சத்குருவாக சாயிபாபா
ஏராளமான குருக்கள் இருக்கின்றனர். தங்கள் கரங்களில் ஜால்ரா, தாளக்கருவி, வீணை சகிதம் வீடுதோறும் சென்று ஆத்மீகத்தைப் படாடோபம் செய்துகொள்ளும் குருக்கள் உண்டு. அவர்கள் மந்திரங்களைத் தமது சீடர்களின் காதில் ஓதி அவர்களிடமிருந்து பணத்தைக் கறப்பர். தமது சீடர்களுக்கு கடவுள் பற்றையும், கடவுள் நம்பிக்கையையும் உபதேசிப்பதாக உணர்ச்சி வகையில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வர். ஆனால் அவர்களே இறையனுபவம் அற்றவராக இருப்பர். ஆனால் சாயிபாபா தமது தகைமையையும் (கடவுள்பற்று), மெய்யுணர்வையும் காண்பிப்பதற்கு எவ்வித சிறிய முயற்சியையும் எடுக்கவேயில்லை. அடியவர்களிடம் பெருமளவு அன்பு கொண்டிருந்தார். இரண்டு விதமான குருக்கள் இருக்கின்றனர்.
(1) நியத் - நியமிக்கப்படவர், குறிக்கப்பட்டவர்
(2) அநியத் - நியமிக்கப்படாதவர், பொதுவானவர்
பின்னவர்கள் தங்கள் உபதேசங்களால் நம்மிடத்தில் உள்ள நற்பண்புகளை அபிவிருத்தி செய்கின்றனர். நமது இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர். நம்மை வீடுபேற்றை அடையும் பாதையில் செல்லத்தூண்டுகின்றனர். இதற்கு மாறுபாடாக முன்னவர்களாகிய குருக்களோ நமது தனி இயல்பை (பேத உணர்வை) அழித்து, 'நீயே அது!' என்று உணரச் செய்து, நம்மை ஏகத்வத்தில் ஸ்தாபிக்கின்றனர். பல்வேறு வகையான உலக ஞானத்தை அளிக்கும் பல திறத்தான குருக்கள் இருக்கின்றனர். ஆனால் நம்மை நமது இயற்கையில் (ஆத்மாவில்) நிலைப்படுத்தி உலகவாழ்வெனும் சாகரத்துக்கு அப்பால் நம்மைச் சுமந்து செல்பவரே சத்குரு எனப்படுவார்.
சாயிபாபா அத்தகைய ஒரு சத்குரு ஆவார். அவருடைய பெருமையை விவரிக்க இயலாது. யாரேனும் பாபாவின் தரிசனத்தைப் பெறச்சென்றால், கேட்கப்படாமலேயே அவரது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களின் ஒவ்வொரு விவரத்தையும் உரைப்பார். எல்லா ஜீவராசிகளிடமும் அவர் தெய்வீகத்தைக் கண்டார். நண்பர்களும், பகைவர்களும் அவருக்கு ஒன்றே. அவாவற்றவராகவும், சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த அவர் தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார். சுபிட்சத்திலும், எதிரிடையான சூழ்நிலையிலும் அவர் ஒரே மாதிரியாய் இருந்தார். எப்போதும், எவ்வித ஐயமும் அவரைத் தீண்டவில்லை. இவ்வுடம்பில் அவர் இயங்கினாரெனினும் எள்ளளவும் தமது உடம்பிலேயோ, வீட்டிலேயோ பற்றற்றவராகவே இருந்தார். உடலுருக்கொண்டு அவர் தோற்றமளித்தாலும் உண்மையில் அருவமானவர். அதாவது இந்த வாழ்க்கையிலிருந்தே விடுதலையானவர்.
அத்தகைய சாயியை தங்கள் கடவுளாக வழிபட்ட ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள். அவர்கள் உண்ணும்போதும், அருந்தும்போதும், பழக்கடையிலும், வயலிலும் மற்றபிற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் சாயியை நினைவு கூர்ந்தார்கள். அவர்தம் புகழைப் பாடினார்கள். சாயியைத் தவிர பிறிதொரு கடவுளை அவர்களுக்குத் தெரியாது. ஷீர்டியில் வசித்த பெண்களின் அன்பின் இனிமையை எங்ஙனம் விவரிக்கமுடியும்! அறியாதவர்களாக இருப்பினும் அவர்களின் தூயஅன்பு எளிய கிராமியமொழியில் பாபாவின் புகழை கவிதையாகவும், தெம்மாங்குப் பாடலாகவும் பாட உணர்வூட்டியது. எழுத்தறிவு அவர்களிடம் இல்லையாயினும் உண்மைக் கவித்துவத்தை அவர்களின் எளிமையான பாடல்களில் தெளிவாக உணரமுடியும். படிப்பறிவு அன்று! ஆழ்ந்த அன்பே அத்தகைய பொருள்செறிந்த பாடல்களை வெளிக்கொணர்ந்தது. அப்பாடல்கள் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடே. சற்றே அறிவுக்கூர்மையுள்ள ஆர்வலரால் அவற்றை உணர்ந்து இன்புறமுடியும்.
இந்த கிராமியப் பாடல்களை சேகரித்து தொகுப்பது மிகவும் அவசியமான ஒன்று. பாபாவின் விருப்பத்தால் அதிஷ்டமுடைய பக்தர் எவரேனும் இப்பணியை மேற்கொண்டு சாயிலீலா சஞ்சிகையிலோ அல்லது தனிப்புத்தகமாகவோ பிரசுரிக்கலாம்.

No comments :
Post a Comment