ஹாஜி சிதிக்ஃபால்கே
பாபா எப்போது ஓர் அடியவரை ஏற்றுக்கொள்வார் என்பதை அறியமுடியாது. அது அவரது இனிய சங்கல்பத்தையே பொறுத்தது. இக்கூற்றுக்கு சிதிக்ஃபால்கேயின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. கல்யாணைச் சேர்ந்த சிதிக்ஃபால்கே என்ற ஒரு முஹமதியப் பெருந்தகை மெக்கா, மெதீனாவுக்குப் புனித யாத்திரை செய்துவிட்டு ஷீர்டிக்கு வந்தார். வடக்கு நோக்கிய சாவடியில் அவர் வாழ்ந்தார். மசூதியின் திறந்த வெளியில் அவர் அமர்ந்தார். ஒன்பது மாதங்கள் பாபா அவரைப் பொருட்படுத்தவில்லை. அவரை மசூதிக்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை. பால்கே மிகவும் தேற்றவியலாத நிலையை எய்தி என்னசெய்வதென்று புரியாமலிருந்தார். யாரோ ஒருவர் அவரை ஏமாற்றமடைய வேண்டாமென்றும், பாபாவின் மிக நெருங்கிய, அருகில் உள்ள அடியவரான ஷாமா (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) மூலம் பாபாவை அணுக முயற்சிக்கும்படியும் ஆலோசனை கூறினார். சிவபெருமான், அவரது சேவகரும், பக்தருமான நந்தியின் மூலம் அணுகப்படுதலைப்போல, ஷாமாவின் மூலம் பாபா அணுகப்படுதல் வேண்டும் என்றும் கூறினார். ஃபால்கே இந்த யோசனையை விரும்பி, ஷாமாவைத் தனக்காக மன்றாடிக் கெஞ்சிக் கேட்குமாறு வேண்டினார்.
ஷாமாவும் சமத்தித்து, பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பாபாவிடம், "பாபா, பலர் இம்மசூதிக்குள் தாராளமாய் வந்து தங்கள் தரிசனத்தைப் பெற்றுப் போகும்போது, தாங்கள் ஏன் அந்த முதிர்ந்த ஹாஜியை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது? அவரை ஒருமுறை ஆசீர்வதித்தருளலாகாதா?" என்று அவரைப்பற்றிப் பேசினார். அதற்கு பாபா, "ஷாமா, நீ விஷயங்களையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அளவு முதிர்சியற்றவனாய் இருக்கிறாய். ஃபக்கீர் (அல்லா) அனுமதிக்கவில்லைஎன்றால் நான் என்ன செய்யமுடியும்? அவரது அருளின்றி யாரே மசூதியில் ஏற வல்லார்? நன்று, அவரிடம் சென்று நாளை பார்வி கிணற்றுக்கருகிலுள்ள குறுகிய ஒற்றையடிப்பாதைக்கு வருவாரா எனக்கேட்டுவா" என்றார். ஷாமா சென்று உடன்பாட்டு விடையுடன் திரும்பிவந்தார்.
மீண்டும் அவரிடம் பாபா, "எனக்கு நாற்பதாயிரம் ரூபாய்களை நான்கு தவணைகளில் கொடுக்கச் சம்மதிப்பாரா எனக் கேள்" என்றார். சாமா சென்று, நாற்பது இலட்சம் ரூபாய்கள் கூடத் தர அவர் சம்மதிப்பதான பதிலுடன் திரும்பிவந்தார். மீண்டும் பாபா, "நாங்கள் ஒரு ஆட்டை மசூதியில் வெட்டப்போகிறோம், அவரை அதன் மாமிசம், தொடை, விதை இவைகளில் எது வேண்டுமெனக்கேள்" என்று கூறினார். ஹாஜி, பாபாவின் கோலாம்பாவிலிருந்து (மட்பாண்டத்திலிருந்து) ஏதாவது ஒரு சிறுதுணுக்கை பெற்றுக்கொள்வதிலேயே மகிழ்வதாகவும் ஷாமா பதில் கொண்டுவந்தார்.
இதைக்கேட்டு பாபா உணர்ச்சிவசப்பட்டு, தமது கையால் மட்கூஜாக்களையும், கோலாம்பாவையும் விட்டெறிந்துவிட்டு, நேராக ஹாஜிடம் சென்று தமது கஃப்னியை கைகளால் பிடித்துக்கொண்டு "ஏன் உன்னை நீயே தற்பெருமைப்படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப்போல் பாவனை செய்துகொண்டிருக்கிறாய். குர்ஆனை நீ இவ்விதமாகத்தான் கற்றுணர்ந்தாயா? நீ உனது மெக்கா தலயாத்திரை குறித்துப் பெருமை கொள்கிறாய். ஆனால் நீ என்னை அறியவில்லை" என்றார். இவ்வாறு கடிந்துகொள்ளப்பட்டதும் ஹாஜி குழப்பமடைந்தார். பாபா பின்னர் மசூதிக்குச் சென்று ஒரு கூடை மாம்பழங்களை வாங்கி ஹாஜிக்குக் கொடுத்தனுப்பினார். பின்னர் மீண்டும் ஹாஜியிடத்துச் சென்று தம் பையிலிருந்து ரூ.55 ஹாஜியின் கைகளில் கொடுத்தார். அதிலிருந்து பாபா ஹாஜியை விரும்பினார். உணவுக்கு அவரை அழைத்தார். பாபா ஹாஜியை விரும்பியபோதெல்லாம் மசூதியினுள் அழைத்தார். பாபா சில சமயங்களில் அவருக்கு சில ரூபாய்கள் அளித்தார். இவ்வாறாக பாபாவின் தர்பாரில் ஹாஜியும் சேர்க்கப்பட்டார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment