Tuesday, 28 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 12 - பகுதி 1

No comments

இந்த அத்தியாயத்தில் பக்தர்கள் பாபாவினால் எவ்வாறு வரவேற்கப்பட்டு நடத்தப்பட்டார்கள் என்பதைக் காண்போம். 

நல்லோரைக் காத்துக் கொடியோரை அழிப்பதே தெய்வ அவதாரத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் என்பதை முன்னரே கண்டோம்.  ஞானிகளின் இறையருட்கட்டளைப் பணியோ முற்றிலும் மாறுபாடானது.  அவர்கட்கு நல்லோரும், கொடியோரும் ஒன்றே.  தீது செய்பவர்க்காக வருந்தி அவர்களை நெறிப்படுத்துகிறார்கள்.  அவர்கள் பவசாகரத்தைக் (இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலை) குடிக்கும் அகஸ்தியர் அல்லது அறியாமை இருளை ஒழிக்கும் ஆதவன் ஆவார்கள்.  ஞானிகளிடம் கடவுள் வசிக்கிறார்.  உண்மையில், அவரிடமிருந்து அவர்கள் வேறானவர்கள் அல்லர்.  பக்தர்கள் நன்மைக்காக அவதரிக்கும் இத்தகையவர்களுள் ஒருவரே நமது சாயி ஆவார்.

ஞானத்தின் உச்சக்கட்டத்தில் தெய்வீக ஒழி சூழப்பட்டு எல்லா ஜந்துக்களையும் சமமாக நேசித்திருந்தார்.  அவர் பற்றற்றவர்.  பகைவர்களும், நண்பர்களும், அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே.  அவருடைய அசாதாரணத் திறமையைச் செவிமடுங்கள்.  அடியவர்களுக்காகத் தமது தகைமைக் களஞ்சியத்தைச் செலவிட்டார்.  அவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் விழிப்பாய் இருந்தார்.  ஆனால் அவராக அடியவர்களை வரவேற்க எண்ணினாலொழிய ஒருவரும் அவரை அணுக இயலாது.  அவர்களது முறை வரவில்லையானால் பாபா அவர்களை நினைப்பதில்லை.  அவருடைய லீலைகளும் அவர்களின் காதை எட்டவியலாது.  பிறகு அவர்கள் எங்ஙனம் அவரைப் பார்க்க எண்ணமுடியும்?

சிலர் சாயிபாபாவைப் பார்க்க விரும்பினர்.  ஆயினும் அவரின் மஹாசமாதிவரை அவரின் தரிசனத்தைப்பெற அவர்களுக்கு வாய்ப்பேதும் கிடைக்கவில்லை.  பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய பலரின் விருப்பமானது இங்ஙனம் நிறைவேறாமல் போயிற்று.  அவர்மீது நம்பிக்கை கொண்ட இத்தகையோர் அவரது லீலைகளைச் செவிமடுப்பாராயின் பாலுக்கான (தரிசனத்திற்கான) அவர்களது ஏக்கமானது வெண்ணெயினால் (லீலைகளால்) பெருமளவு திருப்திப்படுத்தப்படும்.

வெறும் அதிஷ்டத்தினாலேயே ஷீர்டி சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்ற சிலர், நீண்ட நாட்கள் அங்கு தங்க இயலுமா? இயலாது.  ஒருவரும் தாமாகவே ஷீர்டி செல்லமுடியாது.  தாம் நினைத்தபடி அங்கு நீண்டநாட்கள் இருக்கமுடியாது.  பின்னர், அவர்களுக்கு அனுமதி கொடுத்த நாட்கள் வரைக்குமே அவர்கள் தங்கவேண்டும்.  பாபா அவர்கள் அவ்விடத்தை விட்டுப் போகும்படி கேட்டதும் அவ்விடத்தைவிட்டுப் போய்விடவேண்டும்.  எனவே அனைத்தும் பாபாவின் சங்கல்பத்தையே சார்ந்து இருந்தன.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)

No comments :

Post a Comment