சகுணப் பிரம்மமாக சாயி:
கடவுளுக்கு அல்லது பிரம்மத்திற்கு இரண்டு விதமான வழிபாடுகள் உண்டு.
1. அவதரிக்காத நிர்குண வழிபாடு
2. அவதரித்த 'சகுண வழிபாடு'
இரண்டும் ஒரே பிரம்மத்தைக் குறித்தாலும் நிர்குணம் உருவமற்றது. சகுணம் உருவமுள்ளது. சிலர் முன்னதையும், சிலர் பின்னதையும் வழிபடுவதை விரும்புகிறார்கள். கீதையில் (அத். 12) கூறியதைப்போன்று சகுணப் பிரம்மவழிபாடு எளிதானதானதும், ஆரம்பகாலத்திற்கு உகந்ததுமாகும். மனிதனுக்கு உருவம் இருப்பதைப்போன்று (உடம்பு, உணர்வுகள் முதலியன) உருவத்துடன் கூடிய கடவுளை வழிபடுவது அவனுக்கு இயற்கையானதும், எளிதுமாகிறது. சகுணப்பிரம்மத்தை சில குறிப்பிட்ட காலக்கூறுவரை வணங்கினாலொழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியுறாது. நாம் முன்னேறும்போது அது நம்மை நிர்குணப் பிரம்மத்தை வழிபட (தியானிக்க) இட்டுச்செல்கிறது.
எனவே, நாம் சகுண வழிபாட்டுடன் ஆரம்பிப்போமாக! உருவம், யாககுண்டம், தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்குரியவை. எனினும், சத்குருவே இவை எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தவர். பற்றின்மையும், அவதாரமும், முழு மனதார்ந்த தமது அடியவர்களின் உறைவிடமுமான சாயியை இத்தருணத்தில் நினைவு கூர்வோமாக. அவர் மொழிகளில் நமக்குள்ள நம்பிக்கையே ஆசனமாகும். நமது சங்கல்பமாவது (பூஜையை ஆரம்பிக்கும்போது சொல்லும் தெளிந்த தீர்மானம்) நமது ஆசைகள் அனைத்தையும் உதறித் தள்ளுதலாகும். சிலர், சாயி ஒரு பாகவதபக்தர் (கடவுளின் அடியவர்) என்று கூறுகின்றனர். மற்றும் சிலர், மஹாபாகவத் (பெரும் அடியவர்) என்றும் பகர்கின்றனர். ஆனால் நமக்கு அவர் கடவுளின் அவதாரமாவார். அவர் எல்லையற்ற அளவு மன்னிப்பாரகவும், கோபமற்றவராகவும், நேர்மையுள்ளவராகவும், மென்மையாளராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும், இருந்தார். அவர் உருவமுள்ளவராகத் தோன்றினாலும், உண்மையில் உருவம் அற்றவராகவும், உணர்ச்சி வேகமற்றவராகவும், பற்றற்றவராகவும், அந்தரங்கமாய் சுதந்திரமாகவும் இருந்தார்.
கங்கை நதி, தான் கடலுக்குச்செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட ஜீவராசிகளுக்குக் குளிர்ச்சியளித்து, புதுக்கிளர்ச்சியூட்டி, பயிர்களுக்கும், மரங்களுக்கும் உயிரையளித்து, பலரின் தாகத்தையும் தணிக்கிறது. இதைப்போன்றே சாயி போன்ற புண்ணிய புருஷர்கள் (ஆத்மாக்கள்) வாழ்ந்துகொண்டிருக்குபோதே அனைவருக்கும் துயராற்றி, ஆறுதல் நல்கிறார்கள். கிருஷ்ண பரமாத்மாவும், "ஞானி எனது ஆத்மா, எனது வாழும் உருவம், நான் அவரே, அவரே எனது தூய வடிவம்" என்று கூறியிருக்கிறார். சத்து - சித்து - ஆனந்தம் என அறியப்படும் இந்த விவரிக்க இயலாத ஆற்றல் அல்லது கடவுளின் சக்தியே ஷீர்டியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது.
ஸ்ருதி (தைத்திரீய உபநிஷதம்) பிரம்மத்தை ஆனந்தம் என விவரித்திருக்கிறது. இதை நாம் தினந்தோறும் நூல்களில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம். ஆனால் இப்பிரம்மத்தை அல்லது பேரானந்தத்தை ஷீர்டியில் பக்த மஹாஜனங்கள் அனுபவிக்கிறார்கள். அனைவருக்கும் ஆதாரமான அவருக்கு எவரிடமிருந்தும் எந்த ஆதாரமும் தேவையிருக்கவில்லை. ஒரு சாக்குத்துண்டையே எப்போதும் தமது ஆசனமாகக் கொண்டிருந்தார். பக்தர்களால் அது ஒரு மெல்லிய மெத்தைகொண்டு மூடப்பட்டிருந்தது. அவர் சாய்ந்துகொள்ள முதுகிற்கு ஒரு திண்டும் அவர்களாலேயே வைக்கப்பட்டது.
பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார். அவர்கள் விருப்பப்படியே தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார். அவர் முன்னிலையில் சிலர் சாமரம் அல்லது விசிறி வீசினர். சிலர் இசைக் கருவிகள் வாசித்தனர். சிலர் அவரின் கைகளையும், கால்களையும் கழுவினர். இன்னும் சிலர் வெற்றிலை, பாக்கு மற்றும் பல பொருட்களையும் நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர். ஷீர்டியில் அவர் வாழ்ந்ததுபோல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார். அவரின் எங்குநிறை தன்மையை அவருடைய பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள். இவ்வாறாக எங்கணும் வியாபித்திருக்கின்ற (சர்வாந்தர்யாமி) சத்குருவுக்கு நமது பணிவான சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment