Sunday, 19 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 35 - பகுதி 3

No comments

காகா மஹாஜனியின் எஜமானர்:-

டக்கர் தரம்ஸி ஜேடாபாஜி என்ற பம்பாய் வக்கீலின் கம்பெனியில் காகா மேலாளராகப் பணியாற்றி வந்தார்.  முதலாளியும், மேலாளரும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தனர்.  காகா அடிக்கடி ஷீர்டி போய்க்கொண்டிருப்பதும் அங்கு சில நாட்கள் தங்குவதும் பாபா அனுமதியளித்ததும், திரும்புவதும் டக்கருக்குத் தெரியும்.  வேடிக்கையாகவும் பாபாவைச் சோதிப்பதற்காகவுமே, டக்கர் காகாவுடன் ஷிம்கா விடுமுறையின்போது ஷீர்டி போக முடிவுசெய்தார்.  காகா உடனே திரும்புவது நிச்சயமில்லையாதலால் அவர் தன்னுடன் துணையாக வேறொருவரையும் அழைத்துக்கொண்டார்.  மூவரும் புறப்பட்டனர்.  காகா இரண்டு சேர் காய்ந்த திராட்சையை பாபாவுக்கு அன்பளிப்பாக வாங்கினார்.

அவர்கள் உரிய தருணத்தில் ஷீர்டிக்குப் போய் மசூதிக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகச் சென்றனர்.  பாபா சாஹேப் தர்கட் அங்கு இருந்தார்.  டக்கர் அவரை ஏன் அவ்விடம் வந்தாரென்று விசாரித்தார்.

தர்கட்:  தரிசனத்துக்கு

டக்கர்:  ஏதாவது அற்புதங்கள் இங்கு நிகழ்கின்றனவா?

தர்கட்:  எனது நோக்கம் அதுவல்ல (அற்புதத்தைப் பார்த்தல்).  ஆனால் பக்தர்களின் ஆர்வமிக்க பிரார்த்தனைகள் இவ்விடத்தில் திருப்திப்படுத்தப்படுகின்றன.

பின்னர்   காகா பாபாவின்முன் விழுந்து நமஸ்கரித்து திராட்சையைச் சமர்ப்பித்தார்.  பாபா அவைகளை வினியோகிக்கக் கட்டளையிட்டார்.  டக்கருக்கும் சில கிடைத்தது.  அவருக்குத் திராட்சை பிடிக்கவில்லை.  மேலும் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தாமல் அவைகளைச் சாப்பிடவேண்டாம் என்று டாக்டர்கள் அவருக்குக் கூறியிருந்தனர்.  எனவே அவர் திகைத்தார்.  அதை அவர் விரும்பவில்லை.  ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை.  சம்பிரதாயத்துக்காக அவைகளை வாயிலிட்டுக்கொண்டார்.  ஆனால் விதைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை.  மசூதித் தரையில் அவைகளைத் துப்ப அவரால் இயலவில்லை.  எனவே அவரது விருப்பத்துக்கு மாறாக அவைகளைத் தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார். 

பாபா ஒரு ஞானியாயிருந்தால் திராட்சையின் மீது தமக்குள்ள வெறுப்பை அவர் எங்ஙனம் அறியாமலிருந்து அதை உண்ணச்சொல்லி அவரை வற்புறுத்த முடியும் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.  இவ்வெண்ணம் அவர் மனதில் எழும்பியதும், பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சைகளைக் கொடுத்தார்.  அதை அவரால் உண்ண இயலாமல் கைகளில் வைத்துக்கொண்டிருந்தார்.  அப்போது பாபா அதை உண்ணும்படி அவரைக் கேட்டார்.  அவரும் கீழ்ப்படிந்தார்.  அவரது ஆச்சரியத்திற்கேற்ப அவைகளெல்லாம் விதையற்ற திரட்சைகளாயிருந்தன.  அற்புதங்களை அவர் காண விரும்பினார்.  இதோ ஒன்று!  பாபா, தனது எண்ணத்தை அறிந்து அவரது விருப்பத்திற்கேற்ப விதையுள்ள திராட்சைகளை விதையற்றவைகளாக மாற்றிவிட்டார் என்பதை அவர் அறிவார்.

எத்தகைய வியத்தகு சக்தி!  மேலும் சோதிக்க விரும்பி பக்கத்திலிருந்து தர்கட்டை அவர் எவ்வகைத் திராட்சை வைத்திருக்கிறார் எனக் கேட்டார்.  அவர் "விதையுள்ள திராட்சை" என்றார்.  டக்கருக்கு இதைக்கேட்க இன்னும் அதிக வியப்பாயிற்று.  தமது வளர்ந்துவரும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பாபா ஒரு உண்மையான ஞானியானால் திராட்சை காகாவுக்கு முதலில் கொடுக்கப்பட வேண்டுமென நினைத்தார்.  இவ்வெண்ணத்தையும் படித்தறிந்த பாபா, காகாவிலிருந்து தொடங்கி வினியோகம் செய்யப்படவேண்டுமென ஆணையிட்டார்.  இந்த நிரூபணங்களெல்லாம் தக்கருக்குப் போதுமானவைகளாய் இருந்தன. 

பின்னர் ஷாமா, டக்கரை பாபாவிடம் காகாவின் எஜமானர் என்று அறிமுகப்படுத்தினார்.

பாபா:  அவரது எஜமானராக இவர் எங்ஙனம் இருக்க முடியும்?  அவருக்கு முழுமையும் வேறொரு எஜமானர் இருக்கிறார். 

காகா இப்பதிலைப் பாராட்டினார்.  தனது தீர்மானத்தை மறந்துவிட்டு டக்கர் பாபாவை வணங்கிய பின்னர் வாதாவுக்குத் திரும்பினார்.

மத்தியான ஆரத்தி முடிந்ததும் அவர்களெல்லாம் புறப்படுவதற்கு பாபாவின் அனுமதி பெறுவதற்காக மசூதிக்குச் சென்றனர்.  ஷாமா அவர்களுக்காகப் பேசினார்.  பின்னர் பாபா இவ்விதமாக உரைத்தார். 

"நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான்".  அவன் செல்வம், ஆரோக்கியம் முதலியை வாய்க்கப் பெற்றிருந்தான்.  மனோ வேதனைகளிலிருந்து விடுபட்டவனாக இருந்தான்.  எனினும் தேவையற்ற கவலைகளையும், பாரங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு, மன அமைதியை இழந்து இங்குமங்கும் சுற்றித் திரிந்தான்.  சில சமயம் பாரத்தையெல்லாம் இறக்கிவிட்டும், சில சமயம் அவற்றை மீண்டும் சுமந்தவனாயும் இருந்தான்.  அவனது மனம் ஒரு உறுதிப்பாட்டையே அறிந்ததில்லை.  அவனது நிலைகண்டு நான் இரக்கம் கொண்டேன்.  அவனிடம் "இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் (குறிக்கோள்) மீது உனது நம்பிக்கையைத் தயவுசெய்து வைப்பாயாக, ஏன் இவ்வாறு சுற்ற வேண்டும்?  அமைதியாக ஏதாவதொரு இடத்தைப் பற்றிக்கொள்" என்று கூறினேன்.

உடனே டக்கர் அப்பொருத்தமான வர்ணனை தமக்குரியதே என அறிந்தார்.  காக்காவும் தம்முடன் திரும்பவேண்டுமென அவர் நினைத்தார்.  காகா அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்கப்படுவார் என்று ஒருவரும் எண்ணவில்லை.  பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்தறிந்து காகாவை அவருடைய எஜமானருடனேயே திரும்ப அனுமதியளித்தார்.  மற்றொருவரின் மனதில் இருக்கும் எண்ணத்தையறியும் பாபாவின் திறமைக்கு மேலுமொரு நிரூபணம் அவருக்குக் கிடைத்தது.

பின்னர் பாபா, காகாவிடமிருந்து ரூ.15 தஷிணையாகக் கேட்டுப்பெற்றார்.  அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார்.  "எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தஷிணையாகப் பெற்றுக்கொண்டேன் என்றால் அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது.  நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது.  சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தஷிணை பெறுவதில்லை.

யாரை பக்கிரி (என் குரு) சுட்டிக் காண்பிக்கிறாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன்.  யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.  எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள்.  தர்மத்தைச் செயல்படுத்துவதில் செல்வம் ஒருவழியாக இருக்கவேண்டும்.  இது சுய இன்பத்துக்காகப் பயன்படுத்தப்பட்டால் அது வீணாக்கப்படுகிறது.

நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது.  எனவே பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலேயாம்.  தஷிணை கொடுத்தல் வைராக்கியத்தை (பற்றின்மை) வளர்க்கிறது.  அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது.  ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்".

இம்மொழிகளைக் கேட்டுத் தமது தீர்மானத்தை மறந்தவராய் டக்கர் தாமாகவே ரூ.15ஐ பாபாவின் கைகளில் கொடுத்தார்.  அவரது எல்லா ஐயங்களும் தீர்க்கப்பட்டு பலவற்றைக் கற்றுக்கொண்டார்.  ஆதலால் ஷீர்டிக்குத் தாம் வந்தது நன்மையானது என்று அவர் எண்ணினார்.

இத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் பாபாவின் திறமை தனித்தன்மை வாய்ந்தது.  இவைகள் யாவற்றையும் அவர் செய்தபோதும் மொத்தத்தில் இவைகளின் மேல் சாராதவராகவே இருந்தார்.  யாராவது அவரை வணங்குவதோ,அல்லது வணங்காமலிருப்பதோ, அவருக்குத் தஷிணை கொடுப்பதோ, கொடுக்காமல் இருப்பதோ, இவைகள் எல்லாம் அவருக்கு ஒன்றே.  அவர் ஒருவரையும் அவமதிக்கவில்லை.  தாம் வணங்கப்படுவதால் அவர் மகிழ்ச்சியடைந்ததில்லை.  அன்றி தாம் மதிக்கப்படாததால் அவர் துன்புற்றதுமில்லை.  மாறுபட்ட இருமைகளை (சுகம், துக்கம் போன்றவற்றை) அவர் கடந்து நின்றார்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)


No comments :

Post a Comment