Wednesday, 29 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 49 - பகுதி 4

No comments

நானா சாஹேப் சாந்தோர்கர்:-

நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.  ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மஹல்ஸாபதி மற்றுமுள்ளோருடன் அமர்ந்திருக்கையில், பீஜப்பூரிலிருந்து ஒரு முஹமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார்.  கோஷா(பர்தா) அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பால் போய்விட விரும்பினார்.  ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார்.  பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர்.  பாபாவின் பாதங்களை வணங்குமுகமாக அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார்.  அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பாபா அவரை நோக்கி,

"நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய்.  புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும்.  நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம்.  கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார்.  அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்.  மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும்.  முன்கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும்.  உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை.  நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்?  கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?" என்றார்.

ஷாமா அவ்விடத்தில் இருந்தார்.  பாபா கூறியதன் பொருளை அவரால் உணர இயலவில்லை.  எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார்.  நானா, அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கமடைந்ததையும், பாபா அதை எங்ஙனம் அறிந்து அதைப்பற்றி அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார்.  பாபாவின் பொருளை நானா இவ்வாறாக விளக்கினார்.  "அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது.  அதைத் தான்தோன்றித்தனமாகப் போக அனுமதிக்கக் கூடாது.  உணர்வுகள் குழப்பமுறலாம்.  ஆயினும் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும்.  பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது.

விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன.  ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது.  மெதுவான படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிகாண இயலும்.  உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது.  ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது.  தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.  அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே.  பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும்.  வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை.  கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது.  பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும்.  இவ்வாறாக உணர்வுகள் எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டுவிடும்.  பொருட்களை அனுபவிப்பதில்கூட நீங்கள் இறைவனைப்பற்றி ஞாபகப்படுத்தப்டுவீர்கள்.

வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித்தொடர அனுமதிக்கப்பட்டு அவைகள்பால் பற்றுக்கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது.  புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது.  விவேகம் என்னும் சாரதியைக்கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத் தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம்.  அத்தகையதொரு சாரதியுடன் நம் முடிவான இருப்பிடமும், நமது உண்மையான வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்தத் திருமாலின் திருவடிகளை எய்துவோம்" என்றார்.  

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment