Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 4

No comments

பிச்சை எடுப்பதன் தேவை:-

பிச்சை எடுப்பதைப்பற்றிய கேள்விக்குத் தற்போது திரும்புவோம்.  பாபா உண்மையிலேயே அத்தகைய பெரிய சிறப்புடையவராக, கடவுளாக இருந்தால் தமது வாழ்நாள் முழுக்கப் பிச்சையெடுக்கும் வழக்கத்தைப் ஏன் அவர் மேற்கொண்டவராய் இருத்தல் வேண்டும்? என்னும் கேள்வி சிலரது உள்ளத்தில் எழக்கூடும்.  இக்கேள்வி, இரண்டு நோக்கு நிலைகளில் கருதப்பட்டு விடையிறுக்கப்படலாம்.  

(1) பிச்சையெடுத்து வாழ்வதற்கு உரிமையுள்ள தகுதியான மக்கள் யார்?  வம்சாவிருத்தி, செல்வம், புகழ் இம்மூன்று முக்கிய ஆசைகளையும் துறந்து, துறவை மேற்கொள்வோரே பிச்சையெடுத்து வாழத் தகுதியுடையோராவர் என்று நமது சாத்திரங்கள் பகருகின்றன.  இவர்கள் சமைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வீட்டில் உண்ணமுடியாது.  அவர்களை உண்பிக்கவேண்டிய கடமை இல்லறத்தாரின் தோள்களில் விழுகிறது.

சாயிபாபா இல்லறத்தாருமல்ல, வானப்பிரஸ்தருமல்ல.  அவர் பிரம்மச்சர்யம் அனுஷ்டித்த ஒரு துறவி, அதாவது சிறுபருவம் முதற்கொண்டே துறவியாவார்.  இப்பிரபஞ்சமே தமது வீடு என்பதும், தாமே பிரபஞ்ச ஆதாரமும், அழிவற்ற பிரம்மமுமாகிய பகவான் வாசுதேவர் என்பதும் அவருடைய உறுதியான அபிப்பிராயமுமாகும்.  எனவே அவருக்கு இறந்து உண்ணும் வழக்கத்திற்கு முழு உரிமை இருக்கிறது.

(2) மற்றவை கீழ்கண்ட நிலையின்படி, பஞ்ச்ஸுனா - ஐந்து பாவங்களும் அவைகளின் பிராயச்சித்தமும், உணவுப்பொருட்களும், சாப்பாடும் தயாரிப்பதற்காக இல்லறத்தார் ஐந்து செயல்கள் அல்லது நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டியதாய் இருக்கிறது.  அதாவது,

1.  கண்டணீ - பொடியாக்குதல் 

2.  பேஷணீ - அரைத்தல்  

3.  உதக்கும்பி - பானைகளைக் கழுவுதல் 

4.  மார்ஜனீ  - பெருக்கிச் சுத்தப்படுத்துதல்

5.  சுள்ளீ  - அடுப்பு பற்றவைத்தல்

இச்செயல்முறைகள் எல்லாம் ஏராளமான சிறிய கிருமிகளையும், ஜந்துக்களையும் கொல்வதற்கு ஏதுவாகிறது.

இவ்வாறாக இல்லறத்தார்கள்  ஓரளவு பாவத்தைச் செய்தவர்களாகிறார்கள்.  இப்பாவத்துக்குப் பரிகாரமாக நமது சாத்திரங்கள் ஆறுவகையான தியாகங்களைச் செய்யப் பகர்கின்றன.

1.  பிரம்மயக்ஞம் அல்லது பிரம்மதுக்குச் சமர்ப்பித்தல்

2.  வேத அத்யயனம்  அல்லது வேத பராயணம்

3.  பித்ரு யக்ஞம் - மூதாதையர்களுக்குச் சமர்ப்பித்தல்

4.  தேவ யக்ஞம் - தேவதைகளுக்குச் சமர்ப்பித்தல்

5.  பூத யக்ஞம் - ஜந்துக்களுக்குச் சமர்ப்பித்தல் 

6.  மனுஷ்ய அதிதி யக்ஞம் - மனிதர்களுக்கும் அழைக்கப்படாத                                 விருதாளிகளுக்கும் சமர்ப்பித்தல்

சாஸ்திரப்படி இந்தத் தியாகங்களை முறையாக அனுசரித்தால் மனத்தூய்மை பெற்று, ஞானமும், தன்னையுணர்தலையும் பெற உதவும்.  பாபா வீட்டுக்கு வீடு சென்றதன் மூலம் இல்லறத்தார்க்கு அவர்களின் புனிதக்கடமையை ஞாபகப்படுத்தினார்.  பாபாவால் தங்கள் வீட்டிலேயே இங்ஙனம் பாடம் கற்பிக்கப்பட்டவர்கள் பேறுபெற்ற மக்கள் ஆவார்கள்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                  (தொடரும்…)


No comments :

Post a Comment