இந்த அத்தியாயம் சாயிபாபாவைப் பற்றிய மற்ற பல அற்புதமான, சுவையான கதைகளை விவரிக்கிறது.
சென்னை பஜனை சங்கம்:-
1916ஆம் ஆண்டில் இந்தக் குழு காசிக்குத் தீர்த்தயாத்திரையாக புறப்பட்டது. ஒரு மனிதர், அவர் மனைவி, மகள், மைத்துனி ஆகியோரையே அக்குழு கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை. போகும் வழியில் அகமத்நகர் ஜில்லா கோபர்காவன் தாலுக்காவிலுள்ள ஷீர்டியில், தமது பக்தர்களுக்கும், அங்கு சென்று தங்களது திறமைகளைக் காட்டிய திறமைசாலிகளுக்கும் தினந்தோறும் பணத்தை விநியோகித்துவரும் தாராளமும், அமைதியும், சாந்தியும் உடைய பெரும்ஞானி ஒருவர் இருக்கிறார் என்று அவர்கள் கேள்விப்பட்டனர்.
சாயிபாபாவால் தஷிணையாக ஏராளமான பணம் தினந்தோறும் சேகரிக்கப்பட்டது. இத்தொகையிலிருந்து பக்த கொண்டாஜியின் மகளான அமனி என்ற 3 வயது குழந்தைக்குத் தினந்தோறும் ரூ.1ம், வேறு சிலருக்குத் தினந்தோறும் ரூ.2 முதல் ரூ.5 வரையும், அமனியின் தாயாருக்குத் தினந்தோறும் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், சமயத்தில் ரூ.50 கூட அவர் வினியோகித்தார்.
இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அந்தக் கோஷ்டி ஷீர்டிக்கு வந்து தங்கியது. அக்குழு மிக நன்றாக பஜனை செய்து மிகச்சிறந்த பாடல்களையெல்லாம் பாடியது. ஆனால் அந்தரங்கமாக அவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டனர். அக்கோஷ்டியில் மூவர் பேராசை பிடித்தவர்களாய் இருந்தனர். ஆனால் அவ்வீட்டுத் தலைவியின் குணம் வேறுபட்டதாய் இருந்தது. அவளுக்கு பாபாவின் மேல் அன்பும், பிரியமும் இருந்தது. ஒருநாள் மத்தியான ஆரத்தியின்போது அவளது பக்தி, நம்பிக்கை இவற்றில் பெருமகிழ்வடைந்த பாபா அவளுக்கு அவளது இஷ்ட தெய்வக் காட்சியை அளித்தார். வழக்கப்படி சாயிநாதனுக்குப் பதில் சீதாநாதனாக (ராமனாக) காட்சியளித்தார். அவளது இஷ்ட தெய்வத்தைக் கண்டு மிகமிக உருகிப்போய்விட்டாள். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள். மக்கள் அவளது ஆனந்த நிலையைக் கண்டு அதிசயமுற்றனர். ஆனால் அதன் காரணத்தை அவர்கள் அறிய இயலவில்லை.
பின்னர் மாலைப் பொழுதில் எல்லாவற்றையும் அவள் தன் கணவனுக்கு விளக்கினாள். சாயிபாபாவுக்குப் பதிலாக அவள் எங்ஙனம் ராமரைக் கண்டாள் என அவள் கூறினாள். மிகுந்த எளிமையும், பக்தியும் உடையவளாதலால் அது அவளது 'மனப் பிராந்தியே' என அவர் நினைத்தார். "மற்றவர்கள் எல்லாம் சாயிபாபாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நீ மட்டும் ராமனைக் காண்பதாவது" என்று அவர் அவளைக் கேலி செய்தார். அவளது மனம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்தபோதெல்லாம் அடிக்கடி ஸ்ரீராம தரிசனத்தைக் கண்டாள். ஆதலால் அவள் இக்கூற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment