முந்தைய அத்தியாயத்தில் குறிக்கப்பட்டுள்ளது போல் அந்தச் சித்திரத்தின் கதையை இங்கே தொடர்கிறோம்.
சித்திரத்தின் கதை:-
இந்து நிகழ்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் அலி முஹமது, ஹேமத்பந்த்தைப் பார்த்துக் கீழ்வரும் கதையைக் கூறினார்.
பம்பாய் வீதிகளில் ஒருமுறை அவர் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது இந்தப் படத்தை ஒரு தெரு வியாபாரியிடமிருந்து வாங்கினார். பின்னர் அதை கண்ணாடி, சட்டம் போட்டு பாந்த்ராவில் உள்ள தம் வீட்டில் தொங்க விட்டார். அவர் பாபாவை விரும்பினாராகையால் அப்படத்தைத் தினந்தோறும் தரிசித்து வந்தார். ஹேமத்பந்த்துக்கு அதைக் கொடுப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, காலிலுள்ள கட்டிக்காக (வீக்கத்திற்காக) அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் அவரது மைத்துனரான நூர் முஹமது பீர்பாயின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். பாந்த்ராவில் உள்ள அவரது வீடு மூன்றுமாத காலமாக சாத்தப்பட்டிருந்தது. ஒருவரும் அங்கு வசிக்கவில்லை. புகழ்பெற்ற பாபா அப்துல் ரஹ்மான், மௌலானா சாஹேப், முஹமது ஹுஸேன், பாபா சாயி, பாபா தாஜூதின் மற்றும் பல உயிருடன் இருந்த ஞானிகள் படங்களும் அங்கு இருந்தன. காலச்சக்கரம் இவைகளையும் விட்டு வைக்கவில்லை. பம்பாயில் அலி சுகவீனமுற்று கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். படங்கள் எல்லாம் ஏன் அங்கு (பாந்த்ராவில்) கஷ்டப்படவேண்டும்? அவைகளுக்கும் உள்ளே வருதலும் வெளியே போதலும் (பிறப்பும், இறப்பும்) உண்டு எனத் தெரிகிறது. எல்லாப் படங்களும் தங்கள் விதியைச் சந்தித்தன. ஆனால் சாயிபாபாவின் படம் எங்ஙனம் அதற்குத் தப்பியது என்பதை ஒருவரும் எனக்கு இதுவரை விளக்கியதே இல்லை. சாயியின் எங்கும்நிறை தன்மையையும், சர்வவியாபித்துவத்தையும் அறிவுக்கெட்டாத அவரின் சக்தியையும் அது காண்பிக்கிறது.
அலிமுஹமது பல வருடங்களுக்கு முன் முஹமது ஹுஸேன் தாரியா டோபணிடமிருந்து ஞானி பாபா அப்துல் ரஹ்மானின் சிறிய படம் ஒன்றைப் பெற்றார். அதை அவர் தன் மைத்துனரான நூர் முஹமது பீர்பாயிடம் கொடுத்தார். அப்படம் அவரது மேசையில் எட்டு வருடங்கள் இருந்தது. ஒருமுறை நூர் முஹமது பீர்பாய் அதை ஒரு புகைப்படக்கலை நிபுணரிடம் எடுத்துச்சென்று உயிர் அளவுப்படமாகப் பெரியதாக்கி, அதன் பிரதிகளை அலிமுஹமது உட்பட தமது உறவினர்களிடையேயும், நண்பர்களிடத்தும் விநியோகித்தார்.
அலிமுஹமது அதை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மாட்டினார். நூர் முஹமது, ஞானி அப்துல் ரஹ்மானின் சீடர். தமது குருவிடம் அவரால் நடத்தப்பட்ட ஒரு திறந்த தர்பாரில் அப்படத்தை அளிக்கச் சென்றபோது குரு கோபமடைந்து அவரை உதைப்பதற்காக ஓடினார். அவரை வெளியில் தள்ளினார். அவர் மிகவும் வருத்தமுற்று மனம் உடைந்தார். நூர் தனது பெரும் பணத்தையும் இழந்து, குருவின் கோபத்தையும், துன்பத்தையும் பெற்றதற்காக வருந்தினார். அவருடைய குருவுக்கு உருவ ஆராதனை பிடிக்காதாகையால், பெரிதாக்கபட்ட அப்படத்தை அப்போலோபந்தருக்கு எடுத்துச்சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி நீரில் சென்று மூழ்கடித்தார். நண்பர்களையும், உறவினர்களையும் தங்கள் பிரதிகளைத் திருப்பிக்கொடுக்கும்படி வேண்டி, அவைகளைத் திரும்பப் பெற்றபின் (மொத்தத்தில் ஆறு பிரதிகள்) அனைத்தையும் பாந்த்ரா கடலில் மீனவனைக்கொண்டு எறியச் செய்தார். இச்சமயத்தில் அலிமுஹமது அவரின் மைத்துனரது வீட்டில் இருந்தார்.
ஞானிகளின் படங்களையெல்லாம் உடனே தண்ணீரில் மூழ்கடித்துவிட்டால் அவரது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று நூர் முஹமது கூறினார். இதைக்கேட்ட அலிமுஹமது தனது மேதாவை (மேனேஜரை) பாந்த்ரா வீட்டிற்கு அனுப்பி அங்கிருந்த ஞானிகள் அனைவரது படங்களையும் கடலில் எறியச்செய்தார்.
இரண்டு மாதத்திற்குப்பின் அலிமுஹமது தன் வீட்டிற்குத் திரும்பியதும் சுவரில் பாபாவின் படம் முன்போலவே மாட்டியிருந்ததைக்கண்டு வியந்தார். அவரது மேதா இதைத் தவிர்த்து பிற படங்களை எங்ஙனம் எடுத்துவந்தார் என்பது அவருக்குப் புரியவில்லை. அவரது மைத்துனர் அதைக் கண்டால், அதையும் வழக்கப்படி செய்துவிடுவார் என்று பயந்து உடனே அப்படத்தை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டார். யார் அப்படத்தை நன்றாக வைத்துக் காப்பாற்றுவார்கள்? அதை என்ன செய்யவேண்டும் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கையில் மௌலானா இஸ்மு முஜாவர் என்பவரைச் சென்றுபார்த்து அவர் கூற்றுப்படி செய்யவேண்டும் என்று சாயிபாபாவே தெரிவித்ததுபோல் இருந்தது.
தீவிர ஆலோசனைக்குப்பின் இருவரும் அப்படம் அண்ணா சாஹேபுக்கு (ஹேமத்பந்க்கு) அன்பளிப்புச் செய்யப்பட்டால் அவர் அதை நன்கு பாதுகாப்பார் என்று தீர்மானித்தார். பின்னர் இருவரும் ஹேமத்பந்த்தின் இல்லத்திற்குச் சென்று தக்க சமயத்தில் அதனை வெகுமதியாக அளித்தனர்.

No comments :
Post a Comment