காகா சாஹேப் தீஷித், சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனது மூத்த மகன் பாபுவுக்கு, நாக்பூரில் பூணூல் திருமணம் நிகழ்த்த நிச்சயித்தார். ஏறக்குறைய அதே தருணம் நானா சாஹேப் சாந்தோர்கர் தமது மூத்த மகனுக்கு குவாலியரில் திருமண வைபவம் நிகழ்த்த நிச்சயித்தார். தீஷித், சாந்தோர்கர் ஆகிய இருவரும் ஷீர்டிக்கு வந்து, இவ்வைபவங்களுக்கு பாபாவை அன்புடன் வரவேற்றனர். தமது பிரதிநிதியாக ஷாமாவை ஏற்றுக்கொள்ளும்படி பாபா அவர்களிடம் கூறினார். அவரே நேரடியாக வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது ஷாமாவை அவர்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவர்களிடம் கூறி காசிக்கும், பிரயாகைக்கும் சென்றபின்பு நாம் ஷாமாவைவிட முன்னாலிருப்போம் என்று கூறினார். இத்தருணம் பாபாவின் மொழிகளைக் குறித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவைகள், அவரின் சர்வ வியாபகத்தைக் காண்பிக்கின்றன.
ஷாமா, பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த வைபவங்கள், விழாக்கள், ஆகியவற்றுக்காக நாக்பூருக்கும், குவாலியருக்கும் சென்றுவிட்டு பின்னர் காசி, பிரயாகை மற்றும் கயாவுக்கும் செல்லத் தீர்மானித்தார். ஆபாகோதேவும் அவருடன் அவருடன் செல்வதாக இருந்தார். இருவரும் முதலில் நாக்பூருக்கு பூணூல் விழாவுக்குச் சென்றனர். காகா சாஹேப் தீஷித், ஷாமாவுக்கு அவரின் செலவுக்காக ரூ.200 கொடுத்தார். பின்னர் அவர்கள் குவாலியருக்குத் திருமண வைபவத்துக்காகச் சென்றனர். அங்கே நானா சாஹேப் சாந்தோர்கர், ஷாமாவுக்கு நூறு ரூபாயும் அவரது சம்பந்தியான ஜடார் நூறு ரூபாயும் கொடுத்தனர். பின்னர் ஷாமா காசி, அயோத்தி முதலிய இடங்களுக்குச் சென்றார். காசியில் ஜடாரின் அழகான லக்ஷ்மி நாராயணர் கோவிலிலும், அயோத்தியில் ராமர் கோவிலிலும் ஜடாரின் மேனேஜரால் நன்கு வரவேற்கப்பட்டார்.
அவர்கள் (ஷாமா, கோதே) அயோத்தியில் இருபத்தொரு நாட்களும், காசியில் இரண்டு மாதங்களும் தங்கினர். பின்னர் அங்கிருந்து கயாவுக்குப் புறப்பட்டனர். கயாவில் பிளேக் பரவியிருக்கிறது என்பதை ரயிலில் அவர்கள் கேள்விப்பட்டு மனக்கிலேசம் அடைந்தனர். இரவில் கயா ஸ்டேஷனில் இறங்கி தர்மசாலையில் தங்கினார்கள். காலையில் கயாவாலா (யாத்திரீகர்களுக்கு உணவும், இருப்பிடமும் அளிக்கும் அந்தணர்) வந்து "யாத்ரீகர்கள் எல்லாம் முன்னரே புறப்பட்டுவிட்டனர். நீங்களும் சீக்கிரம் புறப்படுவது நல்லது" என்றார். ஷாமா தற்செயலாக அவரை கயாவில் பிளேக் இருக்கிறதா என்று வினவினார். இல்லை என்றார் கயாவாலா. "தயவுசெய்து எவ்விதக் கவலையும், பயமுமின்றி வந்து தாங்களே பாருங்கள்" என்றார். பின்னர் அவர்கள் அவருடன் சென்று அவரது இல்லத்தில் தங்கினார்கள். அது பெரிய விசாலமான சத்திரமாகும்.
தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி ஷாமா மிகவும் மகிழ்ந்தார். ஆனால் கட்டிடத்தின் முற்பகுதியில் நடுவே மாட்டப்பட்டிருந்த பாபாவின் பெரிய அழகான சாயி படமே அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தைப் பார்த்ததும் ஷாமாவுக்கு உணர்ச்சி பொங்கியது. "அவர் காசிக்கும், பிரயாகைக்கும் சென்ற பிறகு ஷாமாவுக்கு முன்னதாகவே நாம் அங்கு இருப்போம்" என்ற பாபாவின் மொழிகளை நினைவுகூர்ந்தார். கண்களில் கண்ணீர் பொங்கியது. மயிர்க்கூச்செறிந்து தொண்டை அடித்துத் தேம்பி அழத்தொடங்கினார். அங்கு பிளேக் இருப்பது குறித்துப் பயந்து அதனால் அவர் அழுகிறார் என கயாவாலா நினைத்தார். ஆனால் ஷாமா பாபாவின் படத்தை எங்கிருந்து, எப்போது அவர் பெற்றார் என்று விசாரித்தார். கயாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவருக்கு 200 அல்லது 300 ஏஜெண்டுகள் மன்மாடிலும், புண்தாம்பேயிலும் வேலை செய்வதாகவும், அவர்களிடமிருந்து பாபாவின் புகழைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்.
பின்னர் ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஷீர்டிக்கும் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அங்கு ஷாமாவின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பாபாவின் படத்தை பாபாவின் அனுமதிபெற்று, ஷாமா அவருக்குக் கொடுத்தார். இது அதே படம்தான். இந்த முந்தைய நிகழ்ச்சியை ஷாமா அப்போது நினைவுகூர்ந்தார். முன்னால் தனக்கு பணிவன்பு புரிந்த அதே ஷாமாதான் தனது விருந்தினர் என்று தெரிந்தவுடன் கயாலாவுக்கு மகிழ்ச்சி கரை காணவில்லை. பின்னர் அவர்களிருவரும் அன்பையும், சேவையையும் பரிமாறிக்கொண்டார்கள். மிகமிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர். கயாவாலா அவருக்குச் சரியான ராஜோபசாரம் செய்தார். அவர் பெரும் பணக்காரர். தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து, யானையின் மேல் ஷாமாவை அமரச்செய்து அவரது தேவை, சௌகர்யங்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டார்.
இக்கதையின் நீதியாவது பாபாவின் மொழிகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாகின்றன. தமது அடியவர்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பு எல்லையற்றதாகும். அதை விட்டுவிடுவோம், அவர் எல்லா ஜீவராசிகளையும் கூடச் சமமாக நேசித்தார். ஏனெனில் அவர்கள்பால் தாம் ஒன்றியவராக நினைத்தார். பின்வரும் கதை இதை விளக்குகிறது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment