அன்புடன் எப்போதும் அவரையே (சாயிபாபா) நினைவூட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் அனைவருக்கும் நன்மை செய்யும் கவனத்தால் கவரப்பட்டு, ஆத்மாவிலேயே உறைந்து நின்றார். வாழ்வு, சாவு என்னும் புதிரை விடுவிக்கும் வழி, அவரை நினைவுபடுத்திக்கொள்வது மட்டுமே. சாதனைகளிலேயே இதுதான் மிகமிக எளியதும், சிறந்ததுமான சாதனையாகும். ஏனெனில் அது எவ்விதச் செலவையும் உள்ளடக்காதது. இங்கு ஒரு சிறு முயற்சி பெரும் பரிசுகளைக் கொணர்கிறது. நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், இந்த சாதனையைப் பழகவேண்டும். மற்ற எல்லாத் தேவைகளும் வெற்றுத் தோற்றமே. குருவே ஒரே கடவுள். சத்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிஷ்டத்தை மாற்றிவிட இயலும். அவருக்கு சிறப்பாகச் சேவை செய்வோமானால், நாம் நமது சம்சாரத்தினின்று விடுபடுகிறோம். நியாயம், மீமாம்ஸம் போன்ற தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை.
அவரை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக்கொள்வோமானால், நமது அனைத்துத் துன்பங்கள், கவலைகள் என்னும் கடலை எளிதாகக் கடந்து செல்லலாம். ஆற்றையும், கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை நம்பியிருப்பதைப் போன்றே, இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில், நமது சத்குருவை நாம் நம்பவேண்டும். தமது அடியவர்களின் தீவிரமான உணர்வையும், பக்தியையும் அவர் நோக்கி ஞானத்தையும், சாஸ்வதமான கழிபேருவகையையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment