Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 8 - பகுதி 5

No comments

பாயஜாபாயின் உன்னத சேவை

தாத்யா கோதே பாடீலின் தாயார் பாயஜாபாயி ஆவார்.  அவர் தினந்தோறும் மதியம் ரொட்டியும், காய்கறிகளும் அடங்கிய கூடையை தன் தலையில் வைத்துக்கொண்டு காடுகளுக்குப் போவது வழக்கம்.  புதர், பூண்டுகளில் பல மைல் கணக்கில் அவ்வம்மையார் அலைந்து திரிந்து கேனைப் பக்கிரியைக் கண்டுபிடித்து, அவர் பாதத்தில் வீழ்ந்து, அடக்கமாகவும், அசைவில்லாமலும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் முன்னர் இலையை விரித்து ரொட்டி, காய்கறிகள் மற்ற உணவுப் பொருட்கள் முதலியவற்றை அதன்மேல் வைத்து அவரை பலவந்தமாக உண்பித்தார்.  பாயஜாபாயின் நம்பிக்கையும், சேவையும் வியக்கத்தக்கதாகும்.  ஒவ்வொரு நாளும் அவர் காட்டில் மதிய வேளைகளில் அலைந்து திரிந்து, உணவை உண்ணும்படி பாபாவை வற்புறுத்தினார்.

அவருடைய சேவை, உபாசனை, தவம் என்று எவ்விதப் பெயரிட்டு அதை நாம் அழைத்தாலும், இறுதி மூச்சு வரையிலும் பாபா அதனை மறக்கவில்லை.  அவர் செய்த சேவையை முழுமையும் ஞாபகத்தில்கொண்ட பாபா, அவரது மகனுக்கு அபாரமான அளவிற்கு உதவிசெய்தார்.  தாய்க்கும், மகனுக்கும் அவர்களது கடவுளான பக்கிரியின் மீது பெருமளவிற்கு நம்பிக்கை இருந்தது.  பாபா அவர்களிடம் அடிக்கடி, "ஆண்டித்தனமே உண்மையான பிரபுத் தன்மையாகும்.  ஏனெனில், அது எப்போதும் நிலைத்திருக்கிறது.  புகழ்பெற்ற பிரபுத்தனமெல்லாம் (செல்வமெல்லாம்) நிலையற்றவை" என்று கூறுவார்.   சில ஆண்டுகளுக்குப் பின்னால் பாபா காட்டுக்குப் போவதை விட்டுவிட்டு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்.  தமது உணவை மசூதியிலேயே உட்கொள்ளத் தொடங்கினார்.  அதிலிருந்து பாயஜாபாஜின் காடுகளில் சுற்றி அலையும் தொந்தரவுகள் முற்றுப்பெற்றன.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment