வியத்தகு அவதாரம்
சாயிபாபா எல்லாவித யோகப்பயிற்சிகளையும் அறிந்திருந்தார். அவர் தவ்தி (22½ அடி நீளமும், 3 அங்குல அகலமும் உள்ள நனைக்கப்பட்ட ஒரு லினன்(சணல்நார்) துணியினால் வயிறு சுத்தம் செய்தல்), கண்ட யோகம் (உடல் உறுப்புகளைத் தனியாகக் கழற்றி பின்னர் சேர்த்தல்), சமாதி உள்ளிட்ட ஆறு முறைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார். அவரை ஒரு இந்து என்று நீங்கள் கருதுவீர்களானால், ஒரு யவனரைப் போன்று தோற்றமளித்தார். நீங்கள் அவரை ஒரு யவனர் என்று கருதுவீர்களானால், ஒரு சமயாசாரமுள்ள இந்துவாகத் தோற்றமளித்தார். அவர் ஒரு இந்துவா, முஹமதியரா என்று ஒருவரும் திட்டமாக அறிந்திருக்கவில்லை.
இந்துக்களின் விழாவான ராமநவமியை உரிய சகல மரியாதைகளுடனும் கொண்டாடி, அதேநேரத்தில் முஹமதியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்தையும் அனுமதித்தார். திருவிழாக்களில் குத்துச்சண்டையை ஊக்குவித்து, வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கினார். கோகுலாஷ்டமி வந்தபோது, 'கோபால்காலா' திருவிழாவை (கிருஷ்ணர் மேனியைக் கருமை நிறமாக்கும் வைபவம்) உரியமுறைப்படி செய்வித்தார். ஈத் திருவிழாவின்போது முஹமதியர்களைத் தங்கள் தொழுகையை (நமாஸ்) தமது மசூதியில் செய்ய அனுமதித்தார். ஒருமுறை மொஹரம் திருவிழாவின்போது சில முஹமதியர்கள், மசூதியில் ஒரு 'தாஸியா' அல்லது 'தாபூத்' (முஸ்லிம் ஞானியரின் பாடை உருவகம்) செய்யவும், அதைச் சிலநாட்கள் மசூதியில் வைத்திருந்து, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கவும் தீர்மானித்தனர். நான்கு நாட்களுக்கு தாபூத்தை மசூதியில் வைத்திருக்க சாயிபாபா சம்மதித்தார். ஐந்தாவது நாள் சிறிதளவும் தமது செயல்லுக்காக வருந்தும் தன்மையேயின்றி, மசூதியில் இருந்து அதை அப்புறப்படுத்தினார். நீங்கள் அவரை ஒரு முஹமதியர் என்று கூறுவீர்களானால், (இந்து மத வழக்கப்படி) காது குத்தப்படிருந்தார். நீங்கள் அவரை ஒரு இந்து என்று கருதுவீர்களானால், அவர் சுன்னத் கல்யாணம் செய்கிற வழக்கத்தை ஆதரித்தார். ஆனால் பாபாவை நெருங்கிய நானா சாஹேப் சாந்தோர்கர் கருத்துப்படி பாபாவுக்கே சுன்னத் செய்யப்படவில்லை.
B.V. தேவ் எழுதிய 'பாபா ஹிந்து கி யவன்?' என்ற கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில் (பக்கம் 562) பார்க்க. நீங்கள் அவரை இந்து என்று அழைத்தால் எப்போதும் மசூதியில் வாழ்ந்தார். முஹமதியர் என்றால் துனி என்னும் அகண்ட நெருப்பை அவர் எப்போதும் மசூதியில் வைத்திருந்தார். மற்றும் முஹமதிய மதத்திற்கு விரோதமான பின்வரும் மூன்று பழக்கங்களையும் கொண்டிருந்தார். அதாவது திருக்கையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது, தீயில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தை அர்க்கிய வழிபாடு செய்தல் முதலியன எப்போதும் அங்கு அனுமதிக்கப்பட்டன. நீங்கள் அவரை முஹமதியர் என்று நினைத்தால் பிராமண ஸ்ரேஷ்டர்களும், அக்னிஹோத்ரிகளும், தங்கள் வைதீகச் சம்பிரதாயத்தை விட்டிவிட்டு அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தனர். அவரது தேசம் முதலியவற்றை விசாரிக்கப் போனவர்கள் அவரது தரிசனத்தால், கவரப்பட்டுத் திகைத்து வாயடைத்து ஊமையானார்கள்.
எனவே அவர் ஒரு முஹமதியரா, இந்துவா என்பது ஒருவராலும் நிச்சயமாகத் தீர்க்க இயலாததாய் இருந்தது. இது அதிசயம் அல்ல. அஹங்காரத்தையும், உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் பரமாத்மாவுடன் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, சரணாகதியடைந்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை. சாயிபாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிக்குள்ளேயும், ஜந்துக்குள்ளேயும் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. பக்கிரிகளுடன் மாமிசமும், மீனும் அவர் உண்டார். நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும், அவர் அருவருப்புக் காட்டவில்லை.
சாயிபாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவார். முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நான் அவர் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிஷ்டத்தைப் பெற்றேன். அதிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் தன்நிகர் இல்லாதவை. உண்மையில் சாயிபாபா பரிபூரண ஆனந்தமும், உணர்வும் ஆவார். அவரின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும் போதுமான அளவிற்கு நான் விளக்க இயலாது. அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கப்படுகிறான். முக்தியில் ஆர்வமுள்ள பல சந்நியாசிகள், சாதகர்கள் மற்றும் எல்லாவித மக்களும் சாயிபாபாவிடம் வந்தனர். எப்போதும் அவர் நடந்தார், பேசினார், அவர்களுடன் சேர்ந்து சிரித்தார். எப்போதும் தம் நாவினால், 'அல்லா மாலிக்' (இறைவனே எஜமானர்) என மொழிந்தார். அவர் விவாதத்தையோ, கலகத்தையோ விரும்பவில்லை.
அவர் சிலநேரங்களில் கடுமையாக இருப்பினும் எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தார். எப்போதும் முழு வேதாந்தத்தையும் போதித்தார். கடைசிவரை பாபா யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. அரசர்களும், ஏழைகளும் அவர் முன் சமமாக நடத்தப்பட்டனர். அனைவருடைய ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிவார். அதை அவர் மொழிகளால் வெளியிட்டபோது அனைவரும் வியந்தனர். சர்வ விஞ்ஞானிகளின் கருவூலம் அவரே, எனினும் அறியாதவர்போல் நடித்தார். புகழை அவர் விரும்பவில்லை. இவைகளே சாயிபாபாவின் குணாதிசயங்கள். அவர் மானிட உருவத்தில் இருப்பினும், அவரின் செய்கைகள் அவரது கடவுள் தன்மையை எடுத்துக்காட்டியது. அனைவரும் அவரை ஷீர்டியில் இருக்கும் பரமாத்மா என்றே நம்பினர்.

No comments :
Post a Comment