Tuesday, 28 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 12 - பகுதி 6

No comments

ஒரு டாக்டர்:

ஒருமுறை ஒரு மம்லதார் தனது டாக்டர் நண்பருடன் ஷீர்டிக்கு வந்தார்.  தனது தெய்வம் ராமர் என்றும், தான் ஒரு முஹமதியர் முன் பணியப் போவதில்லை என்றும் கூறி, ஷீர்டிக்கு வர விருப்பமில்லாதவராய் இருந்தார்.  மம்லதார் அவரிடம், அவரைப் பணியும்படி ஒருவரும் கேட்கவோ, வற்புறுத்தவோ மாட்டார்கள் என பதில் உரைத்தார்.  எனவே தோழமைக் கூட்டின் மகிழ்ச்சியை நல்குதற்காக அவரும் உடன் வருதல் வேண்டும்.  அவ்வாறாக அவர்கள் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.  டாக்டர் முன்னால் சென்று வணங்குவதைக் கண்ணுற்ற அனைவரும் ஆச்சரியத்தால் செயலிழந்தனர்.  

அவர் எங்ஙனம் தனது தீர்மானத்தை மறந்து முஹமதியர் முன் பணிந்தார் என்று அனைவரும் அவரைக் கேட்டனர்.  தனது அன்பிற்குரிய தெய்வம் ராமரையே ஆசனத்தில் பார்த்ததாகவும், எனவே தாம் சாஷ்டாங்கமாக வணங்கியதாகவும் கூறினார்.  இதை அவர் சொல்லும்போதே சாயிபாபாவை மீண்டும் அங்கே கண்டார்.  திகிலுற்ற அவர், "இது கனவா? எங்ஙனம் அவர் முஹமதியராக இருக்கமுடியும்?  அவர் ஒரு மாபெரும் யோகநிறை (யோகசம்பன்ன) அவதாரம் ஆவார்" என நினைத்தார்.

அடுத்தநாள், தான் உண்ணாமல் விரதம் இருப்பதென்று சபதம் எடுத்துக்கொண்டார்.  மசூதிக்குப் போவதைத் தவிர்த்து, பாபா தன்னை ஆசீர்வதிக்கும்வரை அங்கு போவதில்லை எனத் தீர்மானம் செய்துகொண்டார்.  மூன்று நாட்கள் கடந்தன.  நான்காவது நாள் கான்தேஷிலிருந்து அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்து சேர்ந்தார்.  அவருடன் பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றார்.  வணக்கதிற்குப்பின் "ஓ! டாக்டரா, உம்மை இங்கு அழைத்துவர கான்தேஷிலிருந்து யார் வந்தது என்று எனக்கு முதலில் சொல்லும்?" என்று பாபா அவரைக் கேட்டார்.  இந்த முக்கியமான வினாவைக்கேட்டு டாக்டர் மனதுருகினார்.  அன்றிரவே அவர் பாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டார்.  தூக்கத்தில் பேரானந்தப் பெருநிலையை (Bliss Supreme) அனுபவித்தார்.  இங்ஙனம் சாயிபாபாவிடம் அவரது பக்தி பன்மடங்காகப் பெருகியது.

வேறு எவ்விடத்திலும் இல்லாமல், நாம் நம்முடைய குருவினிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராய் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதைகளின், முக்கியமாக முலே சாஸ்திரியின் கதையினுடைய நீதியாகும்.  அடுத்த அத்தியாயத்தில் இன்னும் அதிக லீலைகள் விவரிக்கப்படும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                         (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 12 - பகுதி 5

No comments


நாசிக் முலே சாஸ்திரி:

ஜோசியம், கைரேகை முதலியவற்றில் கரைகண்டவரும், ஆறு சாஸ்திரங்களைக் கற்றறிந்தவருமாகிய நாசிக்கைச் சேர்ந்த வைதீகமான அக்னிஹோத்ரி அந்தணர் முலே சாஸ்திரி ஒருமுறை நாக்பூரின் புகழ்பெற்ற கோடீஸ்வரரான பாபு சாஹேப் பூட்டியைச் சந்திக்க ஷீர்டிக்கு வந்தார்.  அவரைச் சந்தித்தபின்னர், அவரும் மற்றவர்களும் பாபாவைக் காண மசூதிக்குச் சென்றனர்.  பாபா தம்முடைய சொந்தப் பணத்திலேயே வெவ்வேறு பழங்களையும், மற்றப் பொருட்களையும் விற்பனையாளரிடமிருந்து வாங்கி மசூதியிலுள்ள மக்களுக்கு விநியோகித்தார்.

பாபா மாம்பழத்தை அதன் எல்லாப் பக்கங்களிலும் மிகத் திறமையாக அழுத்துவது வழக்கம்.  ஒருவன் பாபாவிடமிருந்து அதை வாங்கி உறிஞ்சுவானேயாகில், எல்லா சதைப்பற்றையும் உடனே தன வாயில் உறிஞ்சிக்கொண்டு கொட்டையையும், தோலையும் உடனே தூக்கி எறிந்துவிட முடியும்.  வாழைப் பழங்களை உரித்து சதைப்பற்றை அடியவர்க்கு விநியோகித்து, தோலை பாபா தமக்காக வைத்துக்கொள்வார்.  கைரேகை சாஸ்திரி என்ற முறையில் முலே சாஸ்திரி, பாபாவின் கையைப் பரிசோதிக்க விரும்பினார்.  பாவிடம் கையைக் காண்பிக்கக் கோரினர்.  பாபா அவருடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.  அவருக்கு நான்கு வாழைப்பழங்களைக் கொடுத்தார்.  எல்லோரும் வாதாவுக்குத் திரும்பினர்.

முலே சாஸ்திரி குளித்துப் புனித ஆடைகள் அணிந்து அக்னிஹோத்ரம் போன்ற தன நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்ய ஆரம்பித்தார்.  பாபா வழக்கம்போல் லெண்டியை நோக்கிப் புறப்பட்டார்.  "கொஞ்சம் ஜெரு எடு, (குங்குமப்பூ நிறத்தில் துணியைச் சாயம் போடுவதற்கான சிவப்பு மண்ணைப்போன்ற ஒரு பொருள்) நாம் இன்று குங்குமப்பூ நிற உடை உடுத்தலாம்" என்று பாபா கூறினார்.  பாபா என்ன சொல்கிறார் என்று ஒருவருக்கும் விளங்கவில்லை.  சிறிது நேரம் கழித்து, பாபா திரும்பி வந்தார்.  மத்தியான ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.  

பாபு சாஹேப் ஜோக், முலே சாஸ்திரியிடம் அவர் தன்னுடன் ஆரத்திக்கு வருகிறாரா என்று கேட்டார்.  மாலையில் தாம் பாபாவைப் பார்க்கப்போவதாக அவர் பதிலளித்தார்.  இதற்குச் சிறிது நேரத்திற்குப்பின் பாபா தமது ஆசனத்தில் அமர்ந்தார்.  அடியவர்களால் வழிபடப்பட்டார்.  ஆரத்தியும் துவங்கியது.  பிறகு பாபா "புது பிராமணனிடமிருந்து தட்ஷனை வாங்கி வா" எனக் கூறினார்.  பூட்டி தாமே தட்ஷனை வாங்கச் சென்றார்.  பாபாவின் செய்தியை முலே சாஸ்திரியிடம் தெரிவித்தபோது அவர் சொல்லப்பெறாத அளவு குழப்பம் அடைந்தார்.  "நான் தூய அக்னிஹோத்ரி பிராமணன்.  நான் ஏன் தட்ஷனை கொடுக்கவேண்டும்?  பாபா பெரிய முனிவராக இருக்கலாம்.  நான் அவரது சீடனல்ல!" என நினைத்தார்.  ஆனால் சாயிபாபாவைப் போன்ற ஞானி, பூட்டியைப் போன்ற கோடீஸ்வரரிடம் தட்ஷனை கேட்டனுப்பியிருப்பதனால் அவரால் மறுக்க இயலவில்லை.  எனவே தனது அனுஷ்டானத்தைப் பூர்த்தியாக்காமல் உடனே பூட்டியுடன் மசூதியை நோக்கிச் சென்றார்.

தம்மைத் தூயவராகவும், புனிதமானவராகவும், மசூதியை வேறுவிதமாகவும் கருதிய அவர் சற்று தூரத்தில் இருந்தே கைகளைச் சேர்த்து பாபாவின்மீது புஷ்பங்களை வீசினார்.  அப்போது ஆஹா! திடீரென்று ஆசனத்தில் அவர் பாபாவைக் காணவில்லை.  காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமியையே அங்கு கண்டார்.  ஆச்சரியத்தால் அவர் செயலிழந்தார்.  இது கனவாயிருக்குமோ?  அல்ல, அங்ஙனமன்று!  அவர் அகல விழித்திருந்தார்.  காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமி எங்ஙனம் அங்கு இருக்கமுடியும்?  சிறிதுநேரம் அவர் பேச்சற்றுவிட்டார்.  தன்னையே கிள்ளிவிட்டுக்கொண்டார்.  திரும்பவும் நினைத்தார்.  ஆனால் காலஞ்சென்ற தனது குரு மசூதியில் இருக்கும் உண்மையை அவரால் ஏற்கமுடியவில்லை.  முடிவில் எல்லா ஐயங்களையும் களைந்துவிட்டுத் தெளிந்தநிலையில் தனது குருவின் அடிகளில் பணிந்து, கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார்.  

மற்ற எல்லோரும் ஆரத்தி பாடுகையில் முலே சாஸ்திரி தனது குருவின் பெயரை இரைந்து கூக்குரலிட்டார்.  இனப்பெருமை, புனிதத்தன்மை பற்றிய எண்ணங்களை ஒதுக்கி எறிந்துவிட்டு தனது குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்களை மூடிக்கொண்டார்.  எழுந்திருந்தபோது பாபா தட்ஷணை கேட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார்.  பாபாவின் பேரானந்த ரூபத்தையும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரின் சக்தியையும் கண்டு முலே சாஸ்திரி தன்னையே மறந்தார்.  எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்.  ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.  திரும்பவும் பாபாவை வணங்கி தட்ஷணை கொடுத்தார்.  தனது சந்தேகம் நீங்கிவிட்டதாகவும், தன் குருவையே கண்டதாகவும் அவர் கூறினார்.  

பாபாவின் இந்த லீலையைக் கண்ணுற்ற அனைவரும், முலே சாஸ்திரி உட்பட, மிகவும் மனதுருகிப்போயினர்.  "ஜெரு எடு, நாம் இன்று குங்குமப்பூ வண்ண உடை உடுத்தலாம்" என்ற பாபாவின் பொன்மொழிகளை இப்போது புரிந்துகொண்டனர்.  சாயிபாபாவின் லீலை அத்தகைய அற்புதம் வாய்ந்ததாகும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 12 - பகுதி 4

No comments


திருமதி நிமோண்கர்:

நிமோணின் வாடண்டர் (சேவையாகச் செய்யும் கௌரவபதவி - Honorary Magistrate) நானா சாஹேப் நிமோண்கர், தமது மனைவியுடன் ஷீர்டியில் தங்கியிருந்தார்.  நிமோண்கரும் அவரது மனைவியும் மசூதியில் பாபாவுடன் பெரும்பாலான நேரத்தைக் கழித்து அவருக்குச் சேவை செய்துவந்தனர்.  பெலாபூரில் அவர்களது மகன் நோய்வாய்ப்பட்டான்.  பாபாவின் சம்மதத்துடன், பெலாபூர் சென்று மகனையும், மற்ற உறவினர்களையும் கண்டு அங்கு சில நாட்கள் தங்கிவரலாம் என்று அன்னை தீர்மானித்தாள்.

ஆனால் நானா சாஹேப் அடுத்த நாளே அவளைத் திரும்பி வரும்படி கூறினார்.  அன்னைக்கு ஒன்றும் புரியவில்லை.  என்ன செய்வதென்றும் தெரியவில்லை.  ஆனால் அவளுடைய இறைவன் சாயி அவளுக்கு உதவிட வந்தார்.  ஷீர்டியை விட்டுப் புறப்படும்போது, அவள் சாதேவின் வாதாவுக்கு முன்னால் நானா சஹேப்புடனும் மற்றவர்களுடனும் நின்றுகொண்டிருந்த பாபாவின் முன்சென்று சாஷ்டாங்கமாய் விழுந்து புறப்படுவதற்கு அனுமதி கேட்டாள்.  பாபா அவளிடம், "போ, சீக்கிரம் போ, அமைதியாகவும், குழப்பமடையாமலும் இரு.  நான்கு நாட்களுக்கு பெலாபூரில் சௌகரியமாக இரு.  உனது உறவினர்களை எல்லாம் கண்டபின் ஷீர்டிக்குத் திரும்பு" என்று உரைத்தார்.  பாபாவின் மொழிகள் எத்தகைய அதிஷ்டம் படைத்தது.  நானா சாஹேபின் தீர்மானம் பாபாவின் தீர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டது.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 12 - பகுதி 3

No comments

வக்கீல் பாவ் சாஹேப் துமால்:

இப்போது மாறுபாடான ஒரு கதையைக் கேளுங்கள்.  ஒருமுறை பாவ் சாஹேப் துமால் ஒரு விசாரணைக்காக நிபாட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.  வழியில் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று உடனே  நிபாட்டிற்குச் செல்ல விரும்பினார்.  ஆனால் பாபா அவரை அங்ஙனம் செய்ய அனுமதிக்கவில்லை.  ஒரு வாரமோ, அல்லது அதற்கு மேலோ அவரை ஷீர்டியில் தங்கவைத்தார்.  இதே நேரத்தில் நிபாட்டில் உள்ள நியாயாதிபதி அடிவயிற்றில் ஏற்பட்ட வலியினால் மிகவும் துன்புற்றார்.  எனவே, விசாரணை ஒத்திப்போடப்பட்டது.  துமால் அங்கு சென்றபின்னரே விசாரணை தொடர்ந்தது.  முடிவில் துமால் வெற்றி பெற்றார்.  அவரது கட்சிக்காரர் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கபட்டார்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 12 - பகுதி 2

No comments

காகா மகாஜனி:

ஒருமுறை காகா மகாஜனி ஷீர்டிக்கு பம்பாயிலிருந்து சென்றார்.  அவர் அங்கு ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார்.  பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடனே, பாபா அவரை, "எப்போது வீட்டிற்குத் திரும்பப்போகிறாய்?" எனக் கேட்டார்.  அவர் இத்தகைய வினாவினால் ஆச்சரியமே அடைந்தாரெனினும் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, பாபா தம்மை அங்ஙனம் செய்ய எப்போது ஆணையிடுகிறாரோ அப்போதே தாம் வீட்டிற்குப் போகப் போவதாகக் கூறினார்.  பாபா, "நாளைக்குப் போ!" எனக் கூறினார்.

பாபாவின் மொழிகளே சட்டமானதால், அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.  எனவே உடனே காகா மஹாஜனி ஷீர்டியை விட்டுப் புறப்பட்டார்.  பம்பாயில் தனது அலுவலகத்திற்குச் சென்றபின்னர், தனது எஜமானர் தன்னுடைய வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார்.  எனவே காகாவின் வரவு அவருக்குத் தேவைப்பட்டது.  ஷீர்டியில் காகாவுக்கு ஓர் கடிதம் அனுப்பியிருந்தார்.  பம்பாய்க்கு அது திருப்பி அனுப்பப்பட்டது.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 12 - பகுதி 1

No comments

இந்த அத்தியாயத்தில் பக்தர்கள் பாபாவினால் எவ்வாறு வரவேற்கப்பட்டு நடத்தப்பட்டார்கள் என்பதைக் காண்போம். 

நல்லோரைக் காத்துக் கொடியோரை அழிப்பதே தெய்வ அவதாரத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் என்பதை முன்னரே கண்டோம்.  ஞானிகளின் இறையருட்கட்டளைப் பணியோ முற்றிலும் மாறுபாடானது.  அவர்கட்கு நல்லோரும், கொடியோரும் ஒன்றே.  தீது செய்பவர்க்காக வருந்தி அவர்களை நெறிப்படுத்துகிறார்கள்.  அவர்கள் பவசாகரத்தைக் (இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலை) குடிக்கும் அகஸ்தியர் அல்லது அறியாமை இருளை ஒழிக்கும் ஆதவன் ஆவார்கள்.  ஞானிகளிடம் கடவுள் வசிக்கிறார்.  உண்மையில், அவரிடமிருந்து அவர்கள் வேறானவர்கள் அல்லர்.  பக்தர்கள் நன்மைக்காக அவதரிக்கும் இத்தகையவர்களுள் ஒருவரே நமது சாயி ஆவார்.

ஞானத்தின் உச்சக்கட்டத்தில் தெய்வீக ஒழி சூழப்பட்டு எல்லா ஜந்துக்களையும் சமமாக நேசித்திருந்தார்.  அவர் பற்றற்றவர்.  பகைவர்களும், நண்பர்களும், அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே.  அவருடைய அசாதாரணத் திறமையைச் செவிமடுங்கள்.  அடியவர்களுக்காகத் தமது தகைமைக் களஞ்சியத்தைச் செலவிட்டார்.  அவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் விழிப்பாய் இருந்தார்.  ஆனால் அவராக அடியவர்களை வரவேற்க எண்ணினாலொழிய ஒருவரும் அவரை அணுக இயலாது.  அவர்களது முறை வரவில்லையானால் பாபா அவர்களை நினைப்பதில்லை.  அவருடைய லீலைகளும் அவர்களின் காதை எட்டவியலாது.  பிறகு அவர்கள் எங்ஙனம் அவரைப் பார்க்க எண்ணமுடியும்?

சிலர் சாயிபாபாவைப் பார்க்க விரும்பினர்.  ஆயினும் அவரின் மஹாசமாதிவரை அவரின் தரிசனத்தைப்பெற அவர்களுக்கு வாய்ப்பேதும் கிடைக்கவில்லை.  பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய பலரின் விருப்பமானது இங்ஙனம் நிறைவேறாமல் போயிற்று.  அவர்மீது நம்பிக்கை கொண்ட இத்தகையோர் அவரது லீலைகளைச் செவிமடுப்பாராயின் பாலுக்கான (தரிசனத்திற்கான) அவர்களது ஏக்கமானது வெண்ணெயினால் (லீலைகளால்) பெருமளவு திருப்திப்படுத்தப்படும்.

வெறும் அதிஷ்டத்தினாலேயே ஷீர்டி சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்ற சிலர், நீண்ட நாட்கள் அங்கு தங்க இயலுமா? இயலாது.  ஒருவரும் தாமாகவே ஷீர்டி செல்லமுடியாது.  தாம் நினைத்தபடி அங்கு நீண்டநாட்கள் இருக்கமுடியாது.  பின்னர், அவர்களுக்கு அனுமதி கொடுத்த நாட்கள் வரைக்குமே அவர்கள் தங்கவேண்டும்.  பாபா அவர்கள் அவ்விடத்தை விட்டுப் போகும்படி கேட்டதும் அவ்விடத்தைவிட்டுப் போய்விடவேண்டும்.  எனவே அனைத்தும் பாபாவின் சங்கல்பத்தையே சார்ந்து இருந்தன.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)

Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 11 - பகுதி 4

No comments

பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு:

பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் ஆணைக்கு ஈண்டு உதாரணமாக இரண்டு நிகழ்சிகளைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிப்போம்.

(1)  ஒருநாள் மாலைநேரத்தில் ஷீர்டியில் பயங்கரமான புயல் வீசியது.  கருமேகங்களால் வானம் திரையிடப்படிருந்தது.  காற்று பலமாக வீசத்தொடங்கியது.  மேகங்கள் கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது.  மழை வெள்ளமாய்ப் பொழியத் தொடங்கியது.  சிறிதுநேரத்தில் அவ்விடம் முழுவதும் வெள்ளக்காடாகியது.  ஷீர்டியிலிருந்த சர்வ ஜந்துக்களும், பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் பயங்கர பீதியடைந்து திரளாக மசூதியில் தஞ்சமடைந்தனர்.  ஷீர்டியில் பல கிராம தேவதைகள் இருக்கின்றன.  ஆனால் அவைகளில் எவையும் அவர்களின் உதவிக்கு வரவில்லை.  எனவே அவர்கள் எல்லோரும் தங்களது பக்தியின்பால் பற்றுமீதூறும் தங்களது கடவுளான பாபாவை, அவர் குறுக்கிட்டுப் புயலைத் தணிக்க வேண்டினர்.  பாபா மிகவும் மனது உருகினார்.  பாபா மசூதியிலிருந்து வெளிப்போழ்ந்து அதன் விளிம்பில் நின்று, பெருத்த இடிமுழக்கம் போன்ற குரலில் புயலை நோக்கி, "நிறுத்து, உன் சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு" எனக் கூறினார்.  சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது.  பின்னர் சந்திரன் வானத்தில் உதயமாகி, மக்கள் நன்றாக மகிழ்வெய்தி வீடிட்ற்குத் திரும்பினர்.

(2)  மற்றொரு சந்தர்ப்பத்தில் மத்தியான நேரத்தில் மசூதியில் துனியில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது.  அதனுடைய சுவாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது.  மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்னசெய்வதென்றே புரியவில்லை.  தண்ணீரை அதன்மீது ஊற்றும்படியோ,அல்லது சுவாலையைத் தணிப்பதற்கு வேறெதுவும் செய்யும்படியாகவோ பாபாவைக் கேட்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை.  ஆனால் சிறிதுநேரத்தில் பாபா, என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டார்.  தமது சட்காவை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின்மீது ஓங்கியடித்து, "கீழிறங்கு, அமைதியாய் இரு" என்றார்.  ஒவ்வொரு அடிக்கும் சுவாலை கீழிறங்கத் தொடங்கி சில நிமிடங்களில் குறைந்து துனி அமைதியாகவும், சாதாரணமாகவும் ஆகியது.  

இவரே நமது சாயி - கடவுளின் அவதாரமாவார்.  தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்.  தினந்தோறும் பக்தியுடன் இவ்வத்தியாயத்தைப் படிப்பவர்கள் எல்லாக் கேடுகளில் இருந்தும் விடுபடுவார்.

இதுமட்டுமன்று, எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகுவிரைவில் கடவுள்காட்சியைப் பெறுவார்.  எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக, அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

 

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 11 - பகுதி 3

No comments

ஹாஜி சிதிக்ஃபால்கே

பாபா எப்போது ஓர் அடியவரை ஏற்றுக்கொள்வார் என்பதை அறியமுடியாது.  அது அவரது இனிய சங்கல்பத்தையே பொறுத்தது.  இக்கூற்றுக்கு சிதிக்ஃபால்கேயின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.  கல்யாணைச் சேர்ந்த சிதிக்ஃபால்கே என்ற ஒரு முஹமதியப் பெருந்தகை மெக்கா, மெதீனாவுக்குப் புனித யாத்திரை செய்துவிட்டு ஷீர்டிக்கு வந்தார்.  வடக்கு நோக்கிய சாவடியில் அவர் வாழ்ந்தார்.  மசூதியின் திறந்த வெளியில் அவர் அமர்ந்தார்.  ஒன்பது மாதங்கள் பாபா அவரைப் பொருட்படுத்தவில்லை.  அவரை மசூதிக்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை.  பால்கே மிகவும் தேற்றவியலாத நிலையை எய்தி என்னசெய்வதென்று புரியாமலிருந்தார்.  யாரோ ஒருவர் அவரை ஏமாற்றமடைய வேண்டாமென்றும், பாபாவின் மிக நெருங்கிய, அருகில் உள்ள அடியவரான ஷாமா (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) மூலம் பாபாவை அணுக முயற்சிக்கும்படியும் ஆலோசனை கூறினார்.  சிவபெருமான், அவரது சேவகரும், பக்தருமான நந்தியின் மூலம் அணுகப்படுதலைப்போல, ஷாமாவின் மூலம் பாபா அணுகப்படுதல் வேண்டும் என்றும் கூறினார்.  ஃபால்கே இந்த யோசனையை விரும்பி, ஷாமாவைத் தனக்காக மன்றாடிக் கெஞ்சிக் கேட்குமாறு வேண்டினார்.

ஷாமாவும் சமத்தித்து, பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பாபாவிடம், "பாபா, பலர் இம்மசூதிக்குள் தாராளமாய் வந்து தங்கள் தரிசனத்தைப் பெற்றுப் போகும்போது, தாங்கள் ஏன் அந்த முதிர்ந்த ஹாஜியை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது?  அவரை ஒருமுறை ஆசீர்வதித்தருளலாகாதா?" என்று அவரைப்பற்றிப் பேசினார்.  அதற்கு பாபா, "ஷாமா, நீ விஷயங்களையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அளவு முதிர்சியற்றவனாய் இருக்கிறாய்.  ஃபக்கீர் (அல்லா) அனுமதிக்கவில்லைஎன்றால் நான் என்ன செய்யமுடியும்?  அவரது அருளின்றி யாரே மசூதியில் ஏற வல்லார்?  நன்று, அவரிடம் சென்று நாளை பார்வி கிணற்றுக்கருகிலுள்ள குறுகிய ஒற்றையடிப்பாதைக்கு வருவாரா எனக்கேட்டுவா" என்றார்.  ஷாமா சென்று உடன்பாட்டு விடையுடன் திரும்பிவந்தார்.

மீண்டும் அவரிடம் பாபா, "எனக்கு நாற்பதாயிரம் ரூபாய்களை நான்கு தவணைகளில் கொடுக்கச் சம்மதிப்பாரா எனக் கேள்" என்றார்.  சாமா சென்று, நாற்பது இலட்சம் ரூபாய்கள் கூடத் தர அவர் சம்மதிப்பதான பதிலுடன் திரும்பிவந்தார்.  மீண்டும் பாபா, "நாங்கள் ஒரு ஆட்டை மசூதியில் வெட்டப்போகிறோம், அவரை அதன் மாமிசம், தொடை, விதை இவைகளில் எது வேண்டுமெனக்கேள்" என்று கூறினார்.  ஹாஜி, பாபாவின் கோலாம்பாவிலிருந்து (மட்பாண்டத்திலிருந்து) ஏதாவது ஒரு சிறுதுணுக்கை பெற்றுக்கொள்வதிலேயே மகிழ்வதாகவும் ஷாமா பதில் கொண்டுவந்தார்.

இதைக்கேட்டு பாபா உணர்ச்சிவசப்பட்டு, தமது கையால் மட்கூஜாக்களையும், கோலாம்பாவையும் விட்டெறிந்துவிட்டு, நேராக ஹாஜிடம் சென்று தமது கஃப்னியை கைகளால் பிடித்துக்கொண்டு "ஏன் உன்னை நீயே தற்பெருமைப்படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப்போல் பாவனை செய்துகொண்டிருக்கிறாய்.  குர்ஆனை நீ இவ்விதமாகத்தான் கற்றுணர்ந்தாயா?  நீ உனது மெக்கா தலயாத்திரை குறித்துப் பெருமை கொள்கிறாய்.  ஆனால் நீ என்னை அறியவில்லை" என்றார்.  இவ்வாறு கடிந்துகொள்ளப்பட்டதும் ஹாஜி குழப்பமடைந்தார்.  பாபா பின்னர் மசூதிக்குச் சென்று ஒரு கூடை மாம்பழங்களை வாங்கி ஹாஜிக்குக் கொடுத்தனுப்பினார்.  பின்னர் மீண்டும் ஹாஜியிடத்துச் சென்று தம் பையிலிருந்து ரூ.55 ஹாஜியின் கைகளில் கொடுத்தார்.  அதிலிருந்து பாபா ஹாஜியை விரும்பினார்.  உணவுக்கு அவரை அழைத்தார்.  பாபா ஹாஜியை விரும்பியபோதெல்லாம் மசூதியினுள் அழைத்தார்.  பாபா சில சமயங்களில் அவருக்கு சில ரூபாய்கள் அளித்தார்.  இவ்வாறாக பாபாவின் தர்பாரில் ஹாஜியும் சேர்க்கப்பட்டார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 11 - பகுதி 2

No comments

டாக்டர் பண்டிட்டின் வழிபாடு:

ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் என்பவர் ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார்.  பாபாவை வணங்கியபின் மசூதியில் அவர் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார்.  பாபா, அவரைத் தாதாபட் கேல்கரிடம் செல்லுமாறு பணித்தார்.  தாதாபட்டிடம் அவர் சென்றார்.    தாதாபட் அவரை நன்கு வரவேற்றார்.  தாதாபட் பூஜைக்காக தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டார்.  அவருடன் டாக்டர் பண்டிட்டும் சென்றார்.  தாதாபட் பாபாவை வழிபாடு செய்தார்.  இதுகாறும் எவரும் பாபாவின் நெற்றிக்குச் சந்தனம் பூசத் துணிந்ததில்லை.  

மகால்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம்.  ஆனால் எளிய மனதுடைய இவ்வடியவரான டாக்டர் பண்டிட் பூஜைப்பொருட்கள் வைத்திருந்த டாக்டர் தாதாபட்டின் பாத்திரத்தை எடுத்துப்போய் அதிலிருந்து பிசையப்பட்ட சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் திருநீற்றுப் பட்டையை பாபாவின் நெற்றியில் இட்டார்.  பாபா, எல்லோருக்கும் வியப்பையளிக்கும் வகையில், ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அமைதியாய் இருந்தார்.

அன்றுமாலை தாதாபட் பாபாவிடம், "நெற்றியில் சந்தனம் பூசுவதை நீங்கள் தடுத்துக்கொண்டிருந்தாலும் இப்போது டாக்டர் பண்டிட் அங்ஙனம் செய்ததைத் தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள்?" என்று கேட்டார்.  இதற்கு பாபா, டாக்டர் பண்டிட் தம்மை (பாபாவை) அவரது குருவான காகாபுராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜ் என்று நம்பியிருந்ததாகவும், அவர் குருவுக்கு செய்துகொண்டிருந்ததைப் போன்றே தமது நெற்றியிலும் சந்தனம் பூசியதாகவும் தெரிவித்தார்.  எனவே பாபாவால் தடுக்க இயலவில்லை.  டாக்டர் பண்டிட்டிடம் விசாரித்ததில் பாபாவைத் தனது குரு காகாபுராணிக் என்று கருதியதாகவும் அதே மாதிரியாகவே அவரை உணர்ந்ததாகவும் கூறினார்.  எனவே அவர் தனது குருவுக்குச் செய்வதைப்போன்றே திரிபுந்த்ரத்தை பாபாவின் நெற்றியிலும் இட்டார்.

பக்தர்கள் விரும்பியவாறே தம்மை வழிபட பாபா அவர்களை அனுமதித்தார்.  எனினும் சில சமயங்களில் அவர் விநோதமானமுறையில் நடந்துகொண்டார்.  சில சமயங்களில் பூஜைத்தட்டைத் தூக்கியெறிந்து சீற்றமே அவதரித்ததுபோல் நின்றிருப்பார்.  அப்போது அவரை எவரே அணுக முடியும்?  சில சமயங்களில் அவர் பக்தர்களைக் கடிந்தார்.  சில சமயங்களில் மெழுகைக்காட்டிலும் மென்மையாய் இருந்தார்.  சாந்தத்துக்கும், மன்னிப்புக்குமான ஓர் உருவமாய் இருந்தார்.  கோபத்தால் அவர் குலுங்குவதுபோல் தோன்றினாலும், அவரது சிவந்த கண்கள் சுற்றிச்சுற்றி உருண்டாலும் அவர் அந்தரங்கமாக, பாசத்தின் தாரையாக, தாயன்பு உடையவராக இருந்தார்.

உடனே தமது அடியவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் தாம் ஒருபோதும் கோபமாக இருந்ததே இல்லை எனக்கூறி, தாயார் தங்களது குழந்தைகளை உதைத்தார்களானால், கடலானது ஆறுகளைப் புறக்கணித்ததென்றால் தாமும் அடியவர்களின் நலன்களை அலட்சியம் செய்வேன் எனவும் பகர்ந்தார்.  தமது பக்தர்களின் அடிமையான அவர் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதையும், அவர்கள் தம்மை அழைக்கும்போதெல்லாம் மறுமொழி கூறி அவர்களின் அன்பைப் பெறுவதற்குமே எப்போதும் அவர் பெரிதும் விரும்பினார்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)


ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 11 - பகுதி 1

No comments

சகுணப் பிரம்மமாக சாயி:

கடவுளுக்கு அல்லது பிரம்மத்திற்கு இரண்டு விதமான வழிபாடுகள் உண்டு. 

1.  அவதரிக்காத நிர்குண வழிபாடு

2.  அவதரித்த 'சகுண வழிபாடு'

இரண்டும் ஒரே பிரம்மத்தைக் குறித்தாலும் நிர்குணம் உருவமற்றது.  சகுணம் உருவமுள்ளது.  சிலர் முன்னதையும், சிலர் பின்னதையும் வழிபடுவதை விரும்புகிறார்கள்.  கீதையில் (அத். 12) கூறியதைப்போன்று சகுணப் பிரம்மவழிபாடு எளிதானதானதும், ஆரம்பகாலத்திற்கு உகந்ததுமாகும்.  மனிதனுக்கு உருவம் இருப்பதைப்போன்று (உடம்பு, உணர்வுகள் முதலியன) உருவத்துடன் கூடிய கடவுளை வழிபடுவது அவனுக்கு இயற்கையானதும், எளிதுமாகிறது.  சகுணப்பிரம்மத்தை சில குறிப்பிட்ட காலக்கூறுவரை வணங்கினாலொழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியுறாது.  நாம் முன்னேறும்போது அது நம்மை நிர்குணப் பிரம்மத்தை வழிபட (தியானிக்க) இட்டுச்செல்கிறது.

எனவே, நாம் சகுண வழிபாட்டுடன் ஆரம்பிப்போமாக!  உருவம், யாககுண்டம், தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்குரியவை.  எனினும், சத்குருவே இவை எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தவர்.  பற்றின்மையும், அவதாரமும், முழு மனதார்ந்த தமது அடியவர்களின் உறைவிடமுமான சாயியை இத்தருணத்தில் நினைவு கூர்வோமாக.  அவர் மொழிகளில் நமக்குள்ள நம்பிக்கையே ஆசனமாகும்.  நமது சங்கல்பமாவது (பூஜையை ஆரம்பிக்கும்போது சொல்லும் தெளிந்த தீர்மானம்) நமது ஆசைகள் அனைத்தையும் உதறித் தள்ளுதலாகும்.  சிலர், சாயி ஒரு பாகவதபக்தர் (கடவுளின் அடியவர்) என்று கூறுகின்றனர்.  மற்றும் சிலர், மஹாபாகவத் (பெரும் அடியவர்) என்றும் பகர்கின்றனர்.  ஆனால் நமக்கு அவர் கடவுளின் அவதாரமாவார்.  அவர் எல்லையற்ற அளவு மன்னிப்பாரகவும், கோபமற்றவராகவும், நேர்மையுள்ளவராகவும், மென்மையாளராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும், இருந்தார்.  அவர் உருவமுள்ளவராகத் தோன்றினாலும், உண்மையில் உருவம் அற்றவராகவும், உணர்ச்சி வேகமற்றவராகவும், பற்றற்றவராகவும், அந்தரங்கமாய் சுதந்திரமாகவும் இருந்தார்.  

கங்கை நதி, தான் கடலுக்குச்செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட ஜீவராசிகளுக்குக் குளிர்ச்சியளித்து, புதுக்கிளர்ச்சியூட்டி, பயிர்களுக்கும், மரங்களுக்கும் உயிரையளித்து, பலரின் தாகத்தையும் தணிக்கிறது.  இதைப்போன்றே சாயி போன்ற புண்ணிய புருஷர்கள் (ஆத்மாக்கள்) வாழ்ந்துகொண்டிருக்குபோதே அனைவருக்கும் துயராற்றி, ஆறுதல் நல்கிறார்கள்.  கிருஷ்ண பரமாத்மாவும், "ஞானி எனது ஆத்மா, எனது வாழும் உருவம், நான் அவரே, அவரே எனது தூய வடிவம்" என்று கூறியிருக்கிறார்.  சத்து - சித்து - ஆனந்தம் என அறியப்படும் இந்த விவரிக்க இயலாத ஆற்றல் அல்லது கடவுளின் சக்தியே ஷீர்டியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது.

ஸ்ருதி (தைத்திரீய உபநிஷதம்) பிரம்மத்தை ஆனந்தம் என விவரித்திருக்கிறது.  இதை நாம் தினந்தோறும் நூல்களில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம்.  ஆனால் இப்பிரம்மத்தை அல்லது பேரானந்தத்தை ஷீர்டியில் பக்த மஹாஜனங்கள் அனுபவிக்கிறார்கள்.  அனைவருக்கும் ஆதாரமான அவருக்கு எவரிடமிருந்தும் எந்த ஆதாரமும் தேவையிருக்கவில்லை.  ஒரு சாக்குத்துண்டையே எப்போதும் தமது ஆசனமாகக் கொண்டிருந்தார்.  பக்தர்களால் அது ஒரு மெல்லிய மெத்தைகொண்டு மூடப்பட்டிருந்தது.  அவர் சாய்ந்துகொள்ள முதுகிற்கு ஒரு திண்டும் அவர்களாலேயே வைக்கப்பட்டது.

பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார்.  அவர்கள் விருப்பப்படியே தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார்.  அவர் முன்னிலையில் சிலர் சாமரம் அல்லது விசிறி வீசினர்.  சிலர் இசைக் கருவிகள் வாசித்தனர்.  சிலர் அவரின் கைகளையும், கால்களையும் கழுவினர்.  இன்னும் சிலர் வெற்றிலை, பாக்கு மற்றும் பல பொருட்களையும் நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர்.  ஷீர்டியில் அவர் வாழ்ந்ததுபோல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார்.  அவரின் எங்குநிறை தன்மையை அவருடைய பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள்.  இவ்வாறாக எங்கணும் வியாபித்திருக்கின்ற (சர்வாந்தர்யாமி) சத்குருவுக்கு நமது பணிவான சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 9

No comments

மிகவும் எளிய வழி:

முனிவர்களுடைய கதைகளைக் கேட்பதும், அவர்களின் சத்சங்கத்தில் இருப்பதும்.  புறத்தில் சாயிபாபா சாதாரண மனிதர் போன்று நடித்தாலும், அவரது செய்கைகள் அவரது அசாதாரண புத்தி சாதுர்யத்தையும், திறமையையும் காண்பித்தன.  அவர் எதைச் செய்தபோதிலும் அவைகள் அடியவர்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன.  தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டுமுறையையோ, அவர் வகுத்துரைக்கவில்லை.  அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை.  எல்லாவித புத்திசாலித்தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் 'சாயி சாயி' என்று ஞாபகமூட்டிக்கொள்ளும்படி அவர்களிடம் கூறினார்.  இதைச் செய்வீர்களானால் உங்களது கட்டுக்களெல்லாம் விடுபட்டு விடுதலை அடைவீர்கள் என்று உரைத்தார்.  ஐந்து நெருப்புக்களிடையே அமர்தலும், யாகங்களும், பராயணங்களும், அஷ்டாங்க யோகங்களும் அந்தணர்களால் மட்டுமே இயலுவதாகும்.  மற்றைய வகுப்பினருக்கு அவைகளால் எவ்விதப் பலனும் இல்லை.  மனதின் தொழில், நினைப்பதாகவும்.  எண்ணமின்றி அது ஒரு நிமிடமும் இருக்கமுடியாது.  புலன் உணர்விற்குச் சார்பான பொருளை மனதிற்கு நீங்கள் அளித்தால் அதைப்பற்றி நினைக்கும்.  அதற்கு குருவை அளித்தால் அது குருவைப்பற்றி எண்ணமிடும்.  

நீங்கள் மிக்க கவனத்துடன் சாயியின் பெருமையையும், பேராற்றலையும் கேட்டீர்கள்.  இதுவே சாயியை இயற்கையாக நினைவூட்டிக்கொள்ளுதலும், வழிபடுவதும், கீர்த்தனை செய்வதும் ஆகும்.  மேலே கூறப்பட்ட மற்ற சாதனைகளைப்போன்று இக்கதைகளைக் கேட்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல.  இக்கதைகள் சம்சாரமென்னும் (உலக வாழ்க்கை) பயத்தை அழித்து, உங்களை ஆத்மீகப் பாதையில் அழைத்துச் செல்கின்றன.  எனவே இக்கதைகளைக் கவனத்துடன் கேளுங்கள்.  அவைகளைத் தியானியுங்கள்.  அவைகளை ஜீரணித்துக்கொள்ளுங்கள்.  இம்முறை பின்பற்றப்பட்டால் அந்தணர்கள் மட்டுமன்று பெண்ணினமும், கீழ்குலத்தோரும் தூய்மை அடைந்து புனிதமடைவர்.  

நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம்.  ஆனால் உங்களது மனத்தை சாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள்.  பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.  இதுவே மிகவும் எளிமையான வழியாகும்.  எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை?  காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை.  கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது.  

முனிவர்களின் கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் சத்சங்கதைப் பெறுதலை நிகர்ப்பதாகும்.  முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது.  நமது உடல் உணர்வையும், அஹங்காரத்தையும் அகற்றி, பிறப்பு - இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது.  இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது.  புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செயாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது.  நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதியடைவீர்களானால், இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மைப் பத்திரமாக இட்டுச் செல்வார்கள்.

இக்காரணத்துக்காகவே முனிவர்கள் உலகில் அவதரிக்கிறார்கள்.  உலகத்தின் பாவங்களை அடித்துச் செல்லும் கங்கை, கோதாவாரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புனித ஆறுகள்கூட முனிவர்கள் ஸ்நானத்திற்காகத் தங்களிடம் வரவேண்டுமென்றும், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகின்றன.  முனிவரின் பேராற்றல் அத்தகையது.  முந்தைய பிறவிகளில் நாம் செய்த நற்கருமங்களின் சேமிப்புக் குவியல்களால் நாம் சாயிபாபாவினுடைய திருவடிகளை அடையப்பெற்றோம்.  சாயியின் ரூப தியானத்துடன், இந்த அத்தியாயத்தை நாம் முடிக்கிறோம்.

அத்தகைய சுந்தரமான அழகுபடைத்த சாயி, மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு 'உதி'யை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக் கருத்திற்கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.  இவ்வுலகை வெறுமையாய்க் கருதி பரமானந்தத்திலேயே எப்போதும் திளைத்துக்கொண்டிருக்கும் அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவோம்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 8

No comments

நானாவலி

ஷீர்டியில் நானாவலி என்ற பெயரில் தனிப்போக்குள்ள விசித்திரமான மனிதன் ஒருவன் இருந்தான்.  அவன் பாபாவின் வேலைகளையும், காரியங்களையும் கவனித்துவந்தான்.  ஒருமுறை அவன், ஆசனத்தில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, தான் அதில் உட்கார வேண்டியிருப்பதால் பாபாவை எழுந்திருக்கும்படி கூறினான்.  பாபா உடனடியாக எழுந்திருந்து, தாம் அமர்ந்திருந்த ஆசனத்தைக் காலி செய்தார்.  அதில் அவன் அமர்ந்துகொண்டான்.  சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்னர் அவன் எழுந்திருந்து, பாபாவை அமர்ந்துகொள்ளச் சொன்னான்.  பாபா ஆசனத்தில் அமர்ந்தார்.  பிறகு அவன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து நமச்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்.  

தாம் அதிகாரம் செலுத்தப்பட்டதிலும், வெளியேற்றப்படதிலும், பாபா எவ்வளவும் வருத்தம் அடையவில்லை.  இந்த நானாவலி, பாபாவை மிகவும் நேசித்தான்.  பாபா மஹாசமாதி எய்திய பதிமூன்றாவது நாள் தாமும் சமாதி அடைந்தான்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 7

No comments


பாபாவின் பணிவுடைமை

பரமாத்மா அல்லது கடவுள் ஆறு குணாதிசயங்களை உடையவராகக் கூறப்படுகிறது.  அதாவது புகழ், செல்வம், பற்றின்மை, ஞானம், பேராற்றல், வள்ளன்மை ஆகியவையாகும்.  பாபா இவை அனைத்தையும் தன்னிடத்துடையவராக விளங்கினார்.  இவ்வுடம்பில் அடியவர்களுக்காக அவதரித்தார்.  அவரது அருளும், அன்பும் அதிசயிக்கத்தக்கவை.  ஏனெனில் தமது அடியவர்களைத் தம்மிடம் ஈர்த்து இழுத்தார்.  இல்லாவிடில் யார்தான் அவரை அறிந்திருக்க இயலும்!  அவர் தமது பக்தர்களின் பொருட்டாக வாக்கின் தெய்வம் (சரஸ்வதிதேவி) கூட உரைக்கத் துணியாத அத்தகைய சொற்களை அவர் கூறினார்.  அதற்கு இதோ ஓர் உதாரணம், மிகவும் எளிமையுடன் அவர் கூறியது பின்வர்மாறு.  "நான் அடிமைகளுள் அடிமை.  உங்கள்ளுக்குக் கட்டுப்பட்டவன்.  உங்களது தரிசனத்திலே திருப்தியடைகிறேன்.  தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன்.  நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு.  அங்கனமாகவே என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக் கருதுகிறேன்".

எத்தகைய பணிவுடைமை?!  இதைப் பிரசுரிப்பதன் மூலம் சாயிக்கு எத்தகைய அவமரியாதையாவது செய்யப்பட்டது என்று எவரேனும் நினைப்பாராகில், அவர்களிடம் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறோம்.  இதற்குப் பிராயச்சித்தமாக பாபாவின் நாமத்தைப் பாடி ஜபிப்போமாக!

பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர்போல் தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.  அவர் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.  பார்த்தார் எனினும், பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை.  காம உணர்வுகளைப்பற்றிக் கருதும்கால் அவர் ஹனுமானைப் போன்ற பூரண பிரம்மச்சாரியாவார் என்பதாலும் பற்றற்றவராக இருந்தார்.  அவரே தூய உணர்வுகளின் திரளாகவும், ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.  சுருக்கமாக அவர் அவாவற்றவர், கட்டற்றவர், முழு நிறைவானவர்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 6

No comments


சத்குருவாக சாயிபாபா

ஏராளமான குருக்கள் இருக்கின்றனர்.  தங்கள் கரங்களில் ஜால்ரா, தாளக்கருவி, வீணை சகிதம் வீடுதோறும் சென்று ஆத்மீகத்தைப் படாடோபம் செய்துகொள்ளும் குருக்கள் உண்டு.  அவர்கள் மந்திரங்களைத் தமது சீடர்களின் காதில் ஓதி அவர்களிடமிருந்து பணத்தைக் கறப்பர்.  தமது சீடர்களுக்கு கடவுள் பற்றையும், கடவுள் நம்பிக்கையையும் உபதேசிப்பதாக உணர்ச்சி வகையில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வர்.  ஆனால் அவர்களே இறையனுபவம் அற்றவராக இருப்பர்.  ஆனால் சாயிபாபா தமது தகைமையையும் (கடவுள்பற்று), மெய்யுணர்வையும் காண்பிப்பதற்கு எவ்வித சிறிய முயற்சியையும் எடுக்கவேயில்லை.  அடியவர்களிடம் பெருமளவு அன்பு கொண்டிருந்தார்.  இரண்டு விதமான குருக்கள் இருக்கின்றனர்.  

(1)  நியத் - நியமிக்கப்படவர், குறிக்கப்பட்டவர்

(2) அநியத் - நியமிக்கப்படாதவர், பொதுவானவர்

பின்னவர்கள் தங்கள் உபதேசங்களால் நம்மிடத்தில் உள்ள நற்பண்புகளை அபிவிருத்தி செய்கின்றனர்.  நமது இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர்.  நம்மை வீடுபேற்றை அடையும் பாதையில் செல்லத்தூண்டுகின்றனர்.  இதற்கு மாறுபாடாக முன்னவர்களாகிய குருக்களோ நமது தனி இயல்பை (பேத உணர்வை) அழித்து, 'நீயே அது!' என்று உணரச் செய்து, நம்மை ஏகத்வத்தில் ஸ்தாபிக்கின்றனர்.  பல்வேறு வகையான உலக ஞானத்தை அளிக்கும் பல திறத்தான குருக்கள் இருக்கின்றனர்.  ஆனால் நம்மை நமது இயற்கையில் (ஆத்மாவில்) நிலைப்படுத்தி உலகவாழ்வெனும் சாகரத்துக்கு அப்பால் நம்மைச் சுமந்து செல்பவரே சத்குரு எனப்படுவார்.  

சாயிபாபா அத்தகைய ஒரு சத்குரு ஆவார்.  அவருடைய பெருமையை விவரிக்க இயலாது.  யாரேனும் பாபாவின் தரிசனத்தைப் பெறச்சென்றால், கேட்கப்படாமலேயே அவரது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களின் ஒவ்வொரு விவரத்தையும் உரைப்பார்.  எல்லா ஜீவராசிகளிடமும் அவர் தெய்வீகத்தைக் கண்டார்.  நண்பர்களும், பகைவர்களும் அவருக்கு ஒன்றே.  அவாவற்றவராகவும், சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த அவர் தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார்.  சுபிட்சத்திலும், எதிரிடையான சூழ்நிலையிலும் அவர் ஒரே மாதிரியாய் இருந்தார்.  எப்போதும், எவ்வித ஐயமும் அவரைத் தீண்டவில்லை.  இவ்வுடம்பில் அவர் இயங்கினாரெனினும் எள்ளளவும் தமது உடம்பிலேயோ, வீட்டிலேயோ பற்றற்றவராகவே இருந்தார்.  உடலுருக்கொண்டு அவர் தோற்றமளித்தாலும் உண்மையில் அருவமானவர்.  அதாவது இந்த வாழ்க்கையிலிருந்தே விடுதலையானவர்.  

அத்தகைய சாயியை தங்கள் கடவுளாக வழிபட்ட ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள்.  அவர்கள் உண்ணும்போதும், அருந்தும்போதும், பழக்கடையிலும், வயலிலும் மற்றபிற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் சாயியை நினைவு கூர்ந்தார்கள்.  அவர்தம் புகழைப் பாடினார்கள்.  சாயியைத் தவிர பிறிதொரு கடவுளை அவர்களுக்குத் தெரியாது.  ஷீர்டியில் வசித்த பெண்களின் அன்பின் இனிமையை எங்ஙனம் விவரிக்கமுடியும்!  அறியாதவர்களாக இருப்பினும் அவர்களின் தூயஅன்பு எளிய கிராமியமொழியில் பாபாவின் புகழை கவிதையாகவும், தெம்மாங்குப் பாடலாகவும் பாட உணர்வூட்டியது.  எழுத்தறிவு அவர்களிடம் இல்லையாயினும் உண்மைக் கவித்துவத்தை அவர்களின் எளிமையான பாடல்களில் தெளிவாக உணரமுடியும்.  படிப்பறிவு அன்று! ஆழ்ந்த அன்பே அத்தகைய பொருள்செறிந்த பாடல்களை வெளிக்கொணர்ந்தது.  அப்பாடல்கள் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடே.  சற்றே அறிவுக்கூர்மையுள்ள ஆர்வலரால் அவற்றை உணர்ந்து இன்புறமுடியும்.

இந்த கிராமியப் பாடல்களை சேகரித்து தொகுப்பது மிகவும் அவசியமான ஒன்று.  பாபாவின் விருப்பத்தால் அதிஷ்டமுடைய பக்தர் எவரேனும் இப்பணியை மேற்கொண்டு சாயிலீலா சஞ்சிகையிலோ அல்லது தனிப்புத்தகமாகவோ பிரசுரிக்கலாம்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                  (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 5

No comments

பாபா மேற்கொண்ட பணியும், உபதேசமும் 

முனிவர் ராம்தாஸ் (1608 - 1681) பதினேழாம் நூற்றாண்டில் செழித்தோங்கி விளங்கினார்.  பசுக்களையும், அந்தணர்களையும், யவனர்களிடமிருந்து (மொஹலாயர்களிடமிருந்து) காப்பாற்றுதல் என்னும் தாம் மேற்கொண்ட குறிக்கோளை பெருமளவிற்கு நிறைவு செய்தார்.  ஆனால் அவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இரு வகுப்பினர்களுக்குள்ளும் மீண்டும் (இந்து - முஸ்லிம்கள்) வேற்றுமை அதிகரித்தது.  அந்தப் பாதாளப் பள்ளத்தினை இணைக்கும் பாலமாக சாயிபாபா விஜயம் செய்தார்.  

அனைவருக்கும் அவர்தம் நிரந்தரமான உபதேசத்தின் உட்கருத்து இவ்வாறனதாகும்.  "ராமரும் (இந்துக்களின் தெய்வம்) - ரஹீமும் (முஸ்லிம்களின் தெய்வம்) ஒன்றே ஒன்றுதான்.  அவர்களுக்குள் எள்ளளவும் வேற்றமை இல்லை.  பின்னர் ஏன் அவர்களின் அடியவர்கள் சச்சரவு புரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்?  கள்ளங்கபடு அறியாத மக்களாக கைகோர்த்து இரு வகுப்பினரும் ஒன்றாயிணைந்து விவேகத்துடன் நடந்துகொள்ளுங்கள்.  இங்ஙனமாக உங்களது குறிக்கோளாகிய தேசீய ஒற்றுமையை ஈட்டப்பெறுவீர்கள்.  போராடி வாதாடுதல் நன்றன்று.  எனவே விவாதிக்க வேண்டாம்.  மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம்.  எப்போதும் உங்களது அக்கறையினையும், நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக.  

கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்.  யோகம், தியாகம், தவம், ஞானம் என்பன கடவுளையறியும் நெறிகள்.  இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றன் மூலம் நீங்கள் இதில் வெற்றிபெற இயலாவிடின், உங்கள் பிறப்பு வீணேயாகும்.  யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்குச் செயவாரேயாகில், அதற்க்காகப் பழிக்குப் பழி வாங்காதீர்கள்.  நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால், பிறருக்குச் சிறிது நன்மையைச் செய்வீராக!"  இது அனைவருக்கும் சாயிபாபா அளித்த உபதேசத்தின் சுருக்கம்.  இது லௌகிக, ஆன்மிக விஷயங்கள் இரண்டிலுமே நலம் பயப்பதாகும்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 4

No comments

பாபாவின் ஷீர்டி வாசமும், பிறந்த ஆண்டு பற்றிய அனுமானமும்

சாயிபாபாவின் சரியான பிறந்தநாளையும், அவரது பெற்றோரையும் ஒருவரும் அறியார்கள்.  அவரது ஷீர்டி வாசத்தில் இருந்து அதை ஏறக்குறையத் தீர்மானிக்கலாம்.  அவர் பதினாறு வயதுப் பாலகனாக இருக்கும்போது முதலில் ஷீர்டிக்கு வந்தார்.  மூன்றாண்டுகள் அங்கு தங்கியிருந்தார்.  பின்னர் திடீரென்று சிலகாலம் மறைந்துவிட்டார்.  சிறிது காலத்திற்குப்பின் நைஜாம் ஓளரங்கபாத்துக்கு அருகில் இருபது வயது நிரம்பி இருக்கும்போது தோன்றினார்.  மீண்டும் ஷீர்டிக்கு சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் திரும்பினார்.  பின்னர் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் அவர் ஷீர்டியில் வாழ்ந்தார்.  அதற்குப் பின்னர் 1918ஆம் ஆண்டில் மஹாசமாதி அடைந்தார்.  இதில் இருந்து பாபாவின் பிறந்த வருடம் ஏறக்குறைய 1838ஆக இருக்கலாம் என்று கூற இயலும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 3

No comments

பிரமத்தின் உருவ வெளிப்பாடு

ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனைப்போல் பாபா தோற்றமளித்தாலும், அனைவரின் இதயத்திலும் அவர் வாழ்வார்.  அந்தரங்கமாக அவர் பந்தமற்றவராகவும், அக்கறையற்றவராகவும் இருந்தாலும், பகிரங்கத்தில் பொதுமக்களின் நலத்தை விரும்பினார்.  அகத்திலே மிகவும் ஆர்வமற்றவராக இருப்பினும், புறத்தில் தமது பக்தர்களுக்காக ஆசைகள் நிரம்பப்பெற்றவராக இருந்தார்.  உள்ளே சாந்தத்தின் இருப்பிடமாக அவர் இருப்பினும், வெளியில் இருப்புக் கொள்ளாதவராய் இருந்தார்.  அந்தரங்கமாய் பிரமானந்த நிலையை எய்தியவராய் அவர் இருந்தார்.  பகிரங்கமாய் பிசாசைப்போன்று நடந்துகொண்டார்.  அந்தரங்கமாய் அவர் அத்வைதத்தை விரும்பினார்.  பகிரங்கமாய் உலகோடு கட்டுப்பட்டவராய் இருந்தார்.  சில நேரங்களில் அனைவரையும் பாசம் ததும்ப நோக்கினார்.  சில சந்தர்ப்பங்களில் அவர்கள்மீது கற்களை விட்டெறிந்தார்.  சிலசமயம் அவர்களைக் கடிந்துகொண்டார்.  சில சந்தர்ப்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார்.  அமைதியாகவும், பதட்டமற்றவராகவும், பொறுமையுள்ளவராகவும், நல்ல சமநிலையுள்ளவராகவும் இருந்தார்.  ஆத்மாவிலேயே உறைந்து அதனாலேயே கவரப்பட்டு அதன் வயமாக ஆனார்.  தமது பக்தர்களுக்காகச் செய்யவேண்டியவற்றை நன்கு செய்துமுடித்தார்.  எப்போதும் அவர் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.  ஒருபோதும் பிரயாணம் செய்யவில்லை.

அவரது தண்டம் (சந்நியாசிகள், துறவின் அடையாளமாகத் தங்களுடன் வைத்திருக்கவேண்டிய நீளமான மூங்கில் கோல்) சிறு குச்சியேயாகும்.  சாந்தமாகவும், எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருந்தார்.  செல்வத்தையும், புகழையும் அவர் இலட்சியம் செய்யாது, பிச்சை எடுத்தே வாழ்ந்தார்.  இத்தகைய வாழ்க்கையையே அவர் நடத்தினார்.  'அல்லா மாலிக்' (இறைவனே எஜமான்) என்று அவர் எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தார்.  அடியவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு ஏராளமானதும், தடையற்றதுமாகும்.  ஆத்மஞானச் சுரங்கமாகவும், பரமானந்தம் முழுமையும் நிரம்பப்பெற்றவராகவும் இருந்தார்.

சாயிபாபாவின் தெயவீகரூபம் இத்தகையது.  அத்தகைய எல்லையற்ற, முடிவற்ற, பாகுபாடற்ற புல்-பூண்டிலிருந்து பிரம்மா வரையுள்ள பிரபஞ்சமனைத்தையும் அரவணைக்கும் ஏகதத்துவமே சாயிபாபாவாக அவதரித்தது.  உண்மையில் தகைமையும், நல்ல அதிஷ்டமும் பெற்ற பெற்ற மக்கள் சாயிபாபா என்ற பொக்கிஷப் புதையலைப் பெற்றனர்.  உண்மையான மதிப்பை அறியாதவர்கள், அவரை ஒரு மனிதனாக, சாதாரண மானிடப் பிறவியாகக் கருதினார்கள், கருதுகிறார்கள்?!  அவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 2

No comments

கடந்த அத்தியாயத்தில் பாபாவின் பிச்சையைப் பற்றியும், பக்தர்களின் அனுபவங்களைப்பற்றியும், மற்ற விஷயங்களைப்பற்றியும் கூறப்பட்டது.  பாபா எவ்வாறு வாழ்ந்தார், எவ்வாறு தூங்கினார், எவ்வாறு கற்பித்தார் என்று வாசகர்கள் தற்போது கேட்பார்களாக!

பாபாவின் அற்புதமான படுக்கும் பலகை

பாபா எங்கு, எவ்வாறு தூங்கினார் என்பதைக் காண்போம்.  நான்கு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும் உள்ள பலகையை பாபா படுத்து உறங்குவதற்காக நானா சாஹேப் டேங்க்லே கொணர்ந்தார்.  அதனைத் தரையில் போட்டு அதன்மீது உறங்குவதற்குப் பதிலாக, மசூதியின் உத்தரங்களில் இற்றுப்போன கந்தல் துணிகளால் அதை ஒரு ஊஞ்சல்போல் கட்டி, அதன்மீது படுத்துறங்க ஆரம்பித்தார்.  எப்படி பாபாவின் உடலை அது தங்குகிறது என்பது ஒருபுறமிருக்க, தனியாகப் படுக்கையையே தாங்குவது பிரச்சனையாகவுள்ள அளவுக்கு மெல்லியதாகவும், இற்றுப்போயும் அக்கந்தல் துணி இருந்தது.  ஆனால் எவ்விதமாகவோ பாபாவின் லீலையால் மட்டுமே அக்கந்தல் துணி பாபாவின் கனத்துடனும், பலகையையும் தாங்கவே செய்தது.  பலகையின் நான்கு மூலைகளிலும், மூலைக்கொரு மண்விளக்கு வீதம் ஏற்றி, இரவு முழுவதும் எரிந்துகொண்டிருக்கும்படியாக வைப்பார்.

இப்பலகையின்மீது பாபா அமர்ந்து கொண்டிருப்பதையோ, துயின்றுகொண்டிருப்பதையோ கண்ணுறும் தரிசனமானது தேவர்களுக்கும் கிடைப்பதற்கு அரியதொன்றாகும்!  அதில் பாபா எங்ஙனம் ஏறி இறங்கினார் என்பது அனைவருக்கும் வியப்பை விளைவிப்பதாய் இருந்தது.  இதனை அறியும் ஆர்வத்துடன் பாபா ஏறுவதையும், இறங்குவதையும் காண்பதற்காகப் பல கவனமுள்ள பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதிலும் ஒருவரும் அதனைக் காண்பதில் வெற்றிபெறவில்லை.  இவ்விசித்திரமான அருஞ்செயலை நுணுகிக் காண்பதற்காக கூட்டம் அதிரிக்கவே, ஒருநாள் பாபா பலகையைத் துண்டுதுண்டாக உடைத்து எறிந்துவிட்டார்.  எட்டுவிதமான மஹாசித்திகளும் (அஷ்டமா சித்திகள்) பாபாவின் ஆணையில் இருந்தன.  அவர் அவைகளை ஒருபோதும் பயிற்சிக்கவோ அவைகளுக்காக ஏங்கவோ இல்லை.  அவைகள் பாபாவின் முழுமையினால் தாமாகவே அவரை வந்தெய்தின.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)




ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 1

No comments

அன்புடன் எப்போதும் அவரையே (சாயிபாபா) நினைவூட்டிக்கொள்ளுங்கள்.  ஏனெனில் அனைவருக்கும் நன்மை செய்யும் கவனத்தால் கவரப்பட்டு, ஆத்மாவிலேயே உறைந்து நின்றார்.  வாழ்வு, சாவு என்னும் புதிரை விடுவிக்கும் வழி, அவரை நினைவுபடுத்திக்கொள்வது மட்டுமே.  சாதனைகளிலேயே இதுதான் மிகமிக எளியதும், சிறந்ததுமான சாதனையாகும்.  ஏனெனில் அது எவ்விதச் செலவையும் உள்ளடக்காதது.  இங்கு ஒரு சிறு முயற்சி பெரும் பரிசுகளைக் கொணர்கிறது.  நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், இந்த சாதனையைப் பழகவேண்டும்.  மற்ற எல்லாத் தேவைகளும் வெற்றுத் தோற்றமே.  குருவே ஒரே கடவுள்.  சத்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிஷ்டத்தை மாற்றிவிட இயலும்.  அவருக்கு சிறப்பாகச் சேவை செய்வோமானால், நாம் நமது சம்சாரத்தினின்று விடுபடுகிறோம்.  நியாயம், மீமாம்ஸம் போன்ற தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை. 

அவரை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக்கொள்வோமானால், நமது அனைத்துத் துன்பங்கள், கவலைகள் என்னும் கடலை எளிதாகக் கடந்து செல்லலாம்.  ஆற்றையும், கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை நம்பியிருப்பதைப் போன்றே, இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில், நமது சத்குருவை நாம் நம்பவேண்டும்.  தமது அடியவர்களின் தீவிரமான உணர்வையும், பக்தியையும் அவர் நோக்கி ஞானத்தையும், சாஸ்வதமான கழிபேருவகையையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறார்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 8

No comments

பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்?

ஒருமுறை திருமதி தர்கட் ஷீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார்.  மதியஉணவு தயாராகி பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்குவந்து குரைக்கத் தொடங்கியது.  திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்துண்டை விட்டெறியவும், அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது.  பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது சாயிபாபா அவளிடம், "அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவுபெற்றன.  இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக.  இது உன்னை நன்னிலையில் வைக்கும்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு பொய் பேசவே மாட்டேன்.  என்னிடம் இவ்விதமாக இரக்கங்கொள்வாய்.

முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்து, பின் நீ உண்பாயாக.  இதை நன்றாகக் கவனித்துக்கொள்", என்று கூறினார்.  முதலில் அவளால் அதன் பொருளை உணர இயலவில்லை.  எனவே அவள், "எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்?  நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்", எனக் கூறினாள்.  இதற்கு பாபா, "அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன்.  நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்.  உணவு வேலைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும்.  இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.  நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன்.  என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன்.  எனவே த்வைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப்போல் எனக்குச் சேவை செய்", என்று கூறினார்.  இவ்வமிர்தத்தினை நிகர் மொழிகளைக் கேட்டு அவள் உருகி, அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது.

நீதி

'கடவுளை எல்லாப் படைப்புயிர்களிலும் காண்பாயாக' என்பதே இவ்வத்தியாயத்தின் நீதியாகும்.  உபநிஷதங்கள், பகவத்கீதை, பாகவதம் இவைகளெல்லாம் ஜீவராசிகள் அனைத்திலும் கடவுள் அல்லது தெய்வீகத்தைக் காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன.  இவ்வத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்ட நிகழ்சியாலும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும், உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்று சாயிபாபா விளக்கிக் காட்டியிருக்கிறார்.  இவ்வாறாக சாயிபாபா உபநிஷத்தின் விரிவுரையாளராக அல்லது குருவாக இருந்தருளினார்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)



ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 7

No comments

திருமதி தர்கட்

தற்போது திருமதி தர்கட்டின் நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம்.  அவள் மூன்று பொருட்களைச் சமர்ப்பித்தாள்.  அதாவது, (1) பரீத் (கத்தரிக்காய் தயிர் பச்சடி), (2) காச்சர்யா (முழு கத்தரிக்காய் பொரியல்), (3) பேடா (பால் கேக்).  இவற்றை பாபா எங்கனம் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.

ஒருமுறை பாபாவின் பெரும் பக்தரான, பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் பாஸ்கர் புரந்தரே என்பவர் ஷீர்டிக்கு தன் குடும்பத்துடன் புறப்பட்டார்.  பாந்த்ராவில் திருமதி புரந்தரேயிடம், திருமதி தர்கட் சென்று, அவளுக்கு இரண்டு கத்தரிக்காய்கள் அளித்து, ஷீர்டியில் ஒரு கத்தரிக்காயில் பரீத்தும், மற்றதில் காச்சர்யாவும் செய்து, பாபாவுக்கு அவற்றைப் பரிமாறும்படி கூறியிருந்தாள்.  ஷீர்டியை அடைந்தபின்னர், திருமதி புரந்தரே தனது பரீத்துடன் மசூதிக்குச் சென்ற அதே தருணத்தில், பாபா தமது சாப்பாட்டிற்காக அமர்ந்து கொண்டிருந்தார்.  பாபா, பரீத் மிகவும் ருசியாக இருப்பதைக் கண்டார்.  எனவே அதை அவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்துத் தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக் கூறினார்.

ராதாகிருஷ்ணமாயிக்கு, பாபா காச்சர்யாக்கள் வேண்டுகிறார் என்ற செய்தி அனுப்பப்பட்டது.  அது கத்தரிக்காய் சீசன் இல்லையாதலால் அவள் குழப்பமடைந்தாள்.  கத்தரிக்காயை எப்படிப் பெறுவது என்பதே தற்போதைய பிரச்சினை.  பரீத்தை யார் கொண்டுவந்தார் என்று விசாரித்ததில் காச்சர்யா பரிமாறும் பணியிலும் திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள் என அறியப்பட்டது.  காச்சர்யாவைப் பற்றியா பாபாவின் வேண்டுதலின் உட்குறிப்பை அனைவரும் புரிந்துகொண்டனர்.  எங்கும் வியாபித்திருக்கும் அவர்தம் ஞானத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் செயலிழந்தனர்.

1915ஆம் வருடம் மார்கழி மாதத்தில் கோவிந்த் பாலாராம் மாநகர் என்பவன் தனது தந்தையின் திவசங்களையெல்லாம் செய்வதற்காக, ஷீர்டிக்குச் செல்ல விரும்பினான்.  புறப்படுவதற்குமுன் திருமதி தர்கட்டைப் பார்க்க வந்தான்.

அப்போது பாபாவுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்று திருமதி தர்கட் நினைத்தாள்.  வீடு அனைத்திலும் தேடியும் முன்னமே நைவேத்தியமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத் தவிர வேறெதையும் அவள் காணவில்லை.  பையன் கோவிந்த் மிகவும் துயர் கொண்ட நிலையில் இருந்தான்.  எனினும் பாபாவிடம் கொண்டுள்ள பெரும் பக்தியின் காரணமாக அவனிடம் பேடாவைக் கொடுத்து அனுப்பினாள்.  பாபா அதனை ஏற்றுக்கொள்வார் என நம்பினாள்.  

கோவிந்த் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் கண்டான்.  ஆனால் பேடாவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.  பாபா பொறுத்திருந்தார்.  மறுபடியும் மாலையில் சென்றபோதும் பேடாவைக் கொண்டுசெல்லாமல் வெறுங்கையுடன் சென்றான்.  பாபா இதற்குமேல் பொறுக்க இயலாதவராய், "எனக்கு நீ என்ன கொண்டுவந்திருக்கிறாய்", என்று கேட்டார்.  "ஒன்றுமில்லை" என்று பதில் வந்தது.   மீண்டும் பாபா அவனைக் கேட்டார்.  அதே பதில்தான் அளிக்கப்பட்டது.  பின்னர் பாபா, "நீ புறப்படும்போது அம்மா உன்னிடம் எனக்காக இனிப்புப் பலகாரம் கொடுக்கவில்லையா?", என்ற குறிப்பான வினாவொன்று கேட்டார்.  உடனே பையனுக்கு எல்லாம் நினைவு வந்தது.  வெட்கமடைந்து பாபாவிடம் தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு தான் பாபாவிடம் இருந்த இடத்திற்கு ஓடிப்போய் பேடாவைக் கொண்டுவந்து பாபாவிடம் கொடுத்தான்.  கையில் அதைப் பெற்றவுடனேயே, பாபா வாயிலிட்டுப் பேராவலுடன் விழுங்கிவிட்டார்.  இவ்வாறாகத் திருமதி தர்கட்டின் பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  "மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்" (கீதை அத். 4, ஸ்லோகம் 11) என்பது இந்நிகழ்ச்சியால் நிரூபிக்கப்பட்டது.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 6

No comments

தர்கட் குடும்பம் (தந்தையும் மகனும்)

முன்னர், பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ஆத்மாராம் என்னும் பாபா சாஹேப் தர்கட் சாயிபாபாவின் ஓர் உறுதியான பக்தர் ஆவார்.  அவருடைய மனைவியும், மகனும் சாயிபாவிடம் அதற்கு இணையாகவே அல்லது இன்னும் சற்று அதிகமாகவே கூட அன்பு செலுத்தினர்.  ஒருமுறை திருமதி தர்கட்டும், அவர்களது மகன் தர்கட்டும் மே மாத விடுமுறைக்கு ஷீர்டிக்குப் போவது எனத் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் மகன் போக விரும்பவில்லை.  காரணம் அவன் பாந்த்ரா வீட்டைவிட்டுப் போவானாகில் வீட்டில் சாயிபாபாவின் பூஜை முறையாகக் கவனிக்கப்படமாட்டாது என்று அவன் கருதியதேயாகும்.  ஏனெனில், அவனது தகப்பனார் பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்தவராதலால் சாயிபாபாவின் பெரிய படத்தைப் பூஜை செய்வதை அவர் இலட்சியம் செய்யமாட்டார் என்று அவன் கருதினான்.  எனினும் தனது மகன் செய்வதைப்போன்று அதே விதமாக, தான் பூஜா கர்மங்களைச் செய்வதாக அவர் உறுதியாக வாக்களித்த பின்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தாயும், மகனும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். 

அடுத்த நாள் (சனிக்கிழமை) தர்கட் அதிகாலையில் எழுந்திருந்து பூஜை செய்வதற்குமுன் நீராடிவிட்டுப் பூஜை அறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பாபா, எனது மகன் செய்த அதேமாதிரியாக நான் பூஜை செய்யப்போகிறேன்.  ஆனால் தயவுசெய்து அதை ஒரு இயந்திரகதியான பயிற்சியாக ஆக்கிவிடாதீர்கள்", என்று கூறிக்கொண்டே பூஜை செய்து, சில கற்கண்டுகளை நைவேத்தியமாகச் சமர்ப்பித்தார்.  அக்கற்கண்டு பகல் உணவின்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.  

அந்நாள் மாலையும், அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் எல்லாம் நலமாகவே நடந்தேறின.  தொடர்ந்து வேலைநாளான திங்கட்கிழமையும் நன்றாகவே கழிந்தது.  தனது வாழ்நாளிலேயே இம்மாதிரியாகப் பூஜை செய்தறியாத தர்கட் தன மகனுக்கு வாக்களித்தபடி எல்லாம் மிகவும் திருப்திகரமானமுறையிலேயே நடந்தேறிக்கொண்டிருப்பதில் தனக்குள்ளேயே பெருமளவு நம்பிக்கை பெற்றார்.  அடுத்த நாளான செவ்வாயன்று வழக்கம்போல் காலையில் பூஜை நிகழ்த்தியபின் தனது வேலைக்குச் சென்றார்.  மதியம் வீட்டுக்கு வந்து உணவு பரிமாறப்பட்டபோது, பகிர்ந்துகொள்ள கற்கண்டு பிரசாதம் இல்லாததைக் கண்டார்.  அவர் தமது சமையல்காரனை விசாரித்ததில், காலையில் எவ்வித நைவேத்யமும் செய்யப்படவில்லை என்று அறிந்தார்.  பூஜையின் அந்த அம்சத்தை நிகழ்த்த அவர் அடியோடு மறந்துவிட்டிருந்தார்.  இதுகுறித்து தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து பூஜையறையில் விழுந்து வணங்கி, தமது தவறுதலுக்காக வருத்தம் தெரிவித்து, அதே நேரத்தில் இத்தகைய ஒரு சாதாரணமான நடைமுறை விஷயத்தில் வழிகாட்டாததற்காக பாபாவை அவர் கடிந்துகொண்டார்.  பின்பு தனது மகனுக்கு உண்மைகளைக்கூறி ஒரு கடிதம் எழுதி அதை பாபாவின் பாதத்தடியில் வைத்து புறக்கணிப்பிற்காகத் தம்மைப் பொறுத்தருளவும் வேண்டுமாறு எழுதியிருந்தார்.  செவ்வாய்க்கிழமை மதியத்தில் பாந்த்ராவில் இது நிகழ்ந்தது.  

ஏறக்குறைய இதே நேரத்தில் ஷீர்டியில் மத்தியான தீபாராதனை நிகழ்வதற்குச் சிறிது முன்பாக பாபா திருமதி கர்கட்டை நோக்கி, "அம்மா, பாந்த்ராவில் உள்ள உனது வீட்டிற்கு ஏதேனும் உண்ணலாம் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தேன்.  கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்.  எப்படியோ உள்ளே நுழைந்து, பாவ் (தர்கட்), நான் உண்பதற்கு ஏதும் விட்டுவைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் அறிந்தேன்.  எனவே பசி தணிக்கப்படாமலேயே திரும்பிவிட்டேன்", என்று கூறினார்.

அப்பெண்மணிக்கு இது ஒன்றும் புரியவில்லை.  அருகிலிருந்த மகனோ அதாவது பாந்த்ராவில் பூஜைஜில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அனைத்தையும் புரிந்துகொண்டு, வீடு திரும்ப பாபாவின் அனுமதியை வேண்டினான்.  பாபா இதை மறுத்தார்.  எனினும் அங்கேயே அப்பையனைப் பூஜைசெய்ய அனுமதித்தார்.  அப்போது ஷீர்டியில் நிகழ்ந்த விபரங்களையெல்லாம் பற்றி பையன், தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதி, வீட்டில் பூஜையை அலட்சியம் செய்யவேண்டாமென்று மன்றாடி வேண்டியிருந்தான்.  இரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று தாண்டிப்போய் இருவருக்குமே அடுத்தநாள் கிடைத்தன.  இது ஓர் அற்புதமல்லவா?

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 5

No comments

பக்தர்களின் அனுபவங்கள்:

இன்னும் அதிக விருவிருப்புள்ள விஷயத்துக்குத் தற்போது திரும்புவோம்.  கிருஷ்ண பரமாத்மா, பகவத்கீதையில் "அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, மலர், பழம், அல்லது நீரை சமர்ப்பிக்கிறாரோ, அந்தத் தூய்மையான தன்னடக்கமுடைய அன்புக்காணிக்கையானது ஆர்வத்துடனும், தாமதமின்றியும் என்னால் ஏற்றுக்கொள்ளபடுகிறது" என்று கூறியிருக்கின்றார்.

சாயிபாபாவின் விஷயத்தில் ஓர் பக்தர் உண்மையிலேயே எதையாவது சமர்ப்பிக்க விரும்பியிருந்து, பின்னால் அதையே சமர்ப்பிக்க அவர் மறைந்துவிட்டாரெனினும், பாபா அவருக்கு அல்லது அவரது நண்பருக்கு அந்தக் காணிக்கையை ஞாபகப்படுத்தி, அவரை அளிக்கச்செய்து, அதை ஏற்றுக்கொண்டு பக்தரை ஆசீர்வதிக்கிறார்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 4

No comments

பிச்சை எடுப்பதன் தேவை:-

பிச்சை எடுப்பதைப்பற்றிய கேள்விக்குத் தற்போது திரும்புவோம்.  பாபா உண்மையிலேயே அத்தகைய பெரிய சிறப்புடையவராக, கடவுளாக இருந்தால் தமது வாழ்நாள் முழுக்கப் பிச்சையெடுக்கும் வழக்கத்தைப் ஏன் அவர் மேற்கொண்டவராய் இருத்தல் வேண்டும்? என்னும் கேள்வி சிலரது உள்ளத்தில் எழக்கூடும்.  இக்கேள்வி, இரண்டு நோக்கு நிலைகளில் கருதப்பட்டு விடையிறுக்கப்படலாம்.  

(1) பிச்சையெடுத்து வாழ்வதற்கு உரிமையுள்ள தகுதியான மக்கள் யார்?  வம்சாவிருத்தி, செல்வம், புகழ் இம்மூன்று முக்கிய ஆசைகளையும் துறந்து, துறவை மேற்கொள்வோரே பிச்சையெடுத்து வாழத் தகுதியுடையோராவர் என்று நமது சாத்திரங்கள் பகருகின்றன.  இவர்கள் சமைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வீட்டில் உண்ணமுடியாது.  அவர்களை உண்பிக்கவேண்டிய கடமை இல்லறத்தாரின் தோள்களில் விழுகிறது.

சாயிபாபா இல்லறத்தாருமல்ல, வானப்பிரஸ்தருமல்ல.  அவர் பிரம்மச்சர்யம் அனுஷ்டித்த ஒரு துறவி, அதாவது சிறுபருவம் முதற்கொண்டே துறவியாவார்.  இப்பிரபஞ்சமே தமது வீடு என்பதும், தாமே பிரபஞ்ச ஆதாரமும், அழிவற்ற பிரம்மமுமாகிய பகவான் வாசுதேவர் என்பதும் அவருடைய உறுதியான அபிப்பிராயமுமாகும்.  எனவே அவருக்கு இறந்து உண்ணும் வழக்கத்திற்கு முழு உரிமை இருக்கிறது.

(2) மற்றவை கீழ்கண்ட நிலையின்படி, பஞ்ச்ஸுனா - ஐந்து பாவங்களும் அவைகளின் பிராயச்சித்தமும், உணவுப்பொருட்களும், சாப்பாடும் தயாரிப்பதற்காக இல்லறத்தார் ஐந்து செயல்கள் அல்லது நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டியதாய் இருக்கிறது.  அதாவது,

1.  கண்டணீ - பொடியாக்குதல் 

2.  பேஷணீ - அரைத்தல்  

3.  உதக்கும்பி - பானைகளைக் கழுவுதல் 

4.  மார்ஜனீ  - பெருக்கிச் சுத்தப்படுத்துதல்

5.  சுள்ளீ  - அடுப்பு பற்றவைத்தல்

இச்செயல்முறைகள் எல்லாம் ஏராளமான சிறிய கிருமிகளையும், ஜந்துக்களையும் கொல்வதற்கு ஏதுவாகிறது.

இவ்வாறாக இல்லறத்தார்கள்  ஓரளவு பாவத்தைச் செய்தவர்களாகிறார்கள்.  இப்பாவத்துக்குப் பரிகாரமாக நமது சாத்திரங்கள் ஆறுவகையான தியாகங்களைச் செய்யப் பகர்கின்றன.

1.  பிரம்மயக்ஞம் அல்லது பிரம்மதுக்குச் சமர்ப்பித்தல்

2.  வேத அத்யயனம்  அல்லது வேத பராயணம்

3.  பித்ரு யக்ஞம் - மூதாதையர்களுக்குச் சமர்ப்பித்தல்

4.  தேவ யக்ஞம் - தேவதைகளுக்குச் சமர்ப்பித்தல்

5.  பூத யக்ஞம் - ஜந்துக்களுக்குச் சமர்ப்பித்தல் 

6.  மனுஷ்ய அதிதி யக்ஞம் - மனிதர்களுக்கும் அழைக்கப்படாத                                 விருதாளிகளுக்கும் சமர்ப்பித்தல்

சாஸ்திரப்படி இந்தத் தியாகங்களை முறையாக அனுசரித்தால் மனத்தூய்மை பெற்று, ஞானமும், தன்னையுணர்தலையும் பெற உதவும்.  பாபா வீட்டுக்கு வீடு சென்றதன் மூலம் இல்லறத்தார்க்கு அவர்களின் புனிதக்கடமையை ஞாபகப்படுத்தினார்.  பாபாவால் தங்கள் வீட்டிலேயே இங்ஙனம் பாடம் கற்பிக்கப்பட்டவர்கள் பேறுபெற்ற மக்கள் ஆவார்கள்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                  (தொடரும்…)


ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 3

No comments

ஐரோப்பிய பெருந்தகை

ஷீர்டிக்கு ஒருமுறை ஒரு ஐரோப்பியப் பெருந்தகை, ஏதோ ஒரு குறிக்கோளுடன், நானா சாஹேபின் அறிமுகக் குறிப்புடன் வந்தார்.  ஒரு கூடாரத்தில் சௌகரியமாகத் தங்கவைக்கப்பட்டார்.  அவர் பாபாவின் முன் மண்டியிட்டு பாபாவின் கையை முத்தமிட விரும்பினார்.  எனவே அவர் மூன்றுமுறை மசூதிக்குள் நுழைய முயன்றார்.  ஆனால் அவர் அப்படிச் செய்வதை பாபா தடுத்துவிட்டார்.  கீழேயுள்ள திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து, பாபாவின் தரிசனத்தைச் செய்யும்படி கேட்கப்பட்டார்.  தமக்கு அழிக்கப்பட்ட வரவேற்பைக்கண்டு மகிழாத ஐரோப்பியர், ஷீர்டியைவிட்டு உடனே புறப்படவிரும்பி விடைபெறுவதற்காக வந்தார்.  பாபா அவரை அடுத்தநாள் போகும்படியும், அவசரப்பட வேண்டாம் என்றும் கூறினார்.  மக்களும் அவரை பாபாவின் அறிவுரையின்படியே செய்ய வேண்டிக்கொண்டனர்.

இவற்றையெல்லாம் செவிமடுக்காது, அவர் ஒரு குதிரை வண்டியில் ஷீர்டியைவிட்டுப் புறப்பட்டார்.  முதலில் குதிரைகள் ஒழுங்காக ஓடின.  ஆனால்  ஸாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியதும், எதிரில் ஒரு சைக்கிள் வந்தது.  இதைக்கண்டு குதிரைகள் மிரண்டு வேகமாக ஓடின.  குதிரைவண்டி தலைகீழாகக் கவிழ்ந்து, அந்தப் பெருந்தகை கீழே விழுந்து சிறிது தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டார்.  உடனேயே அவர் காப்பாற்றப்பட்டார் என்றாலும், தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்காக கோபர்காவன் மருத்துவமனைக்குச் சென்று படுக்க வேண்டியதாயிற்று.  இத்தகைய அனுபவங்கள் கணக்கில் அடங்கா.  பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் ஏதோ ஒரு விதத்தில் விபத்துக்குள்ளானார்கள் என்றும் அவைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களோ பத்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர் என்றும் எல்லா மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)