இப்போது நாம் சாயிபாபாவின் முன்னே முழுவதுமாக வீழ்ந்து அவர் பாதகமலங்களைப் பற்றிக்கொண்டு கீழ்கண்டவாறு எல்லோரும் எல்லாவற்றிற்குமாகப் பிரார்த்திப்போம்.
"எங்களது மனம் கண்டவாறு அலையாமல் தங்களைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்கட்டும். இந்த சத்சரிதம் எல்லோருடைய இல்லங்களிலும் இருந்து தினசரி பாராயணம் செய்யப்படட்டும். இதைத் தினமும் முறையாகப் படிப்பவர்களின் துயரங்களைத் தீருங்கள்".
பலஸ்ருதி (பாராயண பலன்):-
இச்சரிதம் படிப்பதால் நீங்கள் பெறும் நலன்களைப் பற்றிச் சில வார்த்தைகள். புனித கோதாவரி நதியில் குளித்துவிட்டு ஷீர்டியில் உள்ள சமாதி மந்திரிலுள்ள பாபாவின் சமாதியை வணங்கித் தரிசித்து இந்த சத்சரிதத்தைப் படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும். இதைச் செய்தால் உங்கள் உடல், பொருள், ஆவியைத் தாக்கும் தீங்குகள் மறையும். தற்செயலாக சாயியின் கதைகளை நினைப்பதன் மூலம், உங்களை அறியாமலேயே நீங்கள் ஆன்மிக வாழ்வில் விருப்பம் கொள்வீர்கள். இச்சரிதத்தை ஆர்வமுடனும், பக்தியுடனும் படிப்பதால் உங்கள் பாவங்கள் அழிக்கபபடும். ஜனன மரணச் சுழலை ஒழிக்க நீங்கள் விரும்பினால் சாயியின் சரிதங்களைப் பாராயணம் செய்து, அவரை நினைத்து அவரது திருவடிகளில் உங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாயி சரித சாகரத்தில் மூழ்கி மேலெழுந்து அதன் இன்பத்தை மற்றவர்களுக்குக் கூறும்போது அவற்றின் புதுப்புது நித்ய சுகந்தத்தை உணர்ந்து மற்றவர்களையும் தொல்லைகளிலிருந்து காப்பீர்கள்.
சாயியின் உருவையே நீங்கள் தொடர்ந்து தியானித்தால் நாளடைவில் உருவம் மறைந்து உங்கள் தன்னுணர்விலேயே கலந்துவிடும். தன்னையறிதலும், பிரம்மத்தை உணர்தலும் மிகக் கடினம். ஆனால் சகுண பிரம்மாவாகிய சாயியின் உருவத்தின் மூலம் வழிபட்டால் உங்கள் பிரம்ம உணர்வின் முனேற்றம் எளிதாகும். பக்தனானவன் தன்னை சாயியிடம் பரிபூர்ண சரணாகதியாக்கிவிட்டால் தன்னுடைய தனித்தன்மையை இழந்து ஐக்கியமாகி கடலுடன் நதி சங்கமிப்பது போல் அவருடன் ஒன்றாகிறான். கனவிலோ, உறக்கத்திலோ அல்லது விழித்திருக்கும் நிலையிலோ இவ்வாறு அவருடன் இரண்டறக் கலந்தால், நீங்கள் சம்சார பந்தத்தை ஒழிக்கிறீர்கள். யாராயினும் குளித்துவிட்டு அன்புடனும், உண்மையுடனும் இதை ஒரு வாரத்திருக்குள் படித்தால் அவர்களைப் பிடித்த கேடுகள் மறையும். படிக்கக் கேட்பவர்களுக்கு வரும் அபாயங்களும் நீக்கப்படும்.
இதைப் பாராயணம் செய்து செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், நல்ல வியாபாரிகள் வியாபாரத்தில் வெற்றியையும் அடைவர். உண்மைக்கும், பக்திக்கும் தகுந்தவாறே பலன்களும் அமையும். இவைகளின்றி எவ்விதமான அனுபவமும் இல்லை. இச்சரிதத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும், ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும், செல்வமும், க்ஷேமமும் நல்குவார். கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும். தனது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ, அவன் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும். தொடரும் பிறவிகளில் ஒவ்வொரு பிறவியிலும் எப்போதும் சந்தோஷமாக அவன் சாயியை நினைப்பான். முக்கியமாக குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி, ராமநவமி, நவராத்திரி (பாபா சமாதியான விஜயதசமி) தினங்களில் இச்சரிதம் வீடுகளில் பாராயணம் செய்யப்படவேண்டும். இதைக் கவனமுடன் படித்தால் உங்கள் ஆசைகள் நிறைவேற்றப்படும்.
அவர் பாதகமலங்களை உங்கள் மனத்தால் நினைப்பதால் சம்சார சாகரத்தைச் சுலபமாகக் கடப்பீர்கள். இதைக் கற்பதால் நோயாளிகள் குணமுற்று திடகாத்திரமடைவர். ஏழைகள் செல்வம் அடைவர். கீழ்நிலையில் உள்ளோரும், நசுக்கப்பட்டோரும் உன்னத நிலை பெறுவர். மனம் சலனங்களிலிருந்து விடுபட்டு ஒருநிலைப்படும்.
நல்ல அன்பும், பக்தியுமுள்ள வாசகர்களே, கேட்போரே! உங்களை வணங்குகிறோம். வணங்கி ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். தினமும், மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு ஆவலுடன் படிக்கிறீர்களோ அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குச் சேவை செய்வதில் உதவியாக இருப்போம். இதன் ஆசிரியர், வாசகர் இருவரும் ஒத்துழைத்து உதவிசெய்து மகிழ்ச்சியுற வேண்டும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment