Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 8 - பகுதி 2

No comments

மானிட உடம்பின் தனிச்சிறப்பு

நாமனைவரும் அறிந்தபடியாக சர்வஜீவராசிகளுக்கும் நான்கு விஷயங்கள் பொதுவானதாகும்.  அதாவது உணவு, உடை, பயம், புணர்ச்சி முதலியவை ஆகும்.  மனிதனுடைய விஷயத்தில் அவன் ஒரு சிறப்பான சாமர்த்தியத்துடன் இயற்கையாகவே ஆக்கப்பட்டிருக்கிறான்.  அதாவது மற்றெல்லாப் பிறப்பாலும் அடையப்பட இயலாத ஞானத்தின் மூலம் அவன் கடவுளின் காட்சியைப் பெறலாம்.  இக்காரணத்திற்காகவே தேவர்கள், மனிதனது உரிமையை (நிலைமையை) குறித்துப் பொறாமைப்படுகிறார்கள்.  தாங்கள் முடிவான விடுதலையைப் பெறுவதற்காக, மானுடர்களாய்ப் பிறப்பதற்கு ஆவல்கொள்கிறார்கள்

கேவலமான அழுக்கு, சளி, கோழை, அசுத்தம், இவைகளால் நிரம்பியதும் தேய்வு, நோய், மரணம் ஆகியவற்றிற்குக் காரணமாய் உள்ளதுமான இம்மனித உடம்பைவிடக் கேவலமானது எதுவும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.  இது ஓரளவிற்கு உண்மை என்பதில் ஐயமில்லை.  இவ்வாறான குற்றம், குறைகள் இருப்பினும், இம்மனித உடம்பின் சிறப்பான மதிப்பு யாதெனில், ஞானத்தை அடைய மனிதனுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதேயாம்.

மனித உடம்பினால் மட்டுமே அல்லது அதன்பொருட்டே அழியக்கூடிய நிலையில்லாத உடம்பின் தன்மையைப்பற்றியும், இவ்வுலகத்தைப் பற்றியும், புலன் இன்பங்களின்மீது வெறுப்பையும், நித்ய-அநித்ய வஸ்துக்களைப் பகுத்தறியும் விவேகத்தையும், இங்ஙனமாக அதன் மூலம் கடவுள் காட்சியையும் ஒருவன் எய்த இயலுகிறது.  அதன் அசுத்தத் தன்மைக்காக நாம் உடம்பைப் புறக்கணித்தோமானால், கடவுள் காட்சியைப் பெறும் வாய்ப்பை இழக்கிறோம்.  அதையே சீராட்டி புலன் இன்பங்களின் பின்னால் ஓடுவோமானால் அது விலை மதிப்பற்றதாகையால் நாம் நரகிடை வீழ்வோம்.  எனவே, நாம் பின்பற்றவேண்டிய ஒழுங்கான நெறிமுறையானது பின்வருமாறு:

"உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ கூடாது.  ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும்.  குதிரையில் சவாரி செய்யும் ஓர் வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும்வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும்.  இவ்வுடம்பு இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோக்கமான கடவுள்-காட்சி அல்லது ஆத்மானுபூதியை அடையவே உபயோகப்படுத்தப்பட வேண்டும்".

பல்வேறு ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார்.  எனினும், அவைகளில் எதுவும் அவர்தம் வேலையை அறிந்து பாராட்ட இயலாததனால் அவர் திருப்தியடையவில்லை.

எனவே அவர் ஒரு சிறப்பான சாமர்த்தியமுள்ள ஜந்துவாக மனிதனைப் படைக்கவேண்டியதாயிற்று.  'ஞானம்' என்னும் சிறந்த வரத்தையும் அளித்தார்.  அவரின் லீலையையும், அற்புதமான வேலையையும், சாதுர்யத்தையும் மனிதன் பாராட்ட இயன்றபோது அவர் பெரிதும் மகிழ்ந்து திருப்தியடைந்தார்.  (ஸ்ரீமத் பாகவதம் 11:9:28)  இம்மானிட தேகம் எடுத்தது உண்மையிலேயே நல்ல அதிஷ்டமாகும்.  அந்தணர் குலத்தில் உதிப்பது அதைக் காட்டிலும் நற்பேறுடையது.  அதைக் காட்டிலும் மிகச்சிறப்பான அதிஷ்டமானது சாயிபாபாவின் பாதங்களில் தஞ்சமடைந்து, சரணாகதி அடையும் வாய்ப்பைப் பெற்றதேயாகும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment