முந்தைய மூன்று அத்தியாயங்களில் பாபாவின் மறைவைக் குறித்து நாம் விவரித்தோம். அவரது நிலையற்ற ஸ்தூல உருவம் நமது காட்சியிலிருந்து மறைந்ததில் ஐயமில்லை. ஆனால் அவரது அழிவற்ற சூட்சும உருவம் எப்போதும் வாழ்கிறது. அவரது வாழ்நாளில் நடைபெற்ற லீலைகள் இன்றும் பெருமளவில் சொல்லப்பட்டு வருகின்றன. அவர் மறைந்த பின்னரும் அவரது புதியதான லீலைகள் நடைபெற்றன. இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை பாபா எப்போதும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்பதையும், அவர்தம் பக்தர்களுக்கு முன்னைப்போலவே உதவிக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகின்றன. பாபாவின் வாழ்நாளில் அவரது தொடர்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகளே. ஆனால் அவர்களில் எவராவது இவ்வுலகப் பற்றையும், இன்பங்களின் மேல் விருப்பத்தையும் விடாமல் கடவுள்மேல் உள்ளத்தைத் திருப்பவில்லை என்றால் அது அவர்களது துரதிர்ஷ்டமேயாகும். அப்போதும், இப்போதும் தேவை என்னவென்றால் பாபாவின்பால் முழுமனதான பக்தியே. நமது புலன்கள், உறுப்புக்கள், மனம் யாவும் பாபாவை வழிபடுவதில் ஒருங்கிணைத்து அவருக்குச் சேவைபுரிய வேண்டும். வழிபாட்டில் சில உறுப்புக்களை மட்டும் ஈடுபடுத்தி, மற்றவற்றை வேறுபக்கம் செலுத்துவது பயனற்றது. வழிபாடு, தியானம் போன்றவை மனப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்யப்படவேண்டும்.
கற்புறுமாதர் தம் கணவரிடம் கொண்டிருக்கும் அன்பு, சீடன் குருவிடம் கொண்டிருக்கும் அன்புடன் சிலசமயம் ஒப்பிடப்படுகிறது. எனினும் முன்னது குருபக்தியை விட மிகத்தாழ்வானபடியால் இரண்டையும் ஒப்பிட இயலாது. தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது வேறுஎந்த உறவினரோ நம் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய (ஆத்ம உணர்வு பெற) உதவிக்கு வரமாட்டார்கள். நாமே திட்டமிட்டுக்கொண்டு ஆன்ம உணர்வு பெறும் பாதையில் வழிநடக்க வேண்டும். உண்மைக்கும், மாயைக்கும் இடையில் பேதம் கண்டு இகபர இன்பங்களையும் பொருட்களையும் துறந்து, புலன்களையும் மனதையும் அடக்கி முக்தியை அடைவதில் மட்டுமே விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும். மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக நம்மிடமே நமக்குப் பூரண நம்பிக்கை வேண்டும்.
பேதங்கள் உணர பயிற்சி செய்யத்தொடங்கும்போது உலகம் ஒரு மாயை என்றும் நிலையற்றது என்றும் அறிந்து கொள்வதால் உலக ஆசைகள் மீதான பற்று குறைந்து முடிவில் பற்றற்ற நிலையைப் பெறுகிறோம். பிரம்மம் என்பது நமது குருவைத்தவிர வேறல்ல என்றும், அவரே முழு நிச்சயநிலையில் நாம் காணும் அண்டசராசரங்களிலும் வியாபித்து ஆட்கொண்டிருப்பதையும் உணர்ந்து, அவரை எல்லா உயிர்களிடத்திலும் கண்டு வணங்கத் தொடங்குகிறோம். இதுவே கூட்டுப் பிராத்தனை (பஜனை) அல்லது வழிபாடாகும்.
இவ்விதம் குருவாகிய பிரம்மத்தை மனமுருகி வழிபடும்போது நாம் அவர்களுடன், ஒன்றி ஆன்ம உணர்வைப் பெறுகிறோம். சுருக்கமாக, குருவின் நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்துகொண்டு இருப்பதும், அவரைத் தியானிப்பதும் எல்லா ஜீவராசிகளிலும் அவரைக் காணச்செய்து நம்மீது அழியாத பேரின்பத்தைச் சொரிகிறது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment