர்த்தனை புரியச்செய்தார். அடுத்த ஆண்டு (1914) சாதாரா ஜில்லா, பிர்ஹாட்ஸித்த கவடே நகரைச் சேர்ந்த பாலபுபா சாதார்கர் என்பவர் தமது நகரில் பிளேக் (ஒரு கொடிய பக்டீரியா தொற்றுநோய்) பரவியிருந்த காரணத்தால் அங்கு ஹரிதாஸாக இயங்கமுடியவில்லை. எனவே, ஷீர்டிக்கு வந்து, காகா சாஹேப் மூலம் பெற்ற அனுமதியுடன் கீர்த்தனை செய்தார். அவரது முயற்சிக்குப் போதுமான அளவு சன்மானம் கொடுக்கப்பட்டது. முடிவாக ஒவ்வோர் ஆண்டும் புதிய "ஹரிதாஸ்" ஒருவர் கிடைக்கப்பெறும் சிரமத்தை 1914ன் பின் தாஸ்கணு மஹராஜை இப்பணியில் சாயிபாபா நிரந்தரமாக நியமித்ததன் மூலம் தீர்த்தார். அந்நாளிலிருந்து தற்போது வரைக்கும் அவ்வேளையைத் தாஸ்கணு வெற்றிகரமாயும், சிறப்பானமுறையிலும் நிறைவேற்றி வருகிறார்.
1912ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா படிப்படியாக வளரத் தொடங்கியது. சித்திரை 8ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை ஷீர்டி, தேன் கூட்டைப்போல் மக்கள் திரளாகக் காட்ச்சியளித்தது. கடைகள் அதிகரிக்கத் தொடங்கின. மல்யுத்தப் போட்டிகளில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு எடுத்துக்கொண்டனர். முன்னைவிடப் பெரியஅளவில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது.
ராதாகிருஷ்ணமாயியின் பேருழைப்பு, ஷீர்டியை ஒரு சமஸ்தானமாக்கியது. அதற்குத் தேவையான பொருட்கள் சேர்க்கப்பட்டன. ஓர் அழகான குதிரை, பல்லக்கு, ரதம், வெள்ளிப் பொருட்கள், பாத்திரங்கள், பானைகள், வாளிகள், படங்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் முதலியவை அன்பளிப்பாக சமர்ப்பிக்கப்பட்டன. இங்ஙனம் தமக்காக உள்ள பொருட்கள் எல்லாம் ஏராளமாக அதிகரித்த போதிலும் சாயிபாபா அவைகளை எல்லாம் மதிக்காது, தமது எளிமையை முன்போலவே பாதுகாத்து வந்தார். இரண்டு ஊர்வலங்களிலும் இந்துக்களும், முஹமதியர்களும் ஒன்றாக வேலை செய்துவந்தும் அவர்களிடையே இதுவரை எவ்விதச் சச்சரவோ, இடையூறோ இருந்ததேயில்லை. ஆரம்பத்தில் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் மக்கள்வரை கூடுவது வழக்கமாக இருந்தது. அனால் அவ்வெண்ணிக்கை சில ஆண்டுகளில் எழுபத்தைந்தாயிரமாக அதிகரித்தது. எனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விதத்தில் எவ்விதத் தொற்றுவியாதியோ, கலகமோ கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டதேயில்லை.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment