சாயிபாபாவின் குணாதிசயங்கள்
பாபாவின் அற்புதங்களை விளக்கத் தெரியாத அறிவிலி நான். ஷீர்டியிலுள்ள ஏறக்குறைய எல்லாக் கோவில்களையும் அவர் பழுதுபார்க்கச் செய்தார். சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, கிராமதேவதை, மாருதி முதலிய எல்லாக் கோவில்களையும் தாத்யா பாடீல் மூலமாக ஒழுங்குபடுத்தச் செய்தார். அவருடைய தர்மமும் குறிப்பிடும்படியானது. தட்சணை என்ற பெயரில் அவர் வழக்கமாக வாங்கிவந்த பணமும் தாராளமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ரூ.20 சிலருக்கும், ரூ.15 அல்லது ரூ.50 மற்றவர்களுக்கும் தினந்தோறும் அளிக்கப்பட்டது. இது தூய தர்மப்பணம் என்றும், அதை உபயோகமாகப் பயன்படுத்தவும் பாபா விரும்பினார். பாபாவின் தரிசனத்தைப் பெற்றால், மக்கள் மிகப்பெரும் அளவில் பயனடைந்தார்கள். சிலர் ஆரோக்கியமும், நலமும் பெற்றனர். கொடியவர்கள் நல்லவர்களாகத் திருந்தினார்கள். சில சந்தர்ப்பத்தில் குஷ்டம் குணமாக்கப்பட்டது. பலர் தங்களின் மனோபீஷ்டங்களில் பூர்த்தி எய்தினர். குருடர்கள் தமது கண்களில் எவ்வித மருந்தோ, சாறோ விடப்படாமல் பார்வையை அடைந்தார்கள். சில முடவர்கள் கால்களை அடைந்தார்கள்.
அவரின் அசாதாரணப் பெருந்தன்மைக்கு ஒரு எல்லையை ஒருவராலும் காண இயலாது. அவரது புகழ் நெடுந்தூரம் பரவி, எல்லா திசைகளிலிருந்தும் யாத்ரீகர்கள் ஷீர்டியை நோக்கித் திரண்டனர். பாபா எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார். அங்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தார். சில சமயங்களில் குளித்தும், மற்றநேரங்களில் குளிக்காமலும் இருந்தார். தமது தலையில் ஒரு வெள்ளை டர்பனும்(தலைப்பாகை), இடுப்பில் சுத்தமான வேஷ்டியும், தமது உடம்பில் ஒரு சட்டையும் அணிவது வழக்கம். ஆரம்பத்தில் இதுவே அவரது உடையாகும். அவர் கிராமத்தில் முதலில் வைத்தியம் செய்தார். நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுத்தார். அவர் எப்போதும் வெற்றிபெற்று ஹகீமைப் (வைத்தியர்) போன்று புகழடைந்தார்.
ஒரு வினோதமான விஷயத்தை இங்கு கூறலாம். ஓர் அடியவரது கண்கள் சிவந்தும், வீங்கியும் இருந்தது. ஷீர்டியில் ஒரு வைத்தியவரும் கிடைக்கவில்லை. மற்ற அடியவர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றனர். அதைப்போன்ற வியாதிக்கு மற்ற டாக்டர்கள் களிம்பு, அஞ்சனம், பசும்பால், கற்பூராதி மருந்துகள் முதலியன உபயோகிப்பர். ஆனால் பாபாவின் சிகிச்சையோ முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. சிறிது பிப்பாவை (சலவை செய்பவர் குறியிடும் செங்கோட்டைக் காயின் பசை) கைகளால் இரண்டு உருண்டைசெய்து, நோயாளியின் ஒவ்வொரு கண்களிலும் அவ்வுருண்டையைத் திணித்துவிட்டு துணியால் கண்களைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார். மறுநாள் கட்டு அவிழ்க்கப்பட்டுத் தண்ணீரால் சுத்தப்படுத்தப்படது. எரிச்சல் மறைந்து கண்மணி வெண்மையாய் சுத்தமாகிவிட்டது. கண்கள் நுண்ணிய உறுப்பானபோதும் செங்கோட்டை பசை அவற்றுக்கு எவ்விதத் தீங்கையும் அளிக்கவில்லை. இம்மாதிரிப் பல வியாதிகளைக் குறிப்பிடலாம். ஆனால் இந்நிகழ்ச்சியே குறிப்பில் உள்ளது.

No comments :
Post a Comment