Monday, 20 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 39 - பகுதி 3

No comments

சமாதி மந்திர் கட்டுதல்:-

தாம் நிறைவேற்றி முடித்தற்பொருட்டாக ஆர்வம்கொண்ட விஷயங்கள் குறித்து பாபா பேசியதோ எவ்விதமான வெற்று ஆர்ப்பரிப்பு செய்ததோ கிடையாது. 

ஆனால் நிதானமாக, நிச்சயமாக பலன்கள் கிட்டுமாறு சூழ்நிலைகளையும், சுற்றுப்புறங்களையும் அவர் அவ்வளவு திறமையாக அமைத்தது குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டனர்.  இக்கருத்துக்கேற்ற நிகழ்ச்சி சமாதிமந்திரின் கட்டிடவேலையாகும்.

நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கோடீஸ்வரரான ஸ்ரீமான் பாபு சாஹேப் பூட்டி தனது குடும்பத்துடன் ஷீர்டியில் வசித்து வந்தார்.  அங்கு தனக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று வேண்டும் என்று அவர் மனதில் எண்ணம் ஒன்று எழுந்தது.  இதற்கு சில நாட்களுக்குப் பிறகு தீஷித் வாதாவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் ஒரு காட்சி கண்டார்.

பாபா அவர் கனவில்தோன்றி அவருக்குச் சொந்தமான வாதா ஒன்றை கோவிலுடன் கட்டும்படி பணித்தார்.  அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஷாமாவுக்கும் அதே மாதிரி காட்சி தோன்றியது.  பாபு சாஹேப் கண்விழித்தபோது, ஷாமா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார்.  ஏன் என்று அவரைக் கேட்டார்.  அவர் பாபா தம் கனவில், தமதருகில் நெருங்கிவந்து "வாதாவைக் கோவிலுடன் கட்டுக, நான் உங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்வேன்!" எனத் தெளிவாக ஆணையிட்டார்.  பாபாவின் இனிமையும், அன்பும் பொருந்திய மொழிகளைக் கேட்டு நான் உணர்ச்சிவசப்பட்டேன்.  என் தொண்டை அடைத்தது.  எனது கண்களில் நீர் பொங்கி வழிந்தது.  நான் அழத் தொடங்கிவிட்டேன் என்றார்.    

பாபு சாஹேப் இருவரது கனவும் ஒத்திருந்ததைக் கண்டு ஆச்சயரியப்பட்டார்.  பணமும், வசதியும் பொருந்திய அவர் அங்கு ஒரு வாதா கட்டத் தீர்மானித்தார்.  மாதவ்ராவுடன் கூடி ஒரு திட்டம் தீட்டினார்.  காகா சாஹேப் தீஷித்தும், அதை ஆமோதித்தார்.  பாபாவின் முன்னர் அது சமர்ப்பிக்கப்பட்டபோது அவரும் அதை உடனே அங்கீகரித்தார்.  பின்னர் கட்டிடவேலை முறைப்படி ஆரம்பமானது.  ஷாமாவின் மேற்பார்வையில் கீழ்த்தளம், உக்கிரான அறை, கிணறு முதலியன பூர்த்தியாயின.  லெண்டிக்குப் போகும்போதும் வரும்போதும், பாபாவும் சில முன்னேற்றங்களுக்கு யோசனை தெரிவித்தார்.  தொடர்ந்து மேற்படி வேலைகள் பாபு சாஹேப் ஜோகிடம் ஒப்படைக்கப்பட்டது.  அது நிறைவேறிக் கொண்டிருக்கும்போது திறந்த முற்றம் அல்லது மேடை இருக்கவேண்டும் என்றும், நடுவில் ஸ்ரீ முரளீதரின் உருவம் (கண்ணன் குழலுடன்) ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்றும் பாபு சாஹேப் பூட்டிக்கு எண்ணம் உதித்தது.  இவ்விஷயத்தை பாபாவிடம் சொல்லி பாபாவுடைய சம்மதத்தைப் பெறுவதற்கு அவர் ஷாமாவைக் கேட்டுக்கொண்டார்.  பாபா வாதாவைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஷாமா இதைப்பற்றி அவரிடம் கேட்டார்.  ஷாமா கூறியதைக் கேட்டு பாபா சம்மதித்து "கோவிலின் வேலை முடிந்ததும் நான் அங்கு தங்குவேன்" என்றார்.

பின்னர் வாதாவை உற்றுப்பார்த்து மேலும் தொடர்ந்தார்.  "வாதா பூர்த்தியானதும் நாமே அதை உபயோகித்துக்கொள்ளலாம்.  நாம் அங்கு வாழ்வோம், நடப்போம், விளையாடுவோம், ஒருவரையொருவர் கட்டியணைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்".  பின்னர் ஷாமா பாபாவிடம் வாதாவின் மத்திய மணடபத்துக்கு அஸ்திவாரம் போட இது மங்கள வேளையா  என்று கேட்டபோது பாபா சரியெனக் கூறினார்.  ஷாமா ஒரு தேங்காயை உடைத்து வேலையை ஆரம்பித்தார்.  உரிய சமயத்தில் வேலை முடிவடைந்து முரளீதரின் சிலை ஒன்றுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டது.  ஆனால் அது தயாராகும் முன்னரே ஒரு புதிய நிகழ்ச்சி நேரலாயிற்று. 

பாபா மிகவும் கடுமையாக நோயுற்று இயற்கை எய்தும் தருணத்தில் இருந்தார்.  பாபா இயற்கை எய்தினால் தமது வாதா பாபாவின் திருவடிகளால் புனிதப்படுத்தப்பட இயலாது போகும் என்றும், அவரது பணம் முழுவதும் (சுமார் ஒரு இலட்சம் ருபாய்) வீணாக்கப்பட்டுவிட்டது என்றும் பூட்டி நினைத்து மிகவும் வருத்தமும், மனச்சோர்வும் அடைந்தார்.  இயற்கை எய்துவதற்குச் சிறிது தருணத்துக்கு முன், "என்னை வாதாவில் வையுங்கள்" என்ற பாபாவின் மொழிகள் பாபு சாஹேபை மட்டுமல்ல, மற்ற எல்லோரையுமே தேற்றின.  உரிய தருணத்தில் பாபாவின் புனிதமேனி, முரளீதரருக்காகத் திட்டமிடப்பட்ட கோவிலின் மேடையில் சமாதியாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.  பாபா தாமே முரளீதரரானார்.  வாதாவும் சாயிபாபாவின் சமாதிமந்திர் (கோவில்) ஆனது.  அவரின் அற்புதமான வாழ்வு ஆழங்காண இயலாதது.

பாபு சாஹேப் பூட்டி ஆசீர்வதிக்கப்பட்டவர்.  அதிர்ஷ்டம் உள்ளவர்.  அவருடைய வாதாவில் பாபாவின் புனிதமான தூய உடம்பு இருக்கிறது.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)


No comments :

Post a Comment