Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 8 - பகுதி 7

No comments

ராஹதாவைச் சேர்ந்த குஷால்சந்த்

ஷீர்டியைச் சேர்ந்த கண்பத் கோதே பாடீலை பாபா விரும்பினார்.  அதற்குச் சமமாக ராஹதாவைச் சேர்ந்த சந்த்ரபன்சேட் மார்வாடியையும் விரும்பினார்.  இந்த சேட் காலமான பின்பு அவர் சகோதரர் புத்திரரான குஷால்சந்த்தை அதற்குச் சமமாக அல்லது அதற்கு அதிகமாகவே கூட அன்பு செலுத்தி, அல்லும்-பகலும் அவர் நலத்தில் கண்ணாய் இருந்தார்.  சில சமயங்களில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ நண்பர்களுடன் பாபா ராஹாதாவிற்குச் செல்வார்.  அக்கிராமத்து மக்கள் பேண்ட் வாத்திய இசையுடன் வந்து, கிராமத்தின் நுழைவாயிலில் பாபாவை வரவேற்று, அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவார்கள்.  பெரும் வியப்பொலியுடனும், விழாக்கோலத்துடனும் அவர் கிராமத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.  குஷால்சந்த் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று வசதியாக ஆசனத்தில் அமர்த்தி நல்ல உணவளிப்பார்.  பின்னர் அவர்கள் சரளமாகவும், மகிழ்ச்சியுடனும் சிறிது நேரம் உரையாடியபின் அனைவர்க்கும் மகிழ்ச்சியையும், ஆசியையும் நல்கிவிட்டு பாபா ஷீர்டிக்குத் திரும்புவார்.

தெற்கே ராஹாதாவுக்கும், வடக்கே நீம்காவனுக்கும் இடையே சரியான மையப்பகுதியில் ஷீர்டி அமைந்துள்ளது.  இந்த இடங்களுக்கு அப்பால், பாபா தமது வாழ்நாளில் சென்றதில்லை.  அவர் எவ்வித ரயில் வண்டியையும் பார்த்ததோ, பிரயாணம் செய்ததோ கிடையாது.  எனினும் எல்லா வண்டிகள் வரும், புறப்படும் நேரங்கள் எல்லாம் மிகச் சரியாகவே பாபாவுக்குத் தெரியும்.  தாங்கள் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டபோது அவரின் அறிவுரைகளின்படி நடந்தவர்கள் நன்மையடைந்தனர்.  அதை மதிக்காதவர்கள் பலவித துர்ச்சம்பவங்களுக்கும், விபத்திற்கும் உள்ளானார்கள்.  இதைப்பற்றியும் இன்னும் பல நிகழ்ச்சிகள் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

குறிப்பு: இவ்வத்தியாயத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி குஷால்சந்த்  மீது பாபா செலுத்திய அன்பையும், அவர் ஒருநாள் மாலை காகா சாஹேப் தீஷித்தை ராஹாதாவுக்குச் சென்று குஷால்சந்தை அழைத்து வரும்படி கூறியதும், அத்தருணத்திலேயே குஷால்சந்தின் மதியத் தூக்கத்தில் கனவில் தோன்றி ஷீர்டிக்கு வரும்படி கூறியதும், இங்கு விவரிக்கப்படவில்லை.  காரணம் பின்வரும் 30ஆம் அத்தியாயத்தில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment