மிகவும் எளிய வழி:
முனிவர்களுடைய கதைகளைக் கேட்பதும், அவர்களின் சத்சங்கத்தில் இருப்பதும். புறத்தில் சாயிபாபா சாதாரண மனிதர் போன்று நடித்தாலும், அவரது செய்கைகள் அவரது அசாதாரண புத்தி சாதுர்யத்தையும், திறமையையும் காண்பித்தன. அவர் எதைச் செய்தபோதிலும் அவைகள் அடியவர்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன. தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டுமுறையையோ, அவர் வகுத்துரைக்கவில்லை. அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை. எல்லாவித புத்திசாலித்தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் 'சாயி சாயி' என்று ஞாபகமூட்டிக்கொள்ளும்படி அவர்களிடம் கூறினார். இதைச் செய்வீர்களானால் உங்களது கட்டுக்களெல்லாம் விடுபட்டு விடுதலை அடைவீர்கள் என்று உரைத்தார். ஐந்து நெருப்புக்களிடையே அமர்தலும், யாகங்களும், பராயணங்களும், அஷ்டாங்க யோகங்களும் அந்தணர்களால் மட்டுமே இயலுவதாகும். மற்றைய வகுப்பினருக்கு அவைகளால் எவ்விதப் பலனும் இல்லை. மனதின் தொழில், நினைப்பதாகவும். எண்ணமின்றி அது ஒரு நிமிடமும் இருக்கமுடியாது. புலன் உணர்விற்குச் சார்பான பொருளை மனதிற்கு நீங்கள் அளித்தால் அதைப்பற்றி நினைக்கும். அதற்கு குருவை அளித்தால் அது குருவைப்பற்றி எண்ணமிடும்.
நீங்கள் மிக்க கவனத்துடன் சாயியின் பெருமையையும், பேராற்றலையும் கேட்டீர்கள். இதுவே சாயியை இயற்கையாக நினைவூட்டிக்கொள்ளுதலும், வழிபடுவதும், கீர்த்தனை செய்வதும் ஆகும். மேலே கூறப்பட்ட மற்ற சாதனைகளைப்போன்று இக்கதைகளைக் கேட்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல. இக்கதைகள் சம்சாரமென்னும் (உலக வாழ்க்கை) பயத்தை அழித்து, உங்களை ஆத்மீகப் பாதையில் அழைத்துச் செல்கின்றன. எனவே இக்கதைகளைக் கவனத்துடன் கேளுங்கள். அவைகளைத் தியானியுங்கள். அவைகளை ஜீரணித்துக்கொள்ளுங்கள். இம்முறை பின்பற்றப்பட்டால் அந்தணர்கள் மட்டுமன்று பெண்ணினமும், கீழ்குலத்தோரும் தூய்மை அடைந்து புனிதமடைவர்.
நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனத்தை சாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும். இதுவே மிகவும் எளிமையான வழியாகும். எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை? காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை. கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது.
முனிவர்களின் கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் சத்சங்கதைப் பெறுதலை நிகர்ப்பதாகும். முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது. நமது உடல் உணர்வையும், அஹங்காரத்தையும் அகற்றி, பிறப்பு - இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது. இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது. புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செயாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது. நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதியடைவீர்களானால், இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மைப் பத்திரமாக இட்டுச் செல்வார்கள்.
இக்காரணத்துக்காகவே முனிவர்கள் உலகில் அவதரிக்கிறார்கள். உலகத்தின் பாவங்களை அடித்துச் செல்லும் கங்கை, கோதாவாரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புனித ஆறுகள்கூட முனிவர்கள் ஸ்நானத்திற்காகத் தங்களிடம் வரவேண்டுமென்றும், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகின்றன. முனிவரின் பேராற்றல் அத்தகையது. முந்தைய பிறவிகளில் நாம் செய்த நற்கருமங்களின் சேமிப்புக் குவியல்களால் நாம் சாயிபாபாவினுடைய திருவடிகளை அடையப்பெற்றோம். சாயியின் ரூப தியானத்துடன், இந்த அத்தியாயத்தை நாம் முடிக்கிறோம்.
அத்தகைய சுந்தரமான அழகுபடைத்த சாயி, மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு 'உதி'யை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக் கருத்திற்கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கிறார். இவ்வுலகை வெறுமையாய்க் கருதி பரமானந்தத்திலேயே எப்போதும் திளைத்துக்கொண்டிருக்கும் அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவோம்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment