டாக்டர் பண்டிட்டின் வழிபாடு:
ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் என்பவர் ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார். பாபாவை வணங்கியபின் மசூதியில் அவர் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார். பாபா, அவரைத் தாதாபட் கேல்கரிடம் செல்லுமாறு பணித்தார். தாதாபட்டிடம் அவர் சென்றார். தாதாபட் அவரை நன்கு வரவேற்றார். தாதாபட் பூஜைக்காக தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டார். அவருடன் டாக்டர் பண்டிட்டும் சென்றார். தாதாபட் பாபாவை வழிபாடு செய்தார். இதுகாறும் எவரும் பாபாவின் நெற்றிக்குச் சந்தனம் பூசத் துணிந்ததில்லை.
மகால்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம். ஆனால் எளிய மனதுடைய இவ்வடியவரான டாக்டர் பண்டிட் பூஜைப்பொருட்கள் வைத்திருந்த டாக்டர் தாதாபட்டின் பாத்திரத்தை எடுத்துப்போய் அதிலிருந்து பிசையப்பட்ட சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் திருநீற்றுப் பட்டையை பாபாவின் நெற்றியில் இட்டார். பாபா, எல்லோருக்கும் வியப்பையளிக்கும் வகையில், ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அமைதியாய் இருந்தார்.
அன்றுமாலை தாதாபட் பாபாவிடம், "நெற்றியில் சந்தனம் பூசுவதை நீங்கள் தடுத்துக்கொண்டிருந்தாலும் இப்போது டாக்டர் பண்டிட் அங்ஙனம் செய்ததைத் தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள்?" என்று கேட்டார். இதற்கு பாபா, டாக்டர் பண்டிட் தம்மை (பாபாவை) அவரது குருவான காகாபுராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜ் என்று நம்பியிருந்ததாகவும், அவர் குருவுக்கு செய்துகொண்டிருந்ததைப் போன்றே தமது நெற்றியிலும் சந்தனம் பூசியதாகவும் தெரிவித்தார். எனவே பாபாவால் தடுக்க இயலவில்லை. டாக்டர் பண்டிட்டிடம் விசாரித்ததில் பாபாவைத் தனது குரு காகாபுராணிக் என்று கருதியதாகவும் அதே மாதிரியாகவே அவரை உணர்ந்ததாகவும் கூறினார். எனவே அவர் தனது குருவுக்குச் செய்வதைப்போன்றே திரிபுந்த்ரத்தை பாபாவின் நெற்றியிலும் இட்டார்.
பக்தர்கள் விரும்பியவாறே தம்மை வழிபட பாபா அவர்களை அனுமதித்தார். எனினும் சில சமயங்களில் அவர் விநோதமானமுறையில் நடந்துகொண்டார். சில சமயங்களில் பூஜைத்தட்டைத் தூக்கியெறிந்து சீற்றமே அவதரித்ததுபோல் நின்றிருப்பார். அப்போது அவரை எவரே அணுக முடியும்? சில சமயங்களில் அவர் பக்தர்களைக் கடிந்தார். சில சமயங்களில் மெழுகைக்காட்டிலும் மென்மையாய் இருந்தார். சாந்தத்துக்கும், மன்னிப்புக்குமான ஓர் உருவமாய் இருந்தார். கோபத்தால் அவர் குலுங்குவதுபோல் தோன்றினாலும், அவரது சிவந்த கண்கள் சுற்றிச்சுற்றி உருண்டாலும் அவர் அந்தரங்கமாக, பாசத்தின் தாரையாக, தாயன்பு உடையவராக இருந்தார்.
உடனே தமது அடியவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் தாம் ஒருபோதும் கோபமாக இருந்ததே இல்லை எனக்கூறி, தாயார் தங்களது குழந்தைகளை உதைத்தார்களானால், கடலானது ஆறுகளைப் புறக்கணித்ததென்றால் தாமும் அடியவர்களின் நலன்களை அலட்சியம் செய்வேன் எனவும் பகர்ந்தார். தமது பக்தர்களின் அடிமையான அவர் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதையும், அவர்கள் தம்மை அழைக்கும்போதெல்லாம் மறுமொழி கூறி அவர்களின் அன்பைப் பெறுவதற்குமே எப்போதும் அவர் பெரிதும் விரும்பினார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment