Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 2

No comments

கடந்த அத்தியாயத்தில் பாபாவின் பிச்சையைப் பற்றியும், பக்தர்களின் அனுபவங்களைப்பற்றியும், மற்ற விஷயங்களைப்பற்றியும் கூறப்பட்டது.  பாபா எவ்வாறு வாழ்ந்தார், எவ்வாறு தூங்கினார், எவ்வாறு கற்பித்தார் என்று வாசகர்கள் தற்போது கேட்பார்களாக!

பாபாவின் அற்புதமான படுக்கும் பலகை

பாபா எங்கு, எவ்வாறு தூங்கினார் என்பதைக் காண்போம்.  நான்கு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும் உள்ள பலகையை பாபா படுத்து உறங்குவதற்காக நானா சாஹேப் டேங்க்லே கொணர்ந்தார்.  அதனைத் தரையில் போட்டு அதன்மீது உறங்குவதற்குப் பதிலாக, மசூதியின் உத்தரங்களில் இற்றுப்போன கந்தல் துணிகளால் அதை ஒரு ஊஞ்சல்போல் கட்டி, அதன்மீது படுத்துறங்க ஆரம்பித்தார்.  எப்படி பாபாவின் உடலை அது தங்குகிறது என்பது ஒருபுறமிருக்க, தனியாகப் படுக்கையையே தாங்குவது பிரச்சனையாகவுள்ள அளவுக்கு மெல்லியதாகவும், இற்றுப்போயும் அக்கந்தல் துணி இருந்தது.  ஆனால் எவ்விதமாகவோ பாபாவின் லீலையால் மட்டுமே அக்கந்தல் துணி பாபாவின் கனத்துடனும், பலகையையும் தாங்கவே செய்தது.  பலகையின் நான்கு மூலைகளிலும், மூலைக்கொரு மண்விளக்கு வீதம் ஏற்றி, இரவு முழுவதும் எரிந்துகொண்டிருக்கும்படியாக வைப்பார்.

இப்பலகையின்மீது பாபா அமர்ந்து கொண்டிருப்பதையோ, துயின்றுகொண்டிருப்பதையோ கண்ணுறும் தரிசனமானது தேவர்களுக்கும் கிடைப்பதற்கு அரியதொன்றாகும்!  அதில் பாபா எங்ஙனம் ஏறி இறங்கினார் என்பது அனைவருக்கும் வியப்பை விளைவிப்பதாய் இருந்தது.  இதனை அறியும் ஆர்வத்துடன் பாபா ஏறுவதையும், இறங்குவதையும் காண்பதற்காகப் பல கவனமுள்ள பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதிலும் ஒருவரும் அதனைக் காண்பதில் வெற்றிபெறவில்லை.  இவ்விசித்திரமான அருஞ்செயலை நுணுகிக் காண்பதற்காக கூட்டம் அதிரிக்கவே, ஒருநாள் பாபா பலகையைத் துண்டுதுண்டாக உடைத்து எறிந்துவிட்டார்.  எட்டுவிதமான மஹாசித்திகளும் (அஷ்டமா சித்திகள்) பாபாவின் ஆணையில் இருந்தன.  அவர் அவைகளை ஒருபோதும் பயிற்சிக்கவோ அவைகளுக்காக ஏங்கவோ இல்லை.  அவைகள் பாபாவின் முழுமையினால் தாமாகவே அவரை வந்தெய்தின.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)




No comments :

Post a Comment