திருமதி தர்கட்
தற்போது திருமதி தர்கட்டின் நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம். அவள் மூன்று பொருட்களைச் சமர்ப்பித்தாள். அதாவது, (1) பரீத் (கத்தரிக்காய் தயிர் பச்சடி), (2) காச்சர்யா (முழு கத்தரிக்காய் பொரியல்), (3) பேடா (பால் கேக்). இவற்றை பாபா எங்கனம் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.
ஒருமுறை பாபாவின் பெரும் பக்தரான, பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் பாஸ்கர் புரந்தரே என்பவர் ஷீர்டிக்கு தன் குடும்பத்துடன் புறப்பட்டார். பாந்த்ராவில் திருமதி புரந்தரேயிடம், திருமதி தர்கட் சென்று, அவளுக்கு இரண்டு கத்தரிக்காய்கள் அளித்து, ஷீர்டியில் ஒரு கத்தரிக்காயில் பரீத்தும், மற்றதில் காச்சர்யாவும் செய்து, பாபாவுக்கு அவற்றைப் பரிமாறும்படி கூறியிருந்தாள். ஷீர்டியை அடைந்தபின்னர், திருமதி புரந்தரே தனது பரீத்துடன் மசூதிக்குச் சென்ற அதே தருணத்தில், பாபா தமது சாப்பாட்டிற்காக அமர்ந்து கொண்டிருந்தார். பாபா, பரீத் மிகவும் ருசியாக இருப்பதைக் கண்டார். எனவே அதை அவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்துத் தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக் கூறினார்.
ராதாகிருஷ்ணமாயிக்கு, பாபா காச்சர்யாக்கள் வேண்டுகிறார் என்ற செய்தி அனுப்பப்பட்டது. அது கத்தரிக்காய் சீசன் இல்லையாதலால் அவள் குழப்பமடைந்தாள். கத்தரிக்காயை எப்படிப் பெறுவது என்பதே தற்போதைய பிரச்சினை. பரீத்தை யார் கொண்டுவந்தார் என்று விசாரித்ததில் காச்சர்யா பரிமாறும் பணியிலும் திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள் என அறியப்பட்டது. காச்சர்யாவைப் பற்றியா பாபாவின் வேண்டுதலின் உட்குறிப்பை அனைவரும் புரிந்துகொண்டனர். எங்கும் வியாபித்திருக்கும் அவர்தம் ஞானத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் செயலிழந்தனர்.
1915ஆம் வருடம் மார்கழி மாதத்தில் கோவிந்த் பாலாராம் மாநகர் என்பவன் தனது தந்தையின் திவசங்களையெல்லாம் செய்வதற்காக, ஷீர்டிக்குச் செல்ல விரும்பினான். புறப்படுவதற்குமுன் திருமதி தர்கட்டைப் பார்க்க வந்தான்.
அப்போது பாபாவுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்று திருமதி தர்கட் நினைத்தாள். வீடு அனைத்திலும் தேடியும் முன்னமே நைவேத்தியமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத் தவிர வேறெதையும் அவள் காணவில்லை. பையன் கோவிந்த் மிகவும் துயர் கொண்ட நிலையில் இருந்தான். எனினும் பாபாவிடம் கொண்டுள்ள பெரும் பக்தியின் காரணமாக அவனிடம் பேடாவைக் கொடுத்து அனுப்பினாள். பாபா அதனை ஏற்றுக்கொள்வார் என நம்பினாள்.
கோவிந்த் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் கண்டான். ஆனால் பேடாவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான். பாபா பொறுத்திருந்தார். மறுபடியும் மாலையில் சென்றபோதும் பேடாவைக் கொண்டுசெல்லாமல் வெறுங்கையுடன் சென்றான். பாபா இதற்குமேல் பொறுக்க இயலாதவராய், "எனக்கு நீ என்ன கொண்டுவந்திருக்கிறாய்", என்று கேட்டார். "ஒன்றுமில்லை" என்று பதில் வந்தது. மீண்டும் பாபா அவனைக் கேட்டார். அதே பதில்தான் அளிக்கப்பட்டது. பின்னர் பாபா, "நீ புறப்படும்போது அம்மா உன்னிடம் எனக்காக இனிப்புப் பலகாரம் கொடுக்கவில்லையா?", என்ற குறிப்பான வினாவொன்று கேட்டார். உடனே பையனுக்கு எல்லாம் நினைவு வந்தது. வெட்கமடைந்து பாபாவிடம் தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு தான் பாபாவிடம் இருந்த இடத்திற்கு ஓடிப்போய் பேடாவைக் கொண்டுவந்து பாபாவிடம் கொடுத்தான். கையில் அதைப் பெற்றவுடனேயே, பாபா வாயிலிட்டுப் பேராவலுடன் விழுங்கிவிட்டார். இவ்வாறாகத் திருமதி தர்கட்டின் பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. "மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்" (கீதை அத். 4, ஸ்லோகம் 11) என்பது இந்நிகழ்ச்சியால் நிரூபிக்கப்பட்டது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment