நமது சாஸ்திரங்களில், வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு சாதனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
தவம் - க்ருதயுகத்துக்கும்
ஞானம் - த்ரேதாயுகத்துக்கும்
யக்ஞம் - த்வாபரயுகத்துக்கும்
தானம் - கலியுகத்துக்கும்
சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன. தானங்கள் அனைவற்றிலும் அன்னதானமே சிறந்தது. மத்தியான நேரத்தில் நமக்கு உணவு கிடைக்காதபோது நாம் மிகவும் குழப்பமடைகிறோம்.
அதைப்போன்ற சூழ்நிலைகளில் மற்ற ஜீவராசிகளும் அங்ஙனமே உணர்கின்றன. இதையறிந்து எளியவர்களுக்கும், பசியடைந்தோர்க்கும் உணவளிப்பவரே மிகச்சிறந்த கொடையாளி அல்லது தர்மவான். "உணவே பிரம்மம். உணவிலிருந்தே எல்லா உயிர்களும் பிறக்கின்றன. பிறந்த பின்னும், உணவாலேயே உயிர் வாழ்கின்றன. அழிந்த பின்னும் உணவின் உள்ளேதான் மீண்டும் உட்செல்லுகின்றன" என்கிறது தைத்திரீய உபநிஷதம்.
விருந்தாளி ஒருவர் நம் வீட்டுக்கு வர நேர்ந்தால் அவரை உணவளித்து வரவேற்பது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு கடமையாகும். செல்வம், சொத்து, உடை முதலான மற்றவித தானங்கள் செய்வதற்கு விவேகம் தேவைப்படுகிறது. ஆனால் உணவின் விஷயத்தில் அத்தகைய யோசனைகள் எதுவும் தேவையில்லை. மத்தியான நேரத்தில் யார் வேண்டுமானாலும் நம் வீட்டு வாசலிடை வரட்டும். அவருக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். அதிலும் முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்களான ஆண்டிகள் முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்படவேண்டும்.
முதலில் குறிப்பிட்டோருக்கு உணவளிப்பதால் உண்டாகும் புண்ணியம் பின்னால் குறிப்பிட்டவர்களுக்கு அளிப்பதைவிட மிகவும் அதிகமாகும். அன்னதானம் இல்லாத மற்ற தானங்களெல்லாம், நிலவற்ற நஷத்திரங்கள் போன்றும், பதக்கமற்ற அட்டிகை போன்றும், முடிமணி அற்ற கிரீடம் போன்றும், தாமரையற்ற குளத்தைப் போன்றும், பக்தியற்ற பஜனையைப் போன்றும், குங்குமமற்ற சுமங்கலியைப் போன்றும், இனிமையான சாரீரமில்லாத பாடலைப் போன்றும், உப்பற்ற தயிரைப் போன்றுமாக இருக்கிறது.
வரண் (பருப்பு சூப்) மற்றெல்லா பதார்த்தங்களையும்விடச் சிறந்திருப்பதைப் போன்று மற்றெல்லா புண்ணியங்களையும்விட அன்னதானம் சிறந்திருக்கின்றது. இப்போது பாபா எங்ஙனம் உணவு சமைத்து அதை வினியோகித்தார் என்பதைக் காண்போம்.
பாபாவுக்காக ஒரு சிறிதே உணவு தேவைப்பட்டது என்றும் அவருக்குத் தேவையானதும் சில வீடுகளில் பிச்சையெடுத்துப் பெறப்பட்டது என்பதும் முன்னமேயே எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. ஆயின் அனைவர்க்கும் உணவளிக்க வேண்டுமென்று அவர் தீர்மானித்தால் அவராகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். இந்த விஷயத்தில் அவர் எவரையும் சார்ந்திருக்கவோ, தொல்லைப்படுத்தவோ இல்லை. முதலில் கடைவீதிக்குச் சென்று சோளம், மாவு, நறுமண பலசரக்கு வகைகள் முதலிய எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்குகிறார். கோதுமை அரைத்தலையும் தாமே செய்கிறார்.
மசூதிக்கு முன்னாலுள்ள திறந்தவெளியில், ஒரு பெரிய அடுப்பை வைத்து நெருப்பை மூட்டி அதற்குமேல் ஹண்டி என்னும் ஒரு பாத்திரத்தை சரியான அளவு தண்ணீர் ஊற்றிவைக்கிறார். இரண்டு விதமான ஹண்டிகள் இருந்தன. ஒன்று சிறியது. மற்றொன்று பெரியது. முன்னது 50 பேருக்கு உணவளிக்க ஏற்றது. பின்னது 100 பேருக்கானது. சில சமயம் அவர் மிட்டா சாவல் என்னும் சர்க்கரைப் பொங்கலைச் சமைத்தார். மற்றும் சில சமயங்களில் புலவை மாமிசத்துடன் சமைத்தார். சில சமயங்களில் கொதித்துக்கொண்டிருக்கும் வரண் என்னும் சூப்பில், கோதுமை மாவை சிறு உருண்டைகளாகவோ, அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து மிதக்கவிட்டார்.
வாசனைப் பொருட்களை அம்மியில் வைத்து இடித்துத் தூளை சமையல் பாத்திரத்தில் போட்டார். உணவை மிகவும் சுவையானதாக்க அவர் எல்லாச் சிரமங்களையும் எடுத்துக்கொண்டார். ஜவ்வாரி (கேள்வரகு) மாவைத் தண்ணீருடன் கொதிக்கவிட்டு அதைத் தயிருடன் கலந்து அம்பீல் (கூழ்) தயார் செய்தார். உணவுடன் இந்த அம்பீலை ஒரே மாதிரியாக விநியோகித்தார். உணவு ஒழுங்காக வேகிறதா என்பதைப் பார்க்க பாபா தனது கஃப்னியின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக்கொண்டு தனது வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டுக் கொதிக்கும் கலவையை நன்றாக மேலும் கீழும், பக்கங்களிலும் கலக்கிவிடுகிறார்.
கை வெந்ததற்கான எந்த அடையாளத்தையோ முகத்தில் பயத்தின் எவ்விதச் சாயலையோ காணமுடிவதில்லை. சமையல் முடிந்ததும், பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டுவந்து உரியமுறையில் மௌல்வியைக்கொண்டு புனிதமாக்கினார். முதல் உணவின் ஒரு பகுதியை மஹல்ஸாபதிக்கும், தாத்யா பாடீலுக்கும் அனுப்பிவிட்டு மிச்சத்தை எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்கள் உளம்நிறையும் வண்ணம் தமது கையாலேயே பரிமாறினார். பாபா தாமே சமைத்து தாமே பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அதிர்ஷ்டசாலிகள். இத்தருணத்தில் ஒரு சிலர் சந்தேகத்தையும் கிளப்பலாம். பாபா காய்கறிகளையும், அசைவ உணவையும் பிரசாதமாக தமது அடியவர்களுக்கு ஒரே மாதிரியாகவா வழங்கினார்? விடை வெளிப்படையானதும், எளிதானதுமாகும். அசைவ உணவு பழக்கப்பட்டோருக்கு ஹண்டியிலிருந்து பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது. அதில் பழக்கமில்லாதவர்களை அதைத்தொட அனுமதிப்பதில்லை. இவ்வுணவை விசேஷமாக அனுசரிக்க அவர் அவர்களிடம் எவ்வித விருப்பத்தையோ, ஆசையையோ தூண்டிவிட்டதில்லை.
குருவே பிரசாதமாக எதையாவது அளிக்கும்போது அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா இல்லையா என்று எண்ணுபவன் நரகத்தை அடைகிறான் என்னும் ஒரு கொள்கை நன்றாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கையை எந்த ஒரு சீடனும் எவ்விதம் மனதில் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அறிய சில நேரங்களில் பாபா சோதனைகள் நடத்துவார். உதாரணமாக பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேல்கரிடம் சில ரூபாய்கள் கொடுத்து அவரையே நேராக கொரலாவுக்குச் சென்று அங்கிருந்து மாமிசம் வாங்கிவரும்படி கூறினார். இந்த தாதா கேல்கர் ஒரு வைதீக பிராமணர். எல்லா வைதீகச் சம்பிரதாயங்களையும் வாழ்க்கையில் அனுசரித்தவர். செல்வம், தானியங்கள், உடை முதலியவைகளை சத்குருவிற்குச் சமர்ப்பிப்பதெல்லாம் போதாதென்றும், முழுநிறை நம்பிக்கையுள்ள கீழ்ப்படிதலும், அவரது உத்தரவுகளை சரி நுட்பமாக நிறைவேற்றுதலுமே அவரை மிகவும் மகிழ்விக்கும் உண்மையான தஷிணையாகும் என்பதை அவர் அறிவார்.
எனவே தாதா கேல்கர் உடைகளை உடுத்திக்கொண்டு அவ்விடத்துக்குக் கிளம்பினார். பிறகு பாபா அவரைக் கூப்பிட்டு "நீயே போகாதே. யாரையாவது அனுப்பு" என்று கூறினார். இதன் பேரில் தாதா, தமது வேலையாள் பாண்டுவை இதற்காக அனுப்பினார். பாபா அவரையும் திரும்பிவரச் சொல்லி, அதையும் ரத்து செய்துவிட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தின்போது 'புலவ்' என்னும் மாமிசக்கறியில் உப்பு சரியாக இருக்கிறதா என்பதைச் சற்று சுவைத்துப் பார்க்கும்படி பாபா தாதாவைக் கேட்டார். பின்னர் சாதாரணமாகவும், முறைக்காகவும் அது சரியாக இருக்கின்றது என்று கூறினார்.
அதற்கு பாபா நீ அதைக் கண்ணால் பார்த்ததோ, நாவால் சுவைத்ததோ கிடையாது. பின்னர் அது சுவையாய் இருக்கிறது என்று எப்படி உன்னால் உரைக்கமுடியும். பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார் என்று கூறிக்கொண்டே, பாபா அவரது கையைப் பிடித்து பானைக்குள் அழுத்தி, "கையை முன்னால் நீட்டி கரண்டியை எடுத்து, வைதீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பதறாமல், கொஞ்சம் எடுத்து சாப்பாட்டில் போட்டுக்கொள்" என்றார்.
தாய்க்கு குழந்தையிடம் ஒரு உண்மையான அன்பின் அலை தோன்றும்போது, அதைக் கிள்ளிவிட்டு அழத் தொடங்கியதும் தன் மார்போடு அணைத்துக்கொள்கிறாள். அவ்வாறே பாபா உண்மையான தாய் என்றமுறையில் தாதா கேல்கரை இவ்விதமாகக் கிள்ளிவிட்டார். உண்மையில் எந்த ஞானியோ அல்லது குருவோ தடுக்கப்பட்ட உணவைத் தமது வைதீகச் சீடனை உண்ணும்படி வற்புறுத்தி அதன்மூலம் தம்மை கீழ்மைப்படுத்திக் கொள்ளமாட்டார்.
இந்த ஹண்டி விவகாரம் 1910ஆம் ஆண்டுவரை சிலகாலம் நடந்தது. பிறகு நின்றுவிட்டது. முன்னரே கூறியதைப்போன்று தாஸ்கணு, பாபாவின் புகழை பம்பாய் மாகாணமெங்கிலும் தம் கீர்த்தனைகளால் பரப்பினார். அப்பகுதியிலிருந்து ஷீர்டிக்கு மக்கள் திரளாக வந்து கூடத்தொடங்கினர். ஷீர்டி சில நாட்களுக்குள்ளாகவே ஒரு புனித ஷேத்திரம் ஆகிவிட்டது. பக்தர்கள் வெகுமதி அளிப்பதற்காக பல்வேறு பொருட்களைக் கொணர்ந்தனர். வெவ்வேறு உணவுவகைகளை நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர். அவர்கள் அவ்வாறு அளித்த உணவுப் பொருட்கள் எவ்வளவு என்றால் பக்கிரிகளும், ஆண்டிகளும் வயிறு புடைக்க உண்டுவிட்டு பின்னும் மீதி இருக்கும் அளவு இருந்தது. எங்ஙனம் நைவேத்யம் பகிர்ந்தளிக்கப்பட்டது என்று கூறும்முன்பு, உள்ளூரில் இருந்த கோவில்களின் மீதும், தெய்வங்களின் மீதும் பாபாவுக்கு எத்தகைய மரியாதையும், ஆர்வமும் இருந்தது என்பதை விளக்கும் நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையை எடுத்துக்கொள்வோம்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment