Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 5

No comments

பாபா மேற்கொண்ட பணியும், உபதேசமும் 

முனிவர் ராம்தாஸ் (1608 - 1681) பதினேழாம் நூற்றாண்டில் செழித்தோங்கி விளங்கினார்.  பசுக்களையும், அந்தணர்களையும், யவனர்களிடமிருந்து (மொஹலாயர்களிடமிருந்து) காப்பாற்றுதல் என்னும் தாம் மேற்கொண்ட குறிக்கோளை பெருமளவிற்கு நிறைவு செய்தார்.  ஆனால் அவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இரு வகுப்பினர்களுக்குள்ளும் மீண்டும் (இந்து - முஸ்லிம்கள்) வேற்றுமை அதிகரித்தது.  அந்தப் பாதாளப் பள்ளத்தினை இணைக்கும் பாலமாக சாயிபாபா விஜயம் செய்தார்.  

அனைவருக்கும் அவர்தம் நிரந்தரமான உபதேசத்தின் உட்கருத்து இவ்வாறனதாகும்.  "ராமரும் (இந்துக்களின் தெய்வம்) - ரஹீமும் (முஸ்லிம்களின் தெய்வம்) ஒன்றே ஒன்றுதான்.  அவர்களுக்குள் எள்ளளவும் வேற்றமை இல்லை.  பின்னர் ஏன் அவர்களின் அடியவர்கள் சச்சரவு புரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்?  கள்ளங்கபடு அறியாத மக்களாக கைகோர்த்து இரு வகுப்பினரும் ஒன்றாயிணைந்து விவேகத்துடன் நடந்துகொள்ளுங்கள்.  இங்ஙனமாக உங்களது குறிக்கோளாகிய தேசீய ஒற்றுமையை ஈட்டப்பெறுவீர்கள்.  போராடி வாதாடுதல் நன்றன்று.  எனவே விவாதிக்க வேண்டாம்.  மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம்.  எப்போதும் உங்களது அக்கறையினையும், நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக.  

கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்.  யோகம், தியாகம், தவம், ஞானம் என்பன கடவுளையறியும் நெறிகள்.  இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றன் மூலம் நீங்கள் இதில் வெற்றிபெற இயலாவிடின், உங்கள் பிறப்பு வீணேயாகும்.  யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்குச் செயவாரேயாகில், அதற்க்காகப் பழிக்குப் பழி வாங்காதீர்கள்.  நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால், பிறருக்குச் சிறிது நன்மையைச் செய்வீராக!"  இது அனைவருக்கும் சாயிபாபா அளித்த உபதேசத்தின் சுருக்கம்.  இது லௌகிக, ஆன்மிக விஷயங்கள் இரண்டிலுமே நலம் பயப்பதாகும்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)

No comments :

Post a Comment