Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 11 - பகுதி 4

No comments

பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு:

பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் ஆணைக்கு ஈண்டு உதாரணமாக இரண்டு நிகழ்சிகளைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிப்போம்.

(1)  ஒருநாள் மாலைநேரத்தில் ஷீர்டியில் பயங்கரமான புயல் வீசியது.  கருமேகங்களால் வானம் திரையிடப்படிருந்தது.  காற்று பலமாக வீசத்தொடங்கியது.  மேகங்கள் கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது.  மழை வெள்ளமாய்ப் பொழியத் தொடங்கியது.  சிறிதுநேரத்தில் அவ்விடம் முழுவதும் வெள்ளக்காடாகியது.  ஷீர்டியிலிருந்த சர்வ ஜந்துக்களும், பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் பயங்கர பீதியடைந்து திரளாக மசூதியில் தஞ்சமடைந்தனர்.  ஷீர்டியில் பல கிராம தேவதைகள் இருக்கின்றன.  ஆனால் அவைகளில் எவையும் அவர்களின் உதவிக்கு வரவில்லை.  எனவே அவர்கள் எல்லோரும் தங்களது பக்தியின்பால் பற்றுமீதூறும் தங்களது கடவுளான பாபாவை, அவர் குறுக்கிட்டுப் புயலைத் தணிக்க வேண்டினர்.  பாபா மிகவும் மனது உருகினார்.  பாபா மசூதியிலிருந்து வெளிப்போழ்ந்து அதன் விளிம்பில் நின்று, பெருத்த இடிமுழக்கம் போன்ற குரலில் புயலை நோக்கி, "நிறுத்து, உன் சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு" எனக் கூறினார்.  சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது.  பின்னர் சந்திரன் வானத்தில் உதயமாகி, மக்கள் நன்றாக மகிழ்வெய்தி வீடிட்ற்குத் திரும்பினர்.

(2)  மற்றொரு சந்தர்ப்பத்தில் மத்தியான நேரத்தில் மசூதியில் துனியில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது.  அதனுடைய சுவாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது.  மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்னசெய்வதென்றே புரியவில்லை.  தண்ணீரை அதன்மீது ஊற்றும்படியோ,அல்லது சுவாலையைத் தணிப்பதற்கு வேறெதுவும் செய்யும்படியாகவோ பாபாவைக் கேட்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை.  ஆனால் சிறிதுநேரத்தில் பாபா, என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டார்.  தமது சட்காவை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின்மீது ஓங்கியடித்து, "கீழிறங்கு, அமைதியாய் இரு" என்றார்.  ஒவ்வொரு அடிக்கும் சுவாலை கீழிறங்கத் தொடங்கி சில நிமிடங்களில் குறைந்து துனி அமைதியாகவும், சாதாரணமாகவும் ஆகியது.  

இவரே நமது சாயி - கடவுளின் அவதாரமாவார்.  தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்.  தினந்தோறும் பக்தியுடன் இவ்வத்தியாயத்தைப் படிப்பவர்கள் எல்லாக் கேடுகளில் இருந்தும் விடுபடுவார்.

இதுமட்டுமன்று, எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகுவிரைவில் கடவுள்காட்சியைப் பெறுவார்.  எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக, அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)

 

No comments :

Post a Comment