நாசிக் முலே சாஸ்திரி:
ஜோசியம், கைரேகை முதலியவற்றில் கரைகண்டவரும், ஆறு சாஸ்திரங்களைக் கற்றறிந்தவருமாகிய நாசிக்கைச் சேர்ந்த வைதீகமான அக்னிஹோத்ரி அந்தணர் முலே சாஸ்திரி ஒருமுறை நாக்பூரின் புகழ்பெற்ற கோடீஸ்வரரான பாபு சாஹேப் பூட்டியைச் சந்திக்க ஷீர்டிக்கு வந்தார். அவரைச் சந்தித்தபின்னர், அவரும் மற்றவர்களும் பாபாவைக் காண மசூதிக்குச் சென்றனர். பாபா தம்முடைய சொந்தப் பணத்திலேயே வெவ்வேறு பழங்களையும், மற்றப் பொருட்களையும் விற்பனையாளரிடமிருந்து வாங்கி மசூதியிலுள்ள மக்களுக்கு விநியோகித்தார்.
பாபா மாம்பழத்தை அதன் எல்லாப் பக்கங்களிலும் மிகத் திறமையாக அழுத்துவது வழக்கம். ஒருவன் பாபாவிடமிருந்து அதை வாங்கி உறிஞ்சுவானேயாகில், எல்லா சதைப்பற்றையும் உடனே தன வாயில் உறிஞ்சிக்கொண்டு கொட்டையையும், தோலையும் உடனே தூக்கி எறிந்துவிட முடியும். வாழைப் பழங்களை உரித்து சதைப்பற்றை அடியவர்க்கு விநியோகித்து, தோலை பாபா தமக்காக வைத்துக்கொள்வார். கைரேகை சாஸ்திரி என்ற முறையில் முலே சாஸ்திரி, பாபாவின் கையைப் பரிசோதிக்க விரும்பினார். பாவிடம் கையைக் காண்பிக்கக் கோரினர். பாபா அவருடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. அவருக்கு நான்கு வாழைப்பழங்களைக் கொடுத்தார். எல்லோரும் வாதாவுக்குத் திரும்பினர்.
முலே சாஸ்திரி குளித்துப் புனித ஆடைகள் அணிந்து அக்னிஹோத்ரம் போன்ற தன நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்ய ஆரம்பித்தார். பாபா வழக்கம்போல் லெண்டியை நோக்கிப் புறப்பட்டார். "கொஞ்சம் ஜெரு எடு, (குங்குமப்பூ நிறத்தில் துணியைச் சாயம் போடுவதற்கான சிவப்பு மண்ணைப்போன்ற ஒரு பொருள்) நாம் இன்று குங்குமப்பூ நிற உடை உடுத்தலாம்" என்று பாபா கூறினார். பாபா என்ன சொல்கிறார் என்று ஒருவருக்கும் விளங்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாபா திரும்பி வந்தார். மத்தியான ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
பாபு சாஹேப் ஜோக், முலே சாஸ்திரியிடம் அவர் தன்னுடன் ஆரத்திக்கு வருகிறாரா என்று கேட்டார். மாலையில் தாம் பாபாவைப் பார்க்கப்போவதாக அவர் பதிலளித்தார். இதற்குச் சிறிது நேரத்திற்குப்பின் பாபா தமது ஆசனத்தில் அமர்ந்தார். அடியவர்களால் வழிபடப்பட்டார். ஆரத்தியும் துவங்கியது. பிறகு பாபா "புது பிராமணனிடமிருந்து தட்ஷனை வாங்கி வா" எனக் கூறினார். பூட்டி தாமே தட்ஷனை வாங்கச் சென்றார். பாபாவின் செய்தியை முலே சாஸ்திரியிடம் தெரிவித்தபோது அவர் சொல்லப்பெறாத அளவு குழப்பம் அடைந்தார். "நான் தூய அக்னிஹோத்ரி பிராமணன். நான் ஏன் தட்ஷனை கொடுக்கவேண்டும்? பாபா பெரிய முனிவராக இருக்கலாம். நான் அவரது சீடனல்ல!" என நினைத்தார். ஆனால் சாயிபாபாவைப் போன்ற ஞானி, பூட்டியைப் போன்ற கோடீஸ்வரரிடம் தட்ஷனை கேட்டனுப்பியிருப்பதனால் அவரால் மறுக்க இயலவில்லை. எனவே தனது அனுஷ்டானத்தைப் பூர்த்தியாக்காமல் உடனே பூட்டியுடன் மசூதியை நோக்கிச் சென்றார்.
தம்மைத் தூயவராகவும், புனிதமானவராகவும், மசூதியை வேறுவிதமாகவும் கருதிய அவர் சற்று தூரத்தில் இருந்தே கைகளைச் சேர்த்து பாபாவின்மீது புஷ்பங்களை வீசினார். அப்போது ஆஹா! திடீரென்று ஆசனத்தில் அவர் பாபாவைக் காணவில்லை. காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமியையே அங்கு கண்டார். ஆச்சரியத்தால் அவர் செயலிழந்தார். இது கனவாயிருக்குமோ? அல்ல, அங்ஙனமன்று! அவர் அகல விழித்திருந்தார். காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமி எங்ஙனம் அங்கு இருக்கமுடியும்? சிறிதுநேரம் அவர் பேச்சற்றுவிட்டார். தன்னையே கிள்ளிவிட்டுக்கொண்டார். திரும்பவும் நினைத்தார். ஆனால் காலஞ்சென்ற தனது குரு மசூதியில் இருக்கும் உண்மையை அவரால் ஏற்கமுடியவில்லை. முடிவில் எல்லா ஐயங்களையும் களைந்துவிட்டுத் தெளிந்தநிலையில் தனது குருவின் அடிகளில் பணிந்து, கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார்.
மற்ற எல்லோரும் ஆரத்தி பாடுகையில் முலே சாஸ்திரி தனது குருவின் பெயரை இரைந்து கூக்குரலிட்டார். இனப்பெருமை, புனிதத்தன்மை பற்றிய எண்ணங்களை ஒதுக்கி எறிந்துவிட்டு தனது குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்களை மூடிக்கொண்டார். எழுந்திருந்தபோது பாபா தட்ஷணை கேட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். பாபாவின் பேரானந்த ரூபத்தையும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரின் சக்தியையும் கண்டு முலே சாஸ்திரி தன்னையே மறந்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார். திரும்பவும் பாபாவை வணங்கி தட்ஷணை கொடுத்தார். தனது சந்தேகம் நீங்கிவிட்டதாகவும், தன் குருவையே கண்டதாகவும் அவர் கூறினார்.
பாபாவின் இந்த லீலையைக் கண்ணுற்ற அனைவரும், முலே சாஸ்திரி உட்பட, மிகவும் மனதுருகிப்போயினர். "ஜெரு எடு, நாம் இன்று குங்குமப்பூ வண்ண உடை உடுத்தலாம்" என்ற பாபாவின் பொன்மொழிகளை இப்போது புரிந்துகொண்டனர். சாயிபாபாவின் லீலை அத்தகைய அற்புதம் வாய்ந்ததாகும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment