மாதவ்ராவ் தேஷ்பாண்டேயிடமிருந்து பாபாவின் கரங்கள் வெந்துபோனதைக் கேள்விப்பட்ட நானா சாஹேப் சாந்தோர்கர், பம்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டரான பரமானந்த் என்பவரை ஆயின்மென்ட், லிண்ட் துணி, பாண்டேஜ் துணி உட்பட மருத்துவச் சாமான்களுடன் அழைத்துவந்து, பாபாவின் கரத்தைப் பரிசோதிக்கவும், வெந்ததினால் ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை செய்யவும் வேண்டிக்கொண்டார். ஆனால் பாபாவினால் இது மறுக்கப்பட்டது. அது முதற்கொண்டு பாகோஜி ஷிண்டே என்ற குஷ்டரோகி அடியவரால், பாபாவுக்குச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது. வெந்துபோன இடத்தை நெய்போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு இலையை அதன்மீது வைத்துக் கட்டிவிடுவது அவரது சிகிச்சையாகும். நானா சாஹேப் பலமுறை பாபாவிடம் அந்தக்கட்டை நீக்கிவிட்டு, டாக்டர் பரமானந்தை காயத்தைச் சோதிக்கவும், சிகிச்சை செய்யவும், குணப்படுத்தவும் (அது விரைவில் குணப்படும் என்ற எண்ணத்துடன்) கேட்டுக்கொண்டார். டாக்டர் பரமானந்தும் அதையொப்ப பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அல்லாவே அவரது மருத்துவர் என்றுகூறி பாபா மறுத்துவிட்டார்.
அவரைத் தனது கையைச் சோதிக்க அனுமதிக்கவேயில்லை. டாக்டர் பரமானந்தின் மருந்துகள் ஷீர்டியில் உபயோகப்படுத்தப்படவில்லை. இருப்பினும் டாக்டருக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறும்படியான நல்லதிஷ்டம் இருந்தது. தினந்தோறும் பாகோஜி, அவர் கரத்திற்குச் சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப்பின் கரம் குணப்படுத்தப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். ஏதோ இலேசான வலி இன்னும் இருந்திருக்குமோ இல்லையோ என்பதை நாம் அறியோம். தினந்தோறும் பாகோஜி தனது நிஜதிப்படி கட்டுக்களைத் தளர்த்தி, நெய்யினால் அதை நன்றாக மீண்டும் தேய்த்து, அழுத்திக் கட்டுப்போடுவார். இது சாயிபாபாவின் மஹாசமாதிவரை நடைபெற்றது.
அவர் ஒரு முழு சித்தரானதால் இந்த சிகிச்சை உண்மையில் அவருக்குத் தேவையிருக்கவில்லை. ஆனால் தமது அடியவர் மீதுள்ள அன்பின் காரணத்தால் பாகோஜியினது உபாசனையை (சேவையை) முழுவதுமாகத் தடையின்றி நடத்த அனுமதித்தார். பாபா லெண்டித் தோட்டத்திற்க்குப் புறப்பட்டபோது பாகோஜி அவருக்குக் குடைபிடித்து அவருடன் கூடச் சென்றார். துனிக்கருகில் உள்ள கம்பத்தருகில் பாபா அமர்ந்ததும் பாகோஜி தனது சேவையை ஆரம்பித்தார். பாகோஜி முந்தைய ஜென்மத்தில் தீவினையாளர். அவர் குஷ்டரோகத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். அவரது கைகள் சுருங்கியிருந்தன. அவர் உடம்பு முழுவதும் சீழாகி, மோசமாக, நாற்றம் அடித்தது. வெளியில் அவர் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதைப்போல் தோன்றினாலும், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், மகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார். ஏனெனில் அவரே பாபாவின் முதன்மையான சேவகர். பாபாவின் நட்பினால் உண்டாகும் நன்மைகளை அடைந்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment