Monday, 13 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 28 - பகுதி 4

No comments

த்ருஷ்டி:-

லக்ஷ்மிசந்த் ஓர் இரவு சாவடி ஊர்வலத்தைக் கண்ணுற்றார்.  பாபா அப்போது இருமலால் மிகுந்த அல்லல் பட்டுக்கொண்டிருந்தார்.  பாபாவின் இத்தொல்லை சிலரின் த்ருஷ்டி பட்டதால் இருக்கவேண்டும் என்று நினைத்தார்.  மறுநாள் காலை அவர் மசூதிக்குச் சென்றபோது பாபா ஷாமாவிடம் "நேற்றிரவு நான் இருமலால் அவதியுற்றேன்.  அது த்ருஷடினாலோ?  சிலரின் த்ருஷடி என்மீது வேலை செய்கிறது.  எனவேதான் நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றார்.  இவ்விஷயத்தில் லக்ஷ்மிசந்தின் உள்ளத்தில் இருந்ததை பாபா பேசினார். 

பாபாவின் சர்வ வியாபித்துவத்துக்கான இந்த நிரூபணங்களையெல்லாம் கண்டுவிட்டு பாபாவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "நான் தங்கள் தரிசனத்தால் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  எப்போதும் என்பால் அன்புகொண்டு தயவுள்ளவராக இருந்து என்னைக் காத்து இரட்சியுங்கள்.  தங்கள் பாதாம்புயத்தைத் தவிர பிறிதொரு கடவுள் எனக்கில்லை.  தங்கள் பஜனையின்பாலும், பாதகமலங்களின்பாலும் என் மனம் எப்போதும் இலயித்து இருக்கட்டும்.  இவ்வுலகில் துன்பங்களிலிருந்து தங்களின் அருள் எங்களைப் பாதுகாக்கட்டும்.  நான் எப்போதும் தங்கள் நாமத்தையே உச்சரிக்க வேண்டும்.  மகிழ்வுடன் இருக்கவேண்டும்" என்று வேண்டினார்.

பாபாவின் உதியையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு மிகவும் அகமகிழ்ந்து, திருப்தியுற்று வழியெல்லாம் பாபாவின் புகழைப் பாடியவண்ணம் தன் நண்பனுடன் வீடு திரும்பினார்.  அது முதற்கொண்டு பாபாவின் தீவிர பக்தராக அவர் இருந்தார்.  ஷீர்டிக்குச் செல்லும் எந்த நண்பனிடமும் பூமாலைகள், தட்சிணை, கற்பூரம் இவைகளை அவர் கொடுத்தனுப்புவார். 
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment