மனிதனின் முயற்சி
மனித வாழ்க்கை எவ்வளவு அருமையானதென்று உணர்ந்து, மரணம் உறுதி என்றறிந்து, அது எத்தருணத்திலும் நம்மைப் பற்றும் என்றறிந்து, நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைய கூடியவரை விரைவாகச் செயல்படவேண்டும். அதாவது மனைவியை இழந்தவன் மறுமணம் புரிந்துகொள்ளக் கொண்டுள்ள மிகுதியான அக்கறை போன்றும், காணாமற்போன தன் மகனை, அரசன் சல்லடை போட்டுத் தேடுவது போன்றும் இருக்கவேண்டும். எனவே நமது இலக்கை எய்த நம்மிடத்திலுள்ள முழு ஊக்கத்துடனும், வேகத்துடனும் நாம் பாடுபட வேண்டும். அதாவது 'தன்னை உணர்தல்'. நமது சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு தூக்கத்தைக் களைந்து அல்லும், பகலும் ஆத்மஞானம் செய்தல் வேண்டும். இதைச் செய்ய நாம் தவறுவோமானால் நம்மை நாமே மிருக நிலைக்குத் தாழ்த்திக் கொண்டவர்களாவோம்.
எவ்வாறு செல்வது
கடவுள்-காட்சியைத் தாமே எய்திய தகைமையுள்ள ஞானி, முனிவர் அல்லது சத்குரு ஆகிய இவர்களை அணுகுவதே, நமது குறிக்கோளை அடைய மிகச்சிறந்த பயன் அளிக்கக்கூடியதும், துரிதமுமான வழியாகும். மதப் பிரசங்கங்களைக் கேட்டும், மத நூல்களைக் கற்றும் அடைய முடியாதவைகளை அம்மதிப்புமிக்க ஆன்மாக்களின் கூட்டுறவால் பெறலாம். சூரியன் மட்டுமே கொடுக்கும் ஒளியை, மற்றெல்லா நட்ச்சந்திரங்களும் சேர்ந்தாலும் கொடுக்க இயலாததைப் போன்றே, புனித நூல்கள் அனைத்தும், மதப்பிரசங்கங்கள் அனைத்தும் சேர்ந்து கொடுக்க இயலாத ஆத்மா விவேகத்தை சத்குரு நமக்கு அளிக்கிறார்.
அவரின் அசைவுகளும் சாதாரணப் பேச்சும் நமக்கு மௌன உபதேசத்தை நல்குகின்றது. மன்னித்தல், அடக்கம் உடைமை, அவாவின்மை, தர்மம், உதாரணகுணம், மனம் - மெய் இவற்றின் கட்டுப்பாடு, அஹங்காரமற்ற தன்மை முதலிய நற்பண்புகளெல்லாம் அத்தகைய தூய புனிதமான கூட்டுறவால் பயிற்சிக்கப்பட்டு அடியவர்களால் அனுசரிக்கப்படுகின்றன. இது அவர்களது மனதை ஒளிப்படுத்தி, ஞானத்தை நல்கி, தன்னையுணரச்செய்கிறது. சாயிபாபா அத்தகைய முன்னேற்றத்தை அருளும் 'ஞானி' அல்லது 'சத்குரு' ஆவார். பக்கிரியைப் (இரவலர்) போன்று அவர் நடித்தாலும், எப்போதும் ஆத்மாவிலேயே முற்றிலும் தன்வயப்பட்டிருந்தார். கடவுள் அல்லது தெய்வத்தன்மையை சர்வ ஜீவராசிகளும் கண்டு, அவைகளை அவர் எப்போதும் அன்பு செய்தார். இன்பங்களால் அவர் உயரவுமில்லை, துரதிஷ்டங்களால் தாழ்ச்சியுறவுமில்லை. அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment