எவருடைய கடைக்கண் பார்வை, பிச்சைக்காரனையும் அரசனாக்க வல்லதோ, அவர் ஷீர்டியில் வீட்டுக்கு வீடு சென்று உணவை யாசிப்பது வழக்கம். அதை அவர் எப்படிச் செய்தார் என்று இப்போது கவனிப்போம்.
பாபா உணவை இரத்தல்
பாபா, எந்த ஷீர்டி மக்களின் வீடுகள் முன்னர் ஒரு பிச்சைக்காரனைப் போல் நின்று, "ஓ! லாசி(அம்மா), ஒரு ரொட்டித்துண்டு கொடு" என்று கூவி அப்பிச்சையை ஏற்கத் தம் திருக்கரங்களை நீட்டி அருளினாரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர் ஒரு கையில் தகரக் குவளையும், மற்றொன்றில் ஸோலி என்ற சதுரத் துண்டும் வைத்திருந்தார். தினந்தோறும் சில குறிப்பிட்ட வீடுகளுக்கும், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கும் பிச்சையெடுக்கச் சென்றார். திரவ ஆகாரமான சூப், காய்கறிகள், பால், மோர் முதலியவற்றை தகரக் குவளையிலும், சோறு, ரொட்டி முதலிய திடப் பொருட்களை துண்டிலும் வாங்கிக்கொண்டார். பாபாவுக்கு தம் நாவுமேல் கட்டுப்பாடு உண்டாதலால் அது சுவையறிவதில்லை. எனவே பல்வேறு பொருட்களை ஒன்றுகூட்டிய ருசியை எங்ஙனம் அவர் பொருட்படுத்த முடியும். துண்டிலும், தகரக் குவளையிலும் கொண்டுவரப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும் ஒன்று கலக்கப்பட்டு பாபாவால் அவர் மனம் நிறைவெய்தும் வண்ணம் பகிர்ந்து உட்கொள்ளப்பட்டது. சில குறிப்பிட்ட பதார்த்தங்கள் சுவையானவையாகவோ, மாறாகவோ இருப்பினும், பாபா தமது நாக்கு முழுதும் சுவையுணர்வையே இழந்துவிட்டதைப் போலக் கவனிப்பதே இல்லை.
பாபா மதியம்வரை பிச்சையெடுத்தார். ஆனால் பிச்சையெடுப்பது மிகவும் நியதியில்லாதிருந்தது. சில நாட்களில் சில சுற்றுக்களே சென்றார். சில நாட்களில் பகல் பன்னிரண்டு மணிவரையும் எடுத்தார். இவ்வாறு சேர்க்கப்பட்ட உணவு, ஒரு சட்டியில் கொட்டப்பட்டது. நாய்களும், காக்கைகளும், பூனைகளும் அதிலிருந்து தாராளமாக சாப்பிட்டன. பாபா அவைகளை விரட்டியதே இல்லை. மசூதியைப் பெருக்கிய பெண்மணி பத்து அல்லது பன்னிரண்டு ரொட்டித் துண்டுகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். அவள் அங்ஙனம் செய்வதை யாரும் தடை செய்யவில்லை. கனவில் கூடப் பூனைகளையும், நாய்களையும் கடுஞ்சொற்களாலோ, ஜாடைகளாலோ விரட்டியறியாத அவர், எங்ஙனம் ஏழ்மையான திக்கற்ற மக்களுக்கு உணவை மறுக்க இயலும்? அத்தகைய உயர் குணமுடையவரின் வாழ்க்கை உண்மையிலேயே ஆசிகள் நிரம்பப்பெற்றதாகும்.
ஷீர்டி மக்கள் அவரை ஆரம்ப காலத்தில் ஒரு கேனைப் பக்கிரியாகக் கருதினர். இப்பெயராலேயே அவர் அறியப்பட்டார். இரந்த பிச்சையான சில ரொட்டித்துண்டுகளை உண்டு வாழ்ந்த அவர் எங்ஙனம் மதிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட முடியும். ஆனால் இந்தப் பக்கிரியோ உள்ளத்திலும், கையிலும் மிகவும் தாராளமானவராகவும், அவாவற்றவராகவும், தர்ம சிந்தையுடையவராகவும் இருந்தார். ஸ்திரமில்லாதவராயும், இருப்புக்கொள்ளாதவராயும் புறத்தில் தோன்றினாலும் அகத்தில் உறுதியுள்ளவராயும், நிதானம் உள்ளவராயும் இருந்தார். அவருடைய வழியோ அறிவுக்கெட்டாதது. எனினும் அச்சிறு கிராமத்தில்கூட அன்பும், ஆசீர்வாதமும் உள்ள சிலர் பாபாவை பரமாத்மா என்றே உணர்ந்து மதித்தனர்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment