பண்டரீபுரத்துக்குச் செல்லுதலும், அங்கு தங்குதலும்
பாபா எவ்வாறு தம் அடியவர்களை நேசித்தார். அவர்களின் விருப்பங்களையும், முயற்சிகளையும் எங்கனம் ஆவலுடன் எதிர்பார்த்து பூர்த்தி செய்தார் என்பதைச் சித்தரிக்கும் ஒரு கதையைக் கூறியபின்னர், இவ்வத்தியாயத்தை முடிக்கிறேன்.
கான்தேஷில் உள்ள நந்துர்பாரின் மம்லதார் நானா சாஹேப் சாந்தோர்கர் பாபாவின் பெரும் அடியவர் ஆவார். அவருக்குப் பண்டரீபுரத்துக்கு மாற்றலாகும் உத்தரவு வந்தது. சாயி பாபாவிடம் அவர் கொண்டுள்ள பக்தி பழுத்தது. ஏனெனில், அவருக்குப் 'பூலோக வைகுண்டம்' என்றழைக்கப்படும் பண்டரீபுரத்துக்குப் போய்த்தங்க உத்தரவு கிடைத்திருக்கிறது. நானா சாஹேப் அவசரமாக வேலையை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருந்ததால் அவர் அவ்விடத்திற்கு உடனே ஒருவருக்கும் தெரிவிக்காமலும், எழுதாமலும் புறப்பட்டார். அவர் தனது பண்டரீபுரமான ஷீர்டிக்கு, ஒரு திடீர் விஜயம் செய்ய விரும்பினார். தமது விட்டோபா(சாயிபா)வைப் பார்த்து வணக்கம் தெரிவித்துப் பின்னர் புறப்பட எண்ணினார். ஒருவரும் நானா சாஹேப் ஷீர்டிக்குப் போவார் என்று கனவு கூடக் காணவில்லை. ஆனால் சாயிபாபா இது அனைத்தையும் அறிவார். ஏனெனில் அவர் கண்கள் எங்கும் வியாபித்திருந்தன (சர்வாந்தர்யாமி)
ஷீர்டியிலிருந்து சில மைல்கள் உள்ள நீம்காவனை நானா சாஹேப் அடைந்தபோது ஷீர்டியில் மசூதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. பாபா உட்கார்ந்துகொண்டு மஹல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று, "நாம் நால்வரும் பஜனை செய்வோம். பண்டாரீபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. நாம் மகிழ்ச்சியாய்ப் பாடுவோம்" என்றார். அப்போது கோஷ்டியாக அவர்கள் பாடத் தொடங்கினர். அதன் பல்லவி…..
"நான் பண்டரீபுதத்துக்குப் போகவேண்டும்!
அங்கே தங்க வேண்டும்!
ஏனெனில் அதுவே என் பரமாத்மாவின் வீடு!"
பாபா பாடினார். அடியவர்களும் அவரைத் தொடர்ந்து பாடினர். சிறிது நேரத்தில் நானா சாஹேப் தனது குடும்பத்துடன் வந்து பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவரைத் தங்களுடன் தங்கும்படியும் வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுகோள் பாபாவுக்குத் தேவையாய் இருக்கவில்லை. ஏனெனில் மற்ற அடியவர்கள் நானா சாஹேபிடம் பாபா ஏற்கனவே பண்டரீபுரத்திற்குப் போவதற்கும், அங்கு தங்குவதற்குமான ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு நானா சாஹேப் உணர்ச்சிவசப்பட்டார். பாபாவின் காலடியில் வீழ்ந்தார். பிறகு பாபாவின் அனுமதி, உதி மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, நானா சாஹேப் பண்டரீபுரத்துக்குப் புறப்பட்டார்.
பாபாவின் கதைகளுக்கு ஒரு முடிவில்லை. ஆனால் இங்கு நிறுத்தி, அடுத்த அத்தியாயத்தில் மானிட வாழ்க்கையின் முக்கியத்துவம், பாபாவின் இறந்து வாழும் வாழ்க்கை, பாயஜாபாயின் சேவை மற்றும் பலகதைகளையும் கூறுகிறேன்.
*¹ பாபாவின் நெருங்கிய பக்தரும், அவருடன் எப்போதும் மசூதியிலும், சாவடியிலும் படுத்துறங்கியவருமான மஹல்சாபதி பாபா தம்மிடம் ஒருமுறை தாம் 'பாத்ரி'யைச் சேர்ந்த பிராமணர் என்றும், பிறந்தபோதே (முஸ்லிம்) ஃபக்கீர் ஒருவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்படதாகவும் சொல்லியிருக்கிறார். இந்த உரையாடல் நிகழ்ந்த சமயம் பாத்திரியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்ததையும் அவர்களிடம் பாபா அங்கு வசிப்பவர்களைப்பற்றி விசாரித்ததையும் தெரிவித்திருக்கிறார். (சாயிலீலா சஞ்சிகை - வருடம் 1924, பக்கம் 179)
*² திருமதி. காஷிபாய் கனிட்கர், புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற கற்றறிந்த பெண்மணி ஆவார். இவர் தம்முடைய அனுபவமாக சொல்லியவை சாயிலீலா சஞ்சிகையில் (வருடம் 1934, தொகுப்பு 2, பக்கம் 79) பதிக்கப்பட்டிருக்கிறது.
பாபாவின் அற்புதங்களைக் கேள்விப்பட்ட பிறகு எங்களுடைய பிரம்மசமாஜ நம்பிக்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்ப பாபா மாயவேலை செய்யும் முஹமதியரா அல்லது இந்து சித்தரா! என்று விவாதித்துக்கொண்டிருந்தோம்.
பின்பு ஒருமறை ஷீர்டி செல்லும்போது இதைப்பற்றிய எண்ணம் என் மனதில் சுழன்றுகொண்டிருந்தது. ஆனால் மசூதியின் படிகளை நான் நெருங்கியபோது, பாபா வெளியேவந்து என்னை உற்றுநோக்கி, சற்றே கடுமையான குரலில் தனது நெஞ்சை சுட்டிக்காட்டி, "நான் ஒரு பிராமணன், தூய பிராமணன். எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. அது மாதிரியான சித்து வேலைசெய்யும் எந்த முஹமதியனும் இங்கு நுழையத் துணிய முடியாது" என்றார்.
மீண்டும் தன்னைச் சுட்டிக்காட்டி, "இந்த பிராமணர் இலட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளிநிறைந்த பாதைக்கு இழுத்து, அவர்களின் இலட்சியத்தை அடைய இட்டுச்செல்வார். இது பிராமண மசூதி. இங்கு மாயவேலை செய்யும் எந்த முஹமதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்" என்றார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment