Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 6

No comments

தர்கட் குடும்பம் (தந்தையும் மகனும்)

முன்னர், பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ஆத்மாராம் என்னும் பாபா சாஹேப் தர்கட் சாயிபாபாவின் ஓர் உறுதியான பக்தர் ஆவார்.  அவருடைய மனைவியும், மகனும் சாயிபாவிடம் அதற்கு இணையாகவே அல்லது இன்னும் சற்று அதிகமாகவே கூட அன்பு செலுத்தினர்.  ஒருமுறை திருமதி தர்கட்டும், அவர்களது மகன் தர்கட்டும் மே மாத விடுமுறைக்கு ஷீர்டிக்குப் போவது எனத் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் மகன் போக விரும்பவில்லை.  காரணம் அவன் பாந்த்ரா வீட்டைவிட்டுப் போவானாகில் வீட்டில் சாயிபாபாவின் பூஜை முறையாகக் கவனிக்கப்படமாட்டாது என்று அவன் கருதியதேயாகும்.  ஏனெனில், அவனது தகப்பனார் பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்தவராதலால் சாயிபாபாவின் பெரிய படத்தைப் பூஜை செய்வதை அவர் இலட்சியம் செய்யமாட்டார் என்று அவன் கருதினான்.  எனினும் தனது மகன் செய்வதைப்போன்று அதே விதமாக, தான் பூஜா கர்மங்களைச் செய்வதாக அவர் உறுதியாக வாக்களித்த பின்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தாயும், மகனும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். 

அடுத்த நாள் (சனிக்கிழமை) தர்கட் அதிகாலையில் எழுந்திருந்து பூஜை செய்வதற்குமுன் நீராடிவிட்டுப் பூஜை அறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பாபா, எனது மகன் செய்த அதேமாதிரியாக நான் பூஜை செய்யப்போகிறேன்.  ஆனால் தயவுசெய்து அதை ஒரு இயந்திரகதியான பயிற்சியாக ஆக்கிவிடாதீர்கள்", என்று கூறிக்கொண்டே பூஜை செய்து, சில கற்கண்டுகளை நைவேத்தியமாகச் சமர்ப்பித்தார்.  அக்கற்கண்டு பகல் உணவின்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.  

அந்நாள் மாலையும், அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் எல்லாம் நலமாகவே நடந்தேறின.  தொடர்ந்து வேலைநாளான திங்கட்கிழமையும் நன்றாகவே கழிந்தது.  தனது வாழ்நாளிலேயே இம்மாதிரியாகப் பூஜை செய்தறியாத தர்கட் தன மகனுக்கு வாக்களித்தபடி எல்லாம் மிகவும் திருப்திகரமானமுறையிலேயே நடந்தேறிக்கொண்டிருப்பதில் தனக்குள்ளேயே பெருமளவு நம்பிக்கை பெற்றார்.  அடுத்த நாளான செவ்வாயன்று வழக்கம்போல் காலையில் பூஜை நிகழ்த்தியபின் தனது வேலைக்குச் சென்றார்.  மதியம் வீட்டுக்கு வந்து உணவு பரிமாறப்பட்டபோது, பகிர்ந்துகொள்ள கற்கண்டு பிரசாதம் இல்லாததைக் கண்டார்.  அவர் தமது சமையல்காரனை விசாரித்ததில், காலையில் எவ்வித நைவேத்யமும் செய்யப்படவில்லை என்று அறிந்தார்.  பூஜையின் அந்த அம்சத்தை நிகழ்த்த அவர் அடியோடு மறந்துவிட்டிருந்தார்.  இதுகுறித்து தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து பூஜையறையில் விழுந்து வணங்கி, தமது தவறுதலுக்காக வருத்தம் தெரிவித்து, அதே நேரத்தில் இத்தகைய ஒரு சாதாரணமான நடைமுறை விஷயத்தில் வழிகாட்டாததற்காக பாபாவை அவர் கடிந்துகொண்டார்.  பின்பு தனது மகனுக்கு உண்மைகளைக்கூறி ஒரு கடிதம் எழுதி அதை பாபாவின் பாதத்தடியில் வைத்து புறக்கணிப்பிற்காகத் தம்மைப் பொறுத்தருளவும் வேண்டுமாறு எழுதியிருந்தார்.  செவ்வாய்க்கிழமை மதியத்தில் பாந்த்ராவில் இது நிகழ்ந்தது.  

ஏறக்குறைய இதே நேரத்தில் ஷீர்டியில் மத்தியான தீபாராதனை நிகழ்வதற்குச் சிறிது முன்பாக பாபா திருமதி கர்கட்டை நோக்கி, "அம்மா, பாந்த்ராவில் உள்ள உனது வீட்டிற்கு ஏதேனும் உண்ணலாம் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தேன்.  கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்.  எப்படியோ உள்ளே நுழைந்து, பாவ் (தர்கட்), நான் உண்பதற்கு ஏதும் விட்டுவைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் அறிந்தேன்.  எனவே பசி தணிக்கப்படாமலேயே திரும்பிவிட்டேன்", என்று கூறினார்.

அப்பெண்மணிக்கு இது ஒன்றும் புரியவில்லை.  அருகிலிருந்த மகனோ அதாவது பாந்த்ராவில் பூஜைஜில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அனைத்தையும் புரிந்துகொண்டு, வீடு திரும்ப பாபாவின் அனுமதியை வேண்டினான்.  பாபா இதை மறுத்தார்.  எனினும் அங்கேயே அப்பையனைப் பூஜைசெய்ய அனுமதித்தார்.  அப்போது ஷீர்டியில் நிகழ்ந்த விபரங்களையெல்லாம் பற்றி பையன், தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதி, வீட்டில் பூஜையை அலட்சியம் செய்யவேண்டாமென்று மன்றாடி வேண்டியிருந்தான்.  இரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று தாண்டிப்போய் இருவருக்குமே அடுத்தநாள் கிடைத்தன.  இது ஓர் அற்புதமல்லவா?

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment