இவ்வத்தியாயத் தொடக்கத்தில் சாயிபாபா குருவா, சத்குருவா என்று யாரோ ஒருவர் ஹேமத்பந்த்தைக் கேட்டார். அக்கேள்விக்கு விடையளிக்குமுகமாக ஹேமத்பந்த் சத்குருவின் லட்சணங்களையும், அடையாளங்களையும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
சத்குருவின் லட்சணங்கள்:-
வேதம், வேதாந்தம் அல்லது சாஸ்திரங்கள் ஆறையும் நமக்குக் கற்பிப்பவர் அல்லது மூச்சைக் கட்டுப்படுத்துபவர், அன்றித் தமது உடம்பில் முத்திரைச் சின்னகளைப் (விஷ்ணுவின் சங்கு சக்கரச் சின்னங்களைப்) பொறித்துக்கொண்டிருப்பவர் அல்லது பிரம்மத்தைப் பற்றி இனிமையாக உபதேசம் செய்பவர், தமது சீடர்களுக்குச் சில மந்திரங்களை உபதேசித்து அதைக் குறிப்பிட்ட முறை ஜெபிக்கச் சொல்லி, குறிப்பிட்ட நிச்சயமான காலத்தில் அதனால் ஏற்படும் பலனைக் காட்டஇயலாதவர், முடிவான தத்துவங்களைத் தனது வார்த்தை ஞானத்தால் அழகாக விளக்கினாலும் தனக்கு எவ்வித சொந்த அனுபவமோ, ஆன்ம உணர்வோ இல்லாதவர் எவரோ ஆகிய இவரெல்லாம் சத்குரு அல்ல.
தனது உபன்யாசத்தால் இகபர இன்பங்களின் மீது வெறுப்புத் தோன்றச்செய்து, ஆன்ம உணர்வில் ஒரு சுவையை அளிப்பவரும், ஆன்ம உணர்வைப்பற்றிய ஏட்டுக்கல்வி, நடைமுறை ஞானம் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவரும் 'சத்குரு' என்று அழைக்கபபடுவற்குத் தகுதி உடையவராகிறார். ஆன்ம உணர்வில் குறைபாடுடைய ஒருவர் அஃதை எங்ஙனம் பிறருக்கு அளிக்கஇயலும்? சத்குரு என்பார் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவர்களுக்குச் சேவைசெய்ய விரும்புகிறார். தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை. அவரைத் தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன் அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன் என்று கருதுகிறார். சத்குருவின் முக்கியமான பண்பு அவர் அமைதியின் உறைவிடம் என்பதே. அவர் அமைதியற்றோ, மனவுளைவுடனோ இருந்ததே இல்லை. கற்றோன் என்ற கர்வம், அவருக்குக் கிடையாது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாவரும் அவருக்கு ஒன்றே.
முந்தைய பிறப்புக்களில் செய்த நற்கருமங்களின் குவியலின் விளைவால் சாயிபாபாவைப் போன்ற சத்குருவைச் சந்தித்து தாம் அவரால் ஆசீர்வதிக்கப்படும் நல்லதிர்ஷ்டத்தைப் பெற்றதாக ஹேமத்பந்த் நினைக்கிறார். தம்முடைய இளமையான காலத்தில்கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை. (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் இருக்கலாம்) அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர் யாருமில்லை, வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை, பதினெட்டாம் வயதிலிருந்தே அவரின் மனக்கட்டுப்பாடு முழுமையானதும், அசாதாரணமானதாகவும் இருந்தது. அப்போது அவர் தனியான இடத்தில் பயமற்று வாழ்ந்தார். எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார். தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார். எனவே ஒருவகையில் அவர்கள்பால் அவர் சார்ந்தவரானார். பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மஹாசமாதியான பின்பு இன்றும் அளித்து வருகிறார்.
பக்தி, நம்பிக்கை என்னும் அகவிளக்கை அவர்கள் ஏற்றி, அன்பெனும் திரியை ஏற்றவேண்டும். அது செய்யப்படும்போது, ஞானம் (ஆன்ம உணர்வு) என்னும் ஜோதி சுடர்விட்டு அதிகமாகப் பிரகாசிக்கும். அன்பில்லாத வெறும் ஞானம் வறண்டது, எவரும் அத்தகைய ஞானத்தை விரும்புவதில்லை. அன்பின்றி திருப்தி ஏற்படுவதில்லை. எனவே நாம் தடையற்ற, எல்லையற்ற, அன்பு உடையவர்களாக வேண்டும். அன்பை எங்ஙனம் நாம் புகழ்வது? அதன்முன் எதுவும் முக்கியமற்றுவிடுகிறது? அன்பின்றி நமது கல்வி, கேள்வி, படிப்பு யாவும் பயனற்றுவிடுகிறது. அன்பு உதயமாகும்போது பக்தி, பற்றின்மை, அமைதி, விடுதலை இவையாவும் அவைகளின் அனைத்துச் செல்வக் களஞ்சியங்களுடன் வருகின்றன. அன்பை அதையடைய ஊக்கத்துடன் விரும்பினாலன்றி, எதைக்கொடுத்தும் பெற இயலாது. எனவே எங்கே உண்மையான ஆர்வமும், ஏக்கமும் இருக்கின்றதோ, கடவுள் தம்மைத்தாமே அவ்விடத்தில் ப்ரதிஷ்டை செய்துகொள்கிறார். அது அன்பை உள்ளடக்கி விடுதலைக்கு ஒரு வழியாகிறது.
இந்த அத்தியாயத்தின் முக்கிய கதைக்கு இப்போது திரும்புவோம். ஒரு ஞானியிடம் ஒரு மனிதன் தூய உள்ளத்துடன் அல்லது அவ்விதமின்றி (கள்ள உள்ளத்துடன்) சென்று அவரின் காலைப் பிடிக்கட்டும். முடிவாக அவன் காப்பாற்றப்படுவது உறதி. இது பின்வரும் கதைகளால் விளக்கப்படுகிறது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment