Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 7 - பகுதி 3

No comments

பாபாவின் யோகப் பயிற்சிகள்

பாபா யோகத்தின் எல்லாப் பயிற்சிமுறைகளையும் அறிவார்.  அவைகளில் இரண்டை இங்கே குறிப்பிடுவோம்.  

1. தவ்தி அல்லது சுத்த விருத்தி

ஒவ்வொரு மூன்றாவது நாளும் பாபா, மசூதியிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச் சென்று தமது வாயைக்கழுவி குளிப்பார்.  ஒரு சந்தர்ப்பத்தில் தமது குடல், கும்பி முதலியவற்றை அவர் வாந்தியெடுத்து, அவைகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து பக்கத்திலுள்ள நாவல் மரத்தில் உலர்வதற்காக வைத்தது கவனிக்கப்பட்டது.  இதனைப் பார்த்தவர்கள் ஷீர்டியில் உள்ளனர்.  அவர்கள் இவ்வுண்மையைச் சோதனை செய்து பார்த்துவிட்டனர்.  3 அங்குல அகலமும், 22½ அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியால் தவ்தி செய்யப்படுகிறது.  இது தொண்டைக்குள் விழுங்கபட்டு ஏறக்குறைய அரைமணி நேரத்திற்கு வயிற்றுக்குள்ளேயே கிரியைகள் நடத்த வைத்திருக்கப்பட்டுப் பிறகு வெளியே எடுக்கப்படுவதே சாதாரண தவ்தியாகும்.  ஆனால் பாபாவின் தவ்தியோ மிகவும் தனிச்சிறப்பானதும், அசாதாரணமானதும் ஆகும்.

2. கண்ட யோகம்

பாபா, தமது உடம்பிலிருந்து வெவ்வேறு உறுப்புக்களைப் பிய்த்தெடுத்து, மசூதியில் அவற்றைப் பல இடங்களிலும் தனியாக வைத்திருத்தார்.  ஒருமுறை, ஒரு பெருந்தகை மசூதிக்குச் சென்று பாபாவின் உடல் உறுப்புக்கள் தனித்தனியாக மசூதியின் பல இடங்களிலும் கிடப்பதைக் கண்டார்.  அவர் மிகவும் பீதியடைந்து, முதலில் கிராம அதிகாரிகளிடம் சென்று, பாபா கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை அறிவிக்க எண்ணினார்.  அவரே முதல் தகவல் தந்தவராகி விடுவராதலாலும், அவ்விஷயத்தைப் பற்றி சிறிது அறிந்து இருந்தாலும், அவர்மீது பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என எண்ணி யாரிடமும் ஏதுமே பேசாமல் இருந்துவிட்டார்.  ஆனால் மசூதிக்குச் சென்றபோது, பாபா தேக ஆரோக்கியத்துடன்  முன்போலவே இருப்பதைக் கண்டு மிகவும் அதிசயம் அடைந்தார்.  தான் முதல்நாள் பார்த்தது வெறும் கனவு என்றே அவர் எண்ணினார்.  

பாபா தமது சிசுப் பருவத்தில் இருந்தே யோகம் பயின்றார்.  அவர் பெற்றுள்ள திறமையை ஒருவரும் அறிந்திருக்கவில்லை அன்றி ஊக்கிக்கவும் இல்லை.  தமது சிகிச்சைகளுக்கு எவ்வித பணமும் அவர் வசூலிக்கவில்லை.  தமது தகைமைகளின் திறத்தின் பயனால் புகழ்பெற்றுப் பெருமையுற்றார்.  பல ஏழைகளுக்கும், துன்பப்படும் மக்களுக்கும் அவர் ஆரோக்கியம் அளித்தார்.  வைத்தியர்களில் எல்லாம் தலைசிறந்த புகழ்பெற்ற வைத்தியரான அவர் தமது தேவைகளை லட்சியம் செய்யவில்லை.  மற்றவர்களின் நன்மைக்கும், சௌகரியத்திற்குமே எப்போதும் உழைத்தார்.  தாங்கமுடியாத பயங்கர வலிகளை எல்லாம் தாமே பலமுறை, இம்முறைகளில் தாங்கித் துயருற்றிருக்கிறார்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment