சோலாப்பூர் ஜில்லா, அக்கல்கோட்டைச் சேர்ந்த சபட்ணேகர் வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் படிக்கும் ஷேவடே அவரைச் சந்தித்தார். மற்றும் பல மாணவர்களும் ஒன்றாகக் கூடித் தாங்கள் படிக்கும் பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட வினா விடைகளிலிருந்து ஷேவடே என்பவர்தான் எல்லோரைக்காட்டிலும் பரீட்சைக்குத் தயாரற்ற நிலையிலிருந்தார் என்று தெரியவந்தது. எனவே, மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர். தாம் சரியாகப் படிக்கவில்லையாயினும் தமது சாயிபாபா இருப்பதால் தம்மை வெற்றியடையச் செய்வார் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.
சபட்ணேகர் இக்கூற்றால் ஆச்சரியமடைந்தார். அவர் ஷேவடேயைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் அவர் அவ்வளவு உயர்வுபடக் கூறும் சாயிபாபா என்பவர் யார் என்று கேட்டார். அஹமத்நகர் ஜில்லா ஷீர்டியில் உள்ள மசூதியில் பக்கிரி ஒருவர் வாழ்கிறார். அவர் மிகப்பெரும் சத்புருஷர். மற்ற ஞானிகள் இருக்கலாம், ஆனால் இவர் ஒப்பற்றவர். முன்வினையில் பல நற்கருமங்களின் பலன் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தாலன்றி ஒருவரும் அவரைப் பார்க்க முடியாது.
நான் முழுமையும் அவரை நிச்சயம் நம்புகிறேன். அவர் சொல்வது பொய்யாவதில்லை. அடுத்த ஆண்டு நான் தேறிவிடுவேன் என்று அவர் எனக்கு உறுதிகூறி இருக்கிறார். கடைசி வருடப் பரீட்சையையும் அவர்தம் கருணையால் நான் தேறிவிடுவேன் எனக்கூறினார். சபட்ணேகர் அவர் நம்பிக்கையைக் கண்டு சிரித்து அவரையும், சாயிபாபாவையும் கேலி செய்தார்.
சபட்ணேகர்:-
சபட்ணேகர் தமது பரீட்சையில் தேறி அக்கல்கோட்டில் குடியேறி அங்கு வக்கீலாகத் தொழில் நடத்தினார். இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1913ல் தொண்டையில் வந்த வியாதி காரணமாக அவரது ஒரே மகனை இழக்கநேரிட்டது. அது அவர் உள்ளத்தைப் பிளந்தது. பண்டரீபுரம், கனகாபூர் மற்றும் பல புனித க்ஷேத்திரங்களுக்கு அவர் க்ஷேத்ராடனம் செய்து அமைதியைத் தேடினார். அவருக்கு மனஅமைதி கிடைக்கவில்லை. பின்னர் வேதாந்தம் கற்கத் தொடங்கினார். அதுவும் அவருக்குப் பயனளிக்கவில்லை. இத்தருணத்தில், தமது நண்பரான ஷேவடே பாபாவைப் பற்றிக் கூறியதும் பாபாவின்மேல் அவருக்குள்ள நம்பிக்கையையும் சபட்ணேகர் நினைவு கூர்ந்தார். தாமும் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காணவேண்டுமென்று அவர் எண்ணினார். தம் தம்பி பண்டிட்ராவுடன் அவர் ஷீர்டிக்குச் சென்றார். பாபாவைத் தூரத்திலிருந்து கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அவர் அருகே சென்று வீழ்ந்துபணிந்து, பக்தியுடன் ஒரு தேங்காயை முன்னே வைத்தபோது, "போ! வெளியே" என்று பாபா கூச்சலிட்டார். சபட்ணேகர் தலைகுனிந்துகொண்டு பின்னால் நகர்ந்துபோய் வேறுபக்கம் அமர்ந்திருந்தார். மேற்கொண்டு என்னசெய்யவேண்டும் என்பதை அவர் யாரிடமாவது கலந்து ஆலோசிக்க விரும்பினார். யாரோ பாலா ஷிம்பியின் பெயரைக் குறிப்பிட்டனர். சபட்ணேகர் அவரைச் சந்தித்து அவருடைய உதவியை வேண்டினார். அவர்கள் பாபாவின் போட்டோக்களை வாங்கிக்கொண்டு அவற்றுடன் மசூதிக்குள் வந்தனர். பாலா ஷிம்பி ஒரு போட்டோவை எடுத்து பாபா கையில் கொடுத்து அது யார் போட்டோ என்று கேட்டார். பாபா சபட்ணேகரைக் காண்பித்து, இது அவரது காதலன் போட்டோ என்று கூறிவிட்டுச் சிரித்தார். எல்லோரும் சிரித்தனர். பாலா பாபாவை அச்சிரிப்பின் குறிப்பு என்ன என்று கேட்டுக்கொண்டே சபட்ணேகரை முன்னால் வந்து தரிசனம் செய்துகொள்ளும்படி சமிக்ஞை செய்தார்.
சபட்ணேகர் வீழ்ந்து கும்பிடத் தொடங்குகையில், பாபா மீண்டும் "போ! வெளியே" என்று கூச்சலிட்டார். சபட்ணேகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பின்னர், இருவரும் (பாலா, சபட்ணேகர்) கைகோர்த்து பாபாவின்முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர். பாபா முடிவாக சபட்ணேகரை உடனே வெளியே போகும்படி கட்டளையிட்டார். இருவரும் வருத்தமடைந்து, மனமுடைந்து போயினர். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டுமாதலால் மறுமுறை வரும்போது தரிசனம் தரவேண்டுமென்று, பிரார்த்தனை செய்துகொண்டு சபட்ணேகர் சோர்ந்த உள்ளத்துடன் வீடு திரும்பினார்.
திருமதி சபட்ணேகர்:-
ஓர் ஆண்டு ஓடியது. எனினும் அவர் மனம் அமைதியடையவில்லை. கனகாபூருக்குச் சென்றார். அங்கு அவர் இன்னும் அதிகமான மனக்கலக்கத்தை அடைந்தார். பின்னர் ஓய்வுக்காக மதேகாவன் சென்றார். பின்னர் முடிவாக காசிக்குச் செல்லத் தீர்மானித்தார். புறப்படுவதற்கு இரண்டு தினங்களுக்குமுன் அவரின் மனைவி ஒரு கனவு கண்டாள். அக்கனவில் தான் ஒரு மண் பானையுடன் லக்கட்ஷாவின் கிணற்றுக்குப் போய்க்கொண்டு இருப்பதாகவும், வேப்பமரத்தடியில் ஒரு துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதையும், அவர் அவளருகில் வந்து, "அன்புள்ள பெண்ணே! எதற்காக ஒன்றுமில்லாத ஆயாசம்? நான் உனது பானையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன்" என்று கூறியதாகவும் கண்டாள். அப்பக்கிரிக்குப் பயந்து காலிப் பானையுடன் விரைவாகத் திரும்பியபோது அவரால் தொடரப்பட்ட தருணத்தில் தூக்கம் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தாள்.
இக்கனவைத் தனது கணவனிடம் கூறினாள். இது ஒரு புனிதமான நேரம் என்று அவர்கள் நினைத்து ஷீர்டிக்குப் புறப்பட்டனர். அவர்கள் மசூதியை அடைந்தபோது பாபா அங்கில்லை. லெண்டித் தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அவர் திரும்பிவரும் வரையில் காத்திருந்தனர். அவர் திரும்பிவந்ததும் அவள் கனவில் கண்ட அப்பக்கிரியின் தோற்றம் பாபாவுடன் சரியாக ஒத்திருந்ததைக் கண்டு அவள் ஆச்சரியமடைந்தாள். பணிவுடன் அவள் பாபாவின்முன் வீழ்த்து வணங்கிவிட்டு அவரை நோக்கி அமர்ந்திருந்தாள்.
அவளது பணிவைக்கண்டு பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கே உரிய விசித்திரமான பாணியில் மூன்றாமவர் ஒருவரிடம் ஒரு கதை சொல்லத் தொடங்கினார். "எனது புயம், அடிவயிறு, இடுப்பு எல்லாம் நீண்ட நாட்களாக வலித்துக்கொண்டு இருந்தன. பல மருந்துகளைச் சாப்பிட்டேன். வலி குறையவில்லை. மருந்துகள் எவ்வித நிவாரணத்தையும் அளிக்கவில்லை. ஆதலால் நான் மருந்துகளின்மேல் வெறுப்படைந்தேன். ஆனால் இப்போது திடீரென்று எல்லா வலிகளும் நீங்கிவிட்டதுகண்டு ஆச்சரியம் அடைகிறேன்" என்றார். எவ்விதப் பெயரும் சொல்லப்படவில்லை. ஆயினும் உண்மையில் அது திருமதி சபட்ணேகரின் கதையே ஆகும். பாபா விவரித்தபடியாகவே அவளது வலி உடனே நீங்கிவிட்டது. அவள் மகிழ்ச்சியடைந்தாள்.
பின் சபட்ணேகர் தரிசனம் செய்துகொள்ள முன்னால் சென்றார். அவர் மீண்டும் முந்தைய "வெளியே போ!" என்ற வார்த்தைகளுடன் வரவேற்கப்பட்டார். இந்தமுறை அவர் தவறுக்கு வருந்துபவராகவும், இன்னும் விடாமுயற்சியுள்ளவராகவும் இருந்தார். தனது முந்தைய வினைகளே பாபாவின் அதிருப்திக்குக் காரணம் என்று சொல்லி அதற்கு ஈடுசெய்யத் தீர்மானித்தார். பாபாவைத் தனியாகக்கண்டு தனது முந்தைய வினைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ள முடிவுசெய்து தனது தலையை பாபாவின் பாதத்தின் மீது வைத்தார்.
பாபா தமது கையை கையை அவர் தலைமீது வைத்தார். பாபாவின் கால்களை சபட்ணேகர் கீழே அமர்ந்து வருடத் தொடங்கினார். பின் ஆடுமேய்க்கும் ஆய்மகள் ஒருத்தி பாபாவின் இடுப்பை உட்கார்ந்து பிடித்துவிடத் தொடங்கினாள். பாபா தமக்கே உரிய பாணியில் ஒரு (பனியா) வணிகனின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
அவனது வாழ்க்கை முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல்களை அவனது ஒரே மகன் இறந்தது உட்பட அனைத்தையும் எடுத்துரைத்தார். பாபா கூறிக்கொண்டிருந்த கதை முழுவதும் தன்னுடையதே என்று அறிந்து, சபட்ணேகர் ஆச்சரியமடைந்தார். பாபாவுக்கு அதன் ஒவ்வொரு விவரமும் தெரிந்தது கண்டு அதிசயமடைந்தார். அவர் நிறைபேரறிவுடையவர் என்றும், அனைவரின் இதயங்களையும் அறிந்திருப்பவர் என்றும் அறியலானார்.
இந்த எண்ணம் அவர் மனத்துக்கு வந்தபோது, பாபா ஆடுமேய்க்கும் பெண்ணை நோக்கி சபட்ணேகரைச் சுட்டிக்காண்பித்து, "இந்த ஆள் அவரது குழந்தையை நான் கொன்றுவிட்டதாக, என் மீது பழி சுமத்தித் திட்டுகிறார். நான் மக்களின் குழந்தைகளைக் கொல்கிறேனா? ஏன் இவர் மசூதிக்கு வந்து அழுகிறார்? நான் இப்போதே இதைச் செய்கிறேன். அதே குழந்தையை மீண்டும் அவரது மனைவியின் கருப்பையில் கொண்டுவைக்கிறேன்" என்று கூறினார்.
இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே தமது ஆசிநல்கும் கரத்தை, அவர் தலைமீது வைத்து, "இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என்மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்!" என்று கூறித் தேற்றினார். சபட்ணேகர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, பாபாவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தார்.
பின்னர் அவர் பூஜை, நைவேத்தியம் இவைகளைத் தயார் செய்துகொண்டு மனைவியுடன் மசூதிக்கு வந்தார். தினந்தோறும் இவைகளை பாபாவுக்குச் சமர்ப்பித்து, அவரிடமிருந்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தார். மசூதிக்குள் கூட்டமாக இருந்தது. சபட்ணேகர் அங்குசென்று மீண்டும் மீண்டும் வணங்கிக்கொண்டிருந்தார். தலையோடு தலைகள் மோதிக்கொள்வதைக் கண்ட பாபா சபட்ணேகரை நோக்கி, "ஓ! நீ ஏன் அடிக்கடி வணங்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். "பணிவுடனும், அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்" என்றார். அன்றிரவு முன்னரே விவரிக்கப்பட்ட சாவடி ஊர்வலத்தை சபட்ணேகர் கண்டுகளித்தார். ஊர்வலத்தின்போது பாபா, பாண்டுரங்கன் மாதிரியே காட்சியளித்தார்.
மறுநாள் விடைபெறும்போது தக்ஷிணையாக ஒரு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும், பாபா மீண்டும் கேட்டால் இல்லையென்று சொல்லாமல் பிரயாணம் செய்வதற்குப் போதுமான பணத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு மேலும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும் நினைத்தார். மசூதிக்கு அவர் சென்று ஒரு ரூபாய் அளித்தபோது, அவருடைய எண்ணப்படியே பாபா மேலும் ஒரு ரூபாய் கேட்டார். அது கொடுக்கப்பட்டபோது, பாபா இதைக்கூறி ஆசீர்வதித்தார்.
"இத்தேங்காயை எடுத்து உனது மனைவியின் சேலை முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும்படாமல் சௌகரியமாகப் போய் வா" என்றார். அவரும் அங்ஙனமே செய்தார். ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். எட்டு மாதக் குழந்தையுடன் அவ்விருவரும் ஷீர்டிக்கு வந்தனர். அதை பாபாவின் காலடிகளில் வைத்து, "ஓ! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கிறோம். எனவே தங்கள்முன் வீழ்ந்து பணிகின்றோம். எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும். பற்பல எண்ணங்கள் கனவிலும், நனவிலும் எங்களை தொல்லைப்படுத்துகின்றன. எங்கள் மனதை அவைகளிலிருந்து எல்லாம் தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்" எனப் பிரார்த்தித்தனர். புத்திரனுக்கு 'முரளீதர்' என்று பெயரிடப்பட்டது. பின்னர் பாஸ்கர், தினகர் என்ற இருவரும் பிறந்தனர். இங்ஙனமாக சபட்ணேகர் தம்பதிகள் பாபாவின் மொழிகள் பொய்ப்பதில்லை என்றும், நிறைவேறாமல் போவதில்லை என்றும், முற்றிலும் உண்மையாகவே நிகழ்கின்றன என்றும் உணர்ந்தனர்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment