பிரமத்தின் உருவ வெளிப்பாடு
ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனைப்போல் பாபா தோற்றமளித்தாலும், அனைவரின் இதயத்திலும் அவர் வாழ்வார். அந்தரங்கமாக அவர் பந்தமற்றவராகவும், அக்கறையற்றவராகவும் இருந்தாலும், பகிரங்கத்தில் பொதுமக்களின் நலத்தை விரும்பினார். அகத்திலே மிகவும் ஆர்வமற்றவராக இருப்பினும், புறத்தில் தமது பக்தர்களுக்காக ஆசைகள் நிரம்பப்பெற்றவராக இருந்தார். உள்ளே சாந்தத்தின் இருப்பிடமாக அவர் இருப்பினும், வெளியில் இருப்புக் கொள்ளாதவராய் இருந்தார். அந்தரங்கமாய் பிரமானந்த நிலையை எய்தியவராய் அவர் இருந்தார். பகிரங்கமாய் பிசாசைப்போன்று நடந்துகொண்டார். அந்தரங்கமாய் அவர் அத்வைதத்தை விரும்பினார். பகிரங்கமாய் உலகோடு கட்டுப்பட்டவராய் இருந்தார். சில நேரங்களில் அனைவரையும் பாசம் ததும்ப நோக்கினார். சில சந்தர்ப்பங்களில் அவர்கள்மீது கற்களை விட்டெறிந்தார். சிலசமயம் அவர்களைக் கடிந்துகொண்டார். சில சந்தர்ப்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார். அமைதியாகவும், பதட்டமற்றவராகவும், பொறுமையுள்ளவராகவும், நல்ல சமநிலையுள்ளவராகவும் இருந்தார். ஆத்மாவிலேயே உறைந்து அதனாலேயே கவரப்பட்டு அதன் வயமாக ஆனார். தமது பக்தர்களுக்காகச் செய்யவேண்டியவற்றை நன்கு செய்துமுடித்தார். எப்போதும் அவர் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ஒருபோதும் பிரயாணம் செய்யவில்லை.
அவரது தண்டம் (சந்நியாசிகள், துறவின் அடையாளமாகத் தங்களுடன் வைத்திருக்கவேண்டிய நீளமான மூங்கில் கோல்) சிறு குச்சியேயாகும். சாந்தமாகவும், எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருந்தார். செல்வத்தையும், புகழையும் அவர் இலட்சியம் செய்யாது, பிச்சை எடுத்தே வாழ்ந்தார். இத்தகைய வாழ்க்கையையே அவர் நடத்தினார். 'அல்லா மாலிக்' (இறைவனே எஜமான்) என்று அவர் எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தார். அடியவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு ஏராளமானதும், தடையற்றதுமாகும். ஆத்மஞானச் சுரங்கமாகவும், பரமானந்தம் முழுமையும் நிரம்பப்பெற்றவராகவும் இருந்தார்.
சாயிபாபாவின் தெயவீகரூபம் இத்தகையது. அத்தகைய எல்லையற்ற, முடிவற்ற, பாகுபாடற்ற புல்-பூண்டிலிருந்து பிரம்மா வரையுள்ள பிரபஞ்சமனைத்தையும் அரவணைக்கும் ஏகதத்துவமே சாயிபாபாவாக அவதரித்தது. உண்மையில் தகைமையும், நல்ல அதிஷ்டமும் பெற்ற பெற்ற மக்கள் சாயிபாபா என்ற பொக்கிஷப் புதையலைப் பெற்றனர். உண்மையான மதிப்பை அறியாதவர்கள், அவரை ஒரு மனிதனாக, சாதாரண மானிடப் பிறவியாகக் கருதினார்கள், கருதுகிறார்கள்?! அவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment