Thursday, 16 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 31 - பகுதி 6

No comments

புலி:- பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்குமுன் ஷீர்டியில் ஓர் வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது.  ஒரு கிராமப்புற வண்டி வந்து மசூதிக்கு முன்னால் நின்றது.  தனது பயங்கர முகம் வண்டியின் பின்புறம் நோக்கித் திரும்பியிருக்க இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு புலி வண்டியில் இருந்தது.  அது ஏதோவொரு நோயால் அல்லது பயங்கர துன்பத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தது.  அதனுடைய காவலாளர்களான மூன்று தெர்வஷிகள் அதை ஊரூராக எடுத்துச் சென்று காண்பிப்பதன் மூலம் பொருளீட்டி வந்தனர்.  அதுவே அவர்களின் ஜீவனோபாயமாகும்.  

அந்தப் புலி அனுபவித்துக்கொண்டிருக்கும் வேதனைகளினின்று அதை விடுவிக்க, குணமளிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட பலவித சிகிச்சைமுறைகளும் பலனற்றதாய்விட்டன.

அப்போது அவர்கள் பாபாவின் புகழைக் கேள்வியுற்று மிருகத்துடன் அவரைப் பார்க்க வந்தனர்.  தங்கள் கைகளில் சங்கிலியுடன் அதை அவர்கள் கீழிறக்கி, கதவருகில் அதை நிற்கும்படி செய்தனர்.  அது இயற்கையிலேயே குரூரமானது.  அத்துடன் நோய்வாய்ப்பட்டது.  எனவே அது இருப்புக்கொள்ளாமல் இருந்தது.  மக்கள் அதை பயத்துடனும், வியப்புடனும் பார்க்கத் துவங்கினர்.  தெர்வஷிகள் உள்ளேசென்று புலியைப் பற்றிய அனைத்தையும் பாபாவுக்குக் கூறி, அவருடைய அனுமதியுடன் அதை அவர் முன்னர் கொணர்ந்தனர்.  புலி படிகளை நெருங்கியதும் பாபாவின் ஒளியினால் அதிர்சியுற்றுத் தனது தலையைத் தாழ்த்தியது.  பாபாவும், புலியும் சந்தித்துக்கொண்டபோது அது படியேறி பாபாவைப் பாசத்துடன் நோக்கியது.  தனது வாலில் உள்ள மயிர்க்கொத்தை ஆட்டி, அதை மூன்றுமுறை தரையில் அடித்து உணர்ச்சியற்று சாய்ந்தது.

அது இறந்தது கண்டு தெர்வஷிகள் முதலில் பெருந்துன்பமுற்று சோகம் நிரம்பியவர்களாய் இருந்தனர்.  ஆனால் பக்குவமடைந்த எண்ணத்திற்குப்பின் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பினர்.  புலி வியாதியால் பீடிக்கப்பட்டிருந்ததால் அது தனது முடிவை நெருங்கிகொண்டிருந்தது என்றும், அது மிகுந்த தகைமை உடையதாய் இருந்ததால் பாபாவின் பாதாரவிந்தகளில் அவர்தம் முன்னிலையில் மரணத்தைச் சந்திக்கும் நிலை அடைந்ததென்றும் கருதினார்கள்.  அது அவர்களின் கடனாளி, கடன் தீர்ந்ததும் விடுதலையடைந்து தன் முடிவை சாயியின் சரண கமலங்களில் சமர்ப்பித்தது. (ஷீர்டியில் மஹாதேவ் மந்திரின் எதிரில் இந்தப் புலியின் சமாதி உள்ளது)  ஏதேனும் ஒரு ஜந்து ஞானிகளின் பாதங்களில் தலை தாழ்த்தித் தன் முடிவைச் சந்தித்தால் அது நற்கதியடைந்ததாகிவிடுகிறது.  அத்தகைய ஜந்துக்களைப் பொறுத்தவரை அவைகள் புண்ணியசாலிகளாக இருந்தாலன்றி எங்ஙனம் அத்தகைய மகிழ்சிகரமான முடிவை எய்தவியலும்?!

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment